மாவட்ட சுகாதாரத் துறையில் செவிலியர், மருந்தாளுநர் பணிகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
Drishyam 3: "த்ரிஷ்யம் 3 படத்தைப் பணத்திற்காக நாங்கள் உருவாக்கவில்லை" - இயக்குநர் ஜீத்து ஜோசஃப்
ஜீத்து ஜோசப் தற்போது 'த்ரிஷ்யம் 3' படத்திற்கான வேலைகளில் தீவிரமாக இயங்கி வருகிறார்.
சமீபத்திய நிகழ்வு ஒன்றில் ஒரே மாதிரியான படத்தைக் கொடுப்பது அவரை அயர்ச்சியடைய வைத்திருப்பதாகவும், ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கேற்ப எழுதுவது அவருக்குச் சுமையை ஏற்படுத்துவதாகவும் கூறியிருக்கிறார்.

ஜீத்து ஜோசப் பேசும்போது, "படத்தின் கிளைமாக்ஸில் ட்விஸ்ட் கொடுத்தாக வேண்டும் என்பது ஒரு அழுத்தத்தையும், சுமையையும் கொடுக்கிறது. ஒரே மாதிரியான கதை சொல்லல் முறையும் என்னை அயர்ச்சியடைய வைக்கிறது.
இப்போது 'த்ரிஷ்யம் 3' பழைய பார்முலாவைப் பின்பற்றியதாக இருக்காது. வெவ்வேறு வடிவங்களிலான படங்களை இயக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை.
அதன் மீதுதான் என்னுடைய ஆர்வமும் இருக்கிறது. 'த்ரிஷ்யம் 3' படத்தைப் பணத்திற்காக நாங்கள் உருவாக்கவில்லை. முதல் பாகத்தில் படத்தின் கதை முடிந்தது என்றுதான் நான் நினைத்தேன்.
ஆனால், அடுத்த சில ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் எடுப்பதற்கான கோரிக்கைகளையும் பலர் முன் வைத்தனர். அதன் பிறகுதான் இரண்டாம் பாகம் வந்தது.
இப்போது மூன்றாம் பாகம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இதில் பல ரிஸ்கான விஷயங்களும் இருக்கின்றன. இயக்குநராக மக்கள் என்னிடம் எதிர்பார்க்கும் விஷயங்களும் எனக்கு அழுத்தம் கொடுக்கின்றன.
'த்ரிஷ்யம் 3' கதையை வலுவானதாக மாற்றுவதற்குக் கூடுதல் பக்கங்களை எழுத வேண்டியதாக இருந்தது. என்னுடைய உதவி இயக்குநர்கள் ஒவ்வொருவரும் லாஜிக்குகளைச் சரியாகக் கட்டமைக்கும் பணிகளைக் கவனித்துக் கொள்கிறார்கள்.

நான் மற்ற படங்களைப் பார்க்கும்போது அதில் பல லாஜிக் தவறுகள் இருப்பதைக் கவனிக்கிறேன். ஆனால், என் படங்களுக்கு மட்டுமே சரியான லாஜிக் கேட்கப்படுகிறது. 'த்ரிஷ்யம் 3' வருகிறது.
அதன் பிறகு 'த்ரிஷ்யம் 4' திரைப்படம் வருமா என்பது பற்றி எனக்குத் தெரியாது. மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான கதைகளிலிருந்து விடுபட்டு புதிய கதைகளில் படம் செய்ய விரும்புகிறேன்" என்று கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...