பாஜகவின் வாக்கு திருட்டு துறையாக தோ்தல் ஆணையம் மாறிவிட்டதா?: கார்கே கேள்வி
வாட்ஸ் அப் குழு மூலம் ரத்த தான சேவை: 6000 பேரை காப்பாற்றிய இளைஞர்கள் குழு – சாதித்த சந்துரு குமார்
சமூக சேவையில் 26 வயது சந்துரு குமார் சாதனை
சமூகத்தில் பெரும்பாலானவர்கள் “சேவை செய்ய பணம் இருந்தால் தான் முடியும்” என்று எண்ணுகிறார்கள். ஆனால் 26 வயது இளைஞர் சந்திரு குமார் தனது சேவையால், சேவைக்குப் பணம் தேவையில்லை; மனம் இருந்தால் போதும் என்று நிரூபித்துள்ளார்.
நடுத்தர குடும்பத்தில் பிறந்து, தனது 19 வயதில் ஒரு சிறிய வாட்ஸ் அப் குழு மூலம் ரத்த தான சேவையை தொடங்கிய சந்துரு குமார், இன்று தனது குழுவின் மூலம் 6000-க்கும் மேற்பட்டவர்களுக்கு ரத்தத்தை ஒருங்கிணைத்து வழங்கியுள்ளார்.
இதனை அங்கீகரிக்கும் விதமாக, இவர் இந்த ஆண்டுக்கான சிறந்த சமூக சேவைக்காக முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதை பெற்றுள்ளார். மற்ற இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக இருந்து வரும் சந்துரு குமாரிடம் சேவையைப் பற்றி கேட்டோம்.

சந்துரு குமார் தனது சேவைப் பயணத்தை பற்றி நம்மிடம் பகிர்ந்தார்.
அவர் கூறுகையில், "கடந்த ஆறு வருடங்களாக சமூக சேவையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறேன். என் வாழ்க்கையில் சேவைக்கான பாதை 19 வயதில் ஆரம்பமானது.
அந்த வேளையில் நான் முதல் முறையாக ரத்ததானம் செய்தேன். என் நண்பனின் அம்மாவுக்கு அவசரமாக ரத்தம் தேவைப்பட்டது. அப்போது எதையும் யோசிக்காமல் ரத்தம் கொடுத்தேன்.
சரியான நேரத்தில் ரத்தம் கொடுத்ததனால் அவர் உயிர் காப்பாற்றபட்டார். அந்த உயிர் காப்பாற்றப்பட்டதை நினைத்து அந்தக் குடும்பம் மகிழ்ச்சி அடைந்ததைப் பார்க்கும் தருணமே எனக்கும் அளவில்லா மனநிறைவைத் தந்தது.
சேவை என்பதே வாழ்வின் உயர்ந்த அர்த்தம் என உணர்ந்தேன். அதுவே என்னை தொடர்ந்து ரத்ததான சேவையில் ஈடுபடுத்தியது.
“மனிதம் காப்போம்” குழுவின் தொடக்கமும் வளர்ச்சியும்
தொடக்கத்தில் நான் ஒரு சிறிய வாட்ஸ் அப் குழுவை “மனிதம் காப்போம்” என்ற பெயரில் தொடங்கினேன். அதில் நண்பர்களை சேர்த்து, இரத்த தானம் பற்றிய விழிப்புணர்வை பகிர்ந்து வந்தேன். ஆரம்பத்தில் சிலர், “சின்ன பையன் ஏதோ ஆர்வக்கோளாறில் செய்கிறான்” என்று கருத்து தெரிவித்தனர்.
ஆனால் தொடர்ந்து இரத்த தான விழிப்புணர்வை ஏற்படுத்தி, நண்பர்களை இரத்ததானத்திற்கு முன்வந்து ஏற்படுத்தினேன். பின்னர், நண்பர்களின் நண்பர்கள், உறவினர்கள் என வட்டாரம் விரிந்தது.
முதலில் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அவசர காலங்களில் ரத்தம் தேவைப்படுபவர்களுக்கு உதவத் தொடங்கினோம். பின்னர் புதுச்சேரி, திருவண்ணாமலை பகுதிகளில் சேவை விரிவடைந்தது.
இன்று, தமிழ்நாடு முழுவதும், இந்த குழு 6000-க்கும் மேற்பட்டோருக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அவசர காலங்களில் ரத்தத்தை ஒருங்கிணைத்து வழங்கி வருகிறது.

