பழங்குடியின சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை!
பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு இலவச டியூஷன் எடுக்கும் மதுரை தம்பதி!
ஒரு காதல் என்ன செய்யும்…? டூயட் மட்டும் பாடி மகிழாது. அவ்வப்போது புரட்சியையும் நிகழ்த்தும்.
அப்படித்தான் மதுரை ஆனையