"இந்து பையனுக்கும், இஸ்லாமிய பெண்ணுக்கும் காதல் திருமணம் செய்து வைப்பார்களா?" - ...
`350 மி.லி-ல ஒரு உசுர காப்பாத்த முடியும்னா, என்னங்க யோசனை?'- 25 ஆண்டுகளாக ரத்ததானம் செய்யும் இளைஞர்!
ஒருவர் தானமாக கொடுக்கிற ரத்தம் சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், தட்டணுக்கள் என்று பிரிக்கப்பட்டு மூன்று நோயாளிகளைக் காப்பாற்றுகிறது. மனித உடலில் சராசரியாக 5 லிட்டர் ரத்தம் இருக்கும். ரத்ததானத்தின் போது 350 மில்லி லிட்டர் ரத்தம் மட்டுமே பெறப்படுகிறது. ஆண்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறையும், பெண்கள் நான்கு மாதத்திற்கு ஒரு முறையும் ரத்ததானம் செய்யலாம் என்று கூறப்படுகிறது. அப்படிதான் நெல்லையைச் சேர்ந்த அனந்த்ராஜ் என்பவர் 25 ஆண்டுகளாக மூன்று மாதத்திற்கு ஒரு முறை என 60 முறைக்கும் மேலாக ரத்தம் வழங்கி வருகிறார். அவரிடம் இதைப் பற்றி கேட்டபோது,
"2001ஆம் ஆண்டு ஸ்டீபன் என்பவரால் பீஸ் ரத்ததான கழகம் அமைக்கப்பட்டது. அக்கழகத்திலிருந்து ரத்ததானம் வழங்கத் தொடங்கிய நான் இப்போது வரை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரத்ததானம் வழங்கி வருகிறேன்." என்று கூறியபடியே தனது ரத்ததான சான்றிதழ்களைக் காட்டினார்.

``இன்றையக் காலத்தில் மக்கள் இரத்ததானம் செய்வதற்கே பயப்படுகின்றனர். எடுத்துக்காட்டாக பத்து ஆண்டுகளுக்கு முன்பாக என் வாழ்வில் நிகழ்ந்த சம்பவமொன்றைக் கூறுகிறேன். எனக்குத் தெரிந்த ஒருவரை ஒருமுறை ரத்ததானம் செய்வதற்கு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அதன்பிறகு அவரின் பெற்றோர்கள், "என் மகனை எப்படி நீங்கள் ரத்ததானம் செய்ய வைக்கலாம்?" என்று கேட்டுச் சண்டையிட்டனர். பிறகு சண்டையிட்ட அதே நபரின் தாய் ஒரு முறை தன் மகன் விபத்தில் ரத்தத்தை இழக்க ரத்தம் வேண்டி வந்து நின்றார் நாங்களும் கொடுத்தோம்.
அப்போது உணர்ந்தார் அந்த தாய் ரத்தத்தின் மகத்துவத்தை. இதனைப் போலவே சமீபத்தில் ஒரு பெண்ணிற்கு ரத்தம் தேவைப்பட்டது. அப்போது அப்பெண்ணின் தம்பியே ரத்ததானம் செய்வதற்கு முன் வரவில்லை. மனைவிக்குக் கணவர் கொடுக்காத நிகழ்வுகளும் நடந்தேறிக் கொண்டுதான் இருக்கிறது. இது போன்ற சமயங்களில் ரத்த உறவுகள் கட்டாயம் ரத்ததானம் செய்யலாம். தொடர்ந்து ரத்ததானம் செய்ய வேண்டும் இதுவே என் ஆசை"
"இன்றையக் காலத்தில் புரோக்கர்கள் கூடிவிட்டனர். யாருக்கு ரத்தம் தேவைப்படுகிறதோ அவர்களை மட்டுமே தொடர்பு கொள்ளுங்கள். நம் பெயரைச் சொல்லி சிலர் கமிஷன் பார்க்க வாய்ப்புள்ளது. ரத்ததானம் செய்ய நினைத்தால் நோயாளியைப் பார்த்து நீங்கள் ரத்ததானம் செய்யலாம்."

"என்னோடு சேர்ந்து என் நண்பர்களும் ரத்ததானம் செய்து வருகின்றனர். எங்கள் கழகத்திலிருந்து 1300 பேருக்கு ரத்ததானம் செய்துள்ளோம். யாரிடமும் நாங்கள் ஐந்து பைசா வாங்கியது இல்லை. பழங்களோ, பழச்சாறுகளோ தந்தாலும் நோயாளிகளிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு வந்திடுவோம். இதுவே எங்கள் நடைமுறை. எங்கள் நண்பர்களோடு ரத்ததானக் கழகத்திலிருந்து வருடாவருடம் பொங்கல் விழா நிகழ்த்தி ரத்ததானம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறோம். இருப்பதை மற்றவருக்குத் தருகிறோம். அவ்வளவுதான்.
ரத்ததானம் செய்வதால் ஒருவருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. 45 கிலோ எடை கொண்டவர்கள் இதைச் செய்யலாம். மூன்று மாதத்திற்கு ஒரு முறை ரத்ததானம் செய்வதால் மாரடைப்போ, மற்ற நோயோ வராது." என்று கூறியவர்,
"ரத்ததானத்தைப் போலவே கண் தானமும் முக்கியம். அதையும் சிறப்பாகச் செய்ய வேண்டும். 25 வருடங்களாக நண்பர்களோடு சேர்ந்து ரத்ததானம் செய்கிற நாங்கள் கண் தானமும் செய்ய நினைத்துள்ளோம். ஒன்றரை மாதத்திற்கு முன்பாகத்தான் ரத்ததானம் செய்தேன். ரத்ததானம் செய்யுங்கள். நான்கு மாதத்திற்கு ஒரு முறையாவது இதை நீங்கள் செய்ய வேண்டும்." என்று சமூகத்திற்கும், இன்றைய இளைஞர்களுக்கும் தனது கருத்தையும் ஆசையையும் சொல்லி விடைப்பெற்றார் நெல்லையைச் சேர்ந்த அனந்த்ராஜ்.
தானத்தில் சிறந்தது ரத்ததானமும் தான்!
சேவை தொடர வாழ்த்துகள்!!!