புதுச்சேரியை அதிரவைத்த 10,000 மாணவர்கள் பள்ளி இடைநிற்றல் விவகாரம்! - என்ன சொல்கி...
Kerala: 3.5 சவரன் தங்க செயினை தூக்கிக்கொண்டு பறந்த காகம்; தேடிச்சென்று மீட்ட பொதுமக்கள்!
கேரளவில் பெண்களின் தங்க நகைகளை தூக்கிக்கொண்டு பறக்கும் காகங்களின் தொல்லைகள் அவ்வப்போது நடந்து வருகின்றன. திருச்சூர் மாவட்டம் கைப்பமங்கலம் அருகே உள்ள மதிலகம் பகுதியில் அங்கன்வாடியில் உதவியாளாராக வேலை செய்துவருகிறார் ஷெர்லி.
இவர் நேற்று அங்கன்வாடிக்குச் சென்று தனது மதிய உணப்பொட்டலம் மற்றும் கழுத்தில்கிடந்த மூன்றரை சவரன் தங்க மாலை ஆகியவற்றை படிக்கட்டில் வைத்துவிட்டு முற்றத்தை சுத்தம் செய்துகொண்டிருந்தார். சுத்தம் செய்யும் பணிகள் முடிந்து சென்று பார்த்தபோது மூன்றரை சவரன் மாலை காணாமல் போயிருந்தது. அருகில் இருந்த மதிய உணவுப் பொட்டலம் பிரிக்கப்பட்டு அப்பகுதியில் சிதறிக்கிடந்தது.
தங்க மாலையை காணாததால் ஷெர்லி சத்தமாக அழுது புலம்பினார். அழுகைச்சத்தம் கேட்டு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஓடிச்சென்று ஷெர்லியிடம் நடந்த விபரத்தை கேட்டறிந்தனர். மாலையை யார் எடுத்துச் சென்றிருப்பார்கள் என நினைத்து அப்பகுதியில் தேடினர். அப்போது காகம் தங்க மாலை போன்ற ஒன்றை தூக்கிச் செல்வதை பார்த்ததாக ஸ்கூல் பஸ்ஸில் குழந்தைககை விடுவதற்காக நின்ற சிலர் தெரிவித்தனர்.

இதையடுத்து அப்பகுதியில் உள்ள மா மரங்களில் பொதுமக்கள் பார்வையை செலுத்தினர். மா மரத்தில் காகம் ஒன்று தங்க மாலையுடன் இருந்ததை பார்த்தனர். அனைவரும் சத்தம்போட்ட பின்னும் காகம் அங்கிருந்து செல்லவில்லை. ஒருவர் கீழே கிடந்த கல்லை எடுத்து மரத்தில் எறிந்ததும் காகம் பறந்தது. மக்கள் சத்தம் போட்டு துரத்தியதும் தங்க மாலையை கீழே போட்டுவிட்டு தொடர்ந்து காகம் பறந்தது. மாலை கிடைத்ததும் ஷெர்லி மகிழ்ச்சி அடைந்தார்.
மலப்புறம் மாவட்டம் மஞ்சேரிக்கு அருகிலுள்ள திரிக்கலங்கோடு பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ருக்மணி என்ற பெண்மணி தனது வீட்டின் முற்றத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்போது அவரது கையில் அணிந்திருந்த 1.5 சவரன் தங்க வளையலை அருகில் கழற்றி வைத்துள்ளார். எதிர்பாராத விதமாக காகம் ஒன்று வளையலை தூக்கிச் சென்றது.
எங்கு தேடியும் வளையல் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள மாமரத்தில் காகங்களின் கூட்டில் இருந்து எச்சங்களுடன் தங்க வளையலும் கடந்த மாதம் விழுந்து கிடந்துள்ளது.
மாம்பழம் சேகரிக்கச் சென்ற அன்வர் என்பவரது மகள் கீழே கிடந்த தங்க வளையலை தந்தையிடம் ஒப்படைத்த நிலையில், அது மீண்டும் ருக்மணியிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் நடந்தது பேசுபொருளானது. இந்த நிலையில், அங்கன்வாடி பணியாளரின் மூன்றரை சவரன் தங்க செயின் காகத்திடம் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.