''வருத்தமா இருந்தா ஹாரிஸ் ஜெயராஜ் பாட்டு கேப்பேன்'' - மாற்றுத்திறனாளியின் தன்னம்பிக்கை கதை!
பார்வை சவால் கொண்ட மதுரையைச் சேர்ந்த கண்ணன், மடிக்கணினியை அத்தனை லாவகமாகப் பயன்படுத்துகிறார். 2015-ல் நடந்த பத்தாம் வகுப்புத் தேர்வில் மாற்றுத்திறனாளிகளில் 422 மதிப்பெண்கள் வாங்கி தமிழக அளவில் முதலிடம் பிடித்திருக்கிறார்.
தன்னுடைய பார்வை சவால் குறித்த எந்தவித தன்னம்பிக்கைக் குறைவும் கொள்ளாமல் வங்கி ஒன்றில் சேல்ஸ் எக்ஸிகியூட்டிவ் ஆக பணியாற்றுகிற அவரிடம் உரையாடினோம்.

''பிறக்கிறப்போவே பார்வை இல்லாமதான் பிறந்திருக்கேன். ஆனா, அது என்னோட பேரண்ட்ஸுக்குத் தெரியல. நடக்கிற பருவத்துல நான் தடுமாறி விழுறதையும், எதிரே இருக்கிற பொருள் தெரியாம அது மேல போய் முட்டிக்கிறதையும் வெச்சுதான் எனக்கு பார்வையில ஏதோ பிரச்னை இருக்குன்னு தெரிஞ்சிக்கிட்டு, அம்மா சிங்கராணியும் அப்பா சதீஷ்குமாரும் டாக்டர்ஸ்கிட்ட தூக்கிட்டு ஓடியிருக்காங்க.
'எனக்கு ரெட்டினிடிஸ் பிக்மென்டோசா அப்படிங்கிற மரபுவழி குறைபாடு இருக்கிறதாவும், அதுக்கு இன்னிக்கு வரைக்கும் சிகிச்சை எதுவும் கண்டுபிடிக்கப்படலை'ன்னும் டாக்டர்ஸ் சொல்லியிருக்காங்க.
பிறந்ததுல இருந்தே கண் தெரியாததால, அதுக்காக வருத்தப்படணும்னுகூட எனக்குத் தெரியல. சத்தம் மூலமா தெரிஞ்சுக்கிறது, தொட்டு உணர்றது வழியா தெரிஞ்சுக்கிறதுன்னு என்னைச் சுற்றி இருக்கிறவங்களையும் என்னைச் சுற்றி இருக்கிற விஷயங்களையும் தெரிஞ்சுக்கிட்டு வாழ ஆரம்பிச்சேன்.
என் வீட்டை மட்டும் சுற்றிச்சுற்றி விளையாடுவேன். பார்வை சவால் இருக்கிறவங்களுக்கான ஸ்கூல்லதான் படிச்சேன். அதனால, என்னை மாதிரி ஸ்டூடண்ட்ஸுக்கு என்னென்ன ஸ்கில் தேவைப்படுமோ அவற்றையெல்லாம் சொல்லிக் கொடுத்தாங்க.

ஸ்கூல் டேஸ்லேயே நான் லேப் டாப்பை நல்லா பயன்படுத்தக் கத்துக்கிட்டேன். மத்தவங்க கிளாஸ் ரூம்ல பாடம் படிச்சிக்கிட்டு இருக்கிறப்போ நான் மட்டும் கம்யூட்டர் ரூம்லேயே உட்கார்ந்துக்கிட்டு இருப்பேன். அந்தளவுக்கு கம்ப்யூட்டர் எனக்குப் பிடிச்சி இருந்துச்சு. ஸோ, பிளஸ் டூ முடிச்சவுடனே கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, 'உங்களை மாதிரி பார்வை சவால் இருக்கிறவங்க தமிழ், ஆங்கிலம் மாதிரி மொழிப்பாடங்களைத்தவிர, மற்ற சப்ஜெக்ட்ஸ் படிக்க முடியாது'ன்னு சொல்லிட்டாங்க.
அப்போ தான், எனக்கிருக்கிற பார்வை சவாலை நினைச்சு நான் ரொம்ப வருத்தப்பட்டேன். அதுக்கப்புறம் மனசைத் தேத்திக்கிட்டு இளநிலை, முதுநிலை ரெண்டுலேயும் இங்கிலீஷ் லிட் ரேச்சர் படிச்சேன். அதே நேரம் என்னோட கம்ப்யூட்டர் ஸ்கில்லையும் வளர்த்துக்கிட்டே இருந்தேன்.
படிச்சி முடிச்சதும் பிரைவேட் பேங்க்ல சேல்ஸ் எக்ஸிகியூட்டிவ் வேலை கிடைச்சிது. மத்தவங்ககிட்ட பேசுறதே என் வேலையாச்சு. அதை பெஸ்ட்டா செஞ்சேன். ஆனா, எனக்குன்னு ஒரு லேப்டாப் வேலைக்குச் சேர்ந்து பல நாளாகியும் கிடைக்கவே இல்ல. அதுக்காக நான் சும்மா இருந்திடல. என்னோட லேப்டாப்பைக் கொண்டு வந்து யூஸ் பண்ண ஆரம்பிச்சேன். அதைப் பார்த்துட்டு உடனே எனக்கு லேப்டாப் கொடுத்தாங்க'' என்றவர், தான் சந்தித்த சில பிரச்னைகளையும் பகிர்ந்துகொண்டார்.
''சிலர் என்னோட வேலையைப் பார்க்காம, அதுக்கு முன்னாடியே என்னோட பார்வை சவாலை வெச்சு மதிப்பிட்டுடுவாங்க. பேங்க்ல இருந்து வீட்டுக்குப் போக ரேப்பிடோ புக் பண்ணா, வர்ற டிரைவர் 'உங்களால சரியா பணம் கொடுக்க முடியுமா'ன்னு கேட்பாங்க. கொடுக்க முடியும்கிறதால தானே ரேப்பிடோ புக் பண்ணியிருக்கேன்னு யோசிக்க மாட்டாங்க.
சிலர், 'உங்களால எப்படி பேங்க்ல வேலை பார்க்க முடியுது'ன்னும் கேட்டிருக்காங்க. இதெல்லாம் என்னோட சவாலை எனக்கு ஞாபகப்படுத்துற மாதிரி இருந்தாலும், இதுநாள் வரைக்கும் எல்லாத்தையும் தன்னம்பிக்கையா கடந்திட்டுதான் வர்றேன்.
சில நேரம் ரொம்ப வருத்தமா இருந்துச்சுன்னா, ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்களைக் கேட்பேன். எல்லா வருத்தமும் ஓடிப் போயிடும்'' என்று சிரிக்கிறார் கண்ணன்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...