தமிழ்நாட்டில் மான்கள் பெயரில் உள்ள 241 ஊர்கள்; வரலாற்று ஆய்வில் வெளிவந்த அரிய த...
”கைகளை உயர்த்தி வாழ்த்துங்கள்”- மாற்றுத்திறனாளி மாணவர்களை நெகிழ வைத்த மாவட்ட வருவாய் அலுவலர்
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கான குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் தங்கள் குறைகளை மனுவாக கொடுத்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவர் தியாகராஜன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். பின்னர் தையல் மிஷின் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் விழித்திறன் மற்றும் செவித்திறன் சவாலுடைய பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிப் பாராட்டப்பட்டது பலரது கவனத்தையும் ஈர்த்தது.

தஞ்சாவூர் மேம்பாலத்தில் விழித்திறன் மற்றும் செவித்திறன் சவாலுடையவர்களுக்கான அரசு மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். இவர்கள் படிப்பு மட்டுமின்றி தனித்திறன் உள்ளிட்டவைகளிலும் சாதித்து வருகின்றனர்.
கடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் விழித்திறன் சவாலுடைய மாணவர்களுக்கான பள்ளி அளவில் தனுஷ்ராஜ், ஸ்ரீகுமார், பைரவதர்ஷன் ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர். இதே போல் செவித்திறன் சவாலுடையோருக்கான பள்ளியில் தரண்யா, அனுசுயா உள்ளிட்ட மாணவர்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்து நல்ல மதிப்பெண் பெற்றனர். இவர்களை உற்சாகப்படுத்துவதற்கான முன்னெடுப்பு மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் செய்யப்பட்டது.

அதன்படி நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் அந்த மாணவர்களை அழைத்து சான்றிதழ் வழங்கிப் பாராட்டி வாழ்த்தினார். அப்போது, `படிப்பிற்கு என்ன உதவி தேவைன்னாலும் என்னிடம் கேளுங்கள் செய்து தருகிறேன்' என நம்பிக்கையளிக்கும் விதமாகப் பேசினார். மேலும் அரங்கத்தில் அமர்ந்திருந்த அரசு அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரையும் `கைகளை உயர்த்தி இவர்களை வாழ்த்துங்கள்!' என்றார். அனைவரும் கைகளை உயர்த்தி வாழ்த்த, அங்கிருந்த அந்த மாணவர்களின் அம்மாக்கள் கண்களில் ஆனந்த கண்ணீர்.
தனுஷ்ராஜ் அம்மா தமிழ்ச்செல்வியிடம் பேசினோம், ``நான்காம் வகுப்பு படிக்கும் வரை இவனுக்கு எல்லோரையும் போல் பார்வை நன்றாக இருந்தது. அதன் பிறகு பார்வையில் குறைபாடு ஏற்பட டாக்டர்கிட்ட காட்டினோம். அப்போது இவனுக்கு ஒரு கண்ணில் பார்வை இல்லை எனச் சொன்னார்கள். எனக்கு தலை மேல் இடி விழுந்த மாதிரி இருந்தது. அதன் பிறகு மறுபடியும் இன்னொரு கண்ணிலும் பார்வை இல்லாமல் போச்சு. அதன் பிறகு இவனைக் காட்டாத டாக்டர்கள் இல்லை. கிட்டதட்ட ஆறு ஆபரேஷன் வரை செய்திட்டோம். ஆனால் பார்வை மட்டும் வரலை.

டாக்டர்கள் மட்டுமில்ல கடவுளும் கைவிரிச்ச நிலையில் அழுது புலம்பி தீர்த்த வீட்டுக்குள் முடங்கி கிடந்தவன் தன்னம்பிக்கையுடன் எழுந்து நடக்க ஆரம்பித்தான். பார்வை குறையுடையோர் பள்ளியில் சேர்ந்து படிப்பை தொடர்ந்தான். பத்தாம் வகுப்பில் நல்ல மார்க் எடுத்தான். படிப்பு மட்டுமில்லை மியூசிக்கில் நல்ல ஆர்வம். மியூசிக் கத்துக்கிட்ட கீ போர்டு நல்லா வாசிக்கிறான். படிப்பு தாண்டா நல்ல வாழ்க்கை அமைச்சுக் கொடுக்கும் என்பதை உணர்ந்து படிக்கிறான். இங்கு சான்றிதழ் வழங்கிய மாணவர்கள் விளையாட்டு, பாட்டு பாடுதல் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்திறன் இருக்குது. அவர்களது தனித்திறனை அறிந்து அரசு வழிகாட்டி, ஒரு வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தால் குறையில்லா வாழ்க்கை அவர்களுக்கு அமையும் வாழ்வில் இன்னும் உயர்வார்கள்" என்றார்.