சமூக சேவையில் 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள்
இன்று எங்கள் குழுவில் 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் உள்ளனர். நாங்கள் அனைவரும் ஒவ்வொரு வேலையிலும் ஈடுபட்டு இருக்கிறோம்; வேலை நேரத்தை பின் வைத்து, மற்ற நேரங்களில் இந்த சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறோம்.
தமிழ்நாட்டில் எங்கு இரத்தம் தேவைப்பட்டாலும், மக்களும் மருத்துவர்களும் எங்களை அணுகுகிறார்கள். இதுவரை 43 ரத்ததான முகாம்களை நடத்தி முடித்துள்ளோம்.
குறிப்பாக அரிய வகை பாம்பே ரத்தம் (ஒரு லட்சம் பேருக்கு ஒருவருக்கு மட்டுமே கிடைக்கும்) தேவைப்படும் சந்தர்ப்பங்களில், தமிழ்நாட்டில் இதுவரை 33 பேருக்கு இதை ஒருங்கிணைத்து வழங்கியுள்ளோம்.
விமானம், ரயில் வழியாக இந்த ரத்தத்தை சரியான நேரத்தில் சென்று கொண்டு சென்று உயிர்களை காப்பாற்றியுள்ளோம்.
பாம்பே ரத்தம்
சமீபத்தில், அரியலூர் மாவட்டத்தில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு பாம்பே ரத்தம் அவசரமாக தேவைப்பட்ட போது, சந்துரு குமார் மற்றும் அவரது குழு உடனடியாக ஏற்பாடு செய்து, பல்லவன் அதிவிரைவு ரயில் மூலம் ரத்தத்தை கொண்டு சென்று வழங்கினர்.
அதன் பின் அந்தக் கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த செயல்பாடு தமிழ்நாடு முழுவதும் குழுவுக்கு பெரும் பாராட்டை பெற்றது.
திருமண நிகழ்ச்சியில் ரத்ததான முகாம்
முதல் முறையாக அவர்கள் திருமண நிகழ்ச்சியில் ரத்ததான முகாம் நடத்தின போது, மணமக்கள் முன்வந்து ரத்தம் கொடுத்தனர். இதனால் தமிழகம் முழுவதும் இரத்த தானம் பற்றிய விழிப்புணர்வு பெரிதும் உயர்ந்தது.
இதோடு மட்டுமல்ல, குழு மரம் நடுதல், ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவி, பேரிடர் நேரங்களில் மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து செயல்பாடு போன்ற சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறது. மேலும், பள்ளிக்கல்வித்துறை மற்றும் காவல் துறையுடன் இணைந்து போதைப்பொருள் எதிர்ப்பு, பெண் குழந்தைகள் பாதுகாப்பு போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது.
இதுவரை 57 பள்ளி மற்றும் கல்லூரிகளில் இளைஞர்களை நல்வழிப்படுத்தும் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர்.

பனை விதை நடும் திட்டம்
தமிழ்நாடு அரசின் ஒரு கோடி பனை விதை நடும் திட்டத்தில் சந்துரு குமார் குழு முழுமையாக ஈடுபட்டது. மாநில ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு, அதிக எண்ணிக்கையில் பனை விதைகள் நட்ட குழுவுக்கு பசுமை முதன்மையாளர் விருது வழங்கப்பட்டது.
வெள்ள நிவாரண உதவி
கடந்த ஆண்டு, விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில், குழு 500 இளைஞர்களைத் திரட்டி, தமிழ்நாடு முழுவதும் உள்ள தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக அத்தியாவசிய பொருள்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியது.
இன்றுவரை குழு 63 விருதுகள் பெற்றுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் சிறந்த ரத்ததான அமைப்புக்கான விருதும் பெற்றுள்ளனர். விருதுகளுக்காக கிடைக்கும் பரிசுத் தொகை அனைத்தையும் சமூக சேவைக்காக பயன்படுத்தி வருகிறார்கள்.
பணம் தேவையில்லை; மனம் வேண்டும்
சமீபத்தில், சந்துரு குமார் மற்றும் அவரது குழு சிறந்த சமூக சேவைக்காக முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது பெற்றனர். இதன் போது கிடைத்த ஒரு லட்ச ரூபாயை முழுமையாக சமூக சேவைக்காகச் செலவிட முடிவு செய்துள்ளனர்.
சாதாரணமாக அவரிடம் கேட்பவர்கள், “உங்கள் பெற்றோர்கள் கூலித் தொழிலாளர்கள், இதவ்வளவு சேவை செய்யப் பணம் எங்கிருந்து வருகிறது?” என. இதற்கு அவர் எப்போதும் ஒரே பதிலை கூறுகிறார்:
"எந்தச் சேவைக்கும் பணம் தேவைப்படும். ஆனால் ரத்த தானம் செய்யப் பணம் தேவையில்லை. உடல்நலம் சரியாகவும், வயது 18 நிறைந்திருந்தால் போதும்.
சேவை செய்ய மனம் இருந்தால் எந்தத் தடையும் இல்லை. நாம் கொடுக்கும் ஒரு யூனிட் ரத்தம் மூன்று பேரின் உயிரை காப்பாற்றும். எந்த செயற்கை முறையாலும் உருவாக்க முடியாதது ரத்தம். எனவே 18 வயது நிரம்பிய எவரும் தாராளமாக ரத்தம் கொடுக்க முன்வர வேண்டும்," எனக் கூறுகிறார்.

எனவே சேவைக்குப் பணம் தேவையில்லை; மனம் இருந்தால் போதும். எனவே நீங்களும் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ரத்த தானம் செய்யுங்கள். ரத்த சேவை செய்ததை அனைவருக்கும் பகிர்வோம். விளம்பரத்திற்காக அல்ல, விழிப்புணர்வுக்காக," என்று இன்றைய இளைஞர்களுக்கு தனது கருத்தினை முன்வைத்தார் விழுப்புரத்தைச் சேர்ந்த சந்துரு குமார்.
உதிரம் கொடுப்போம், உயிர் காப்போம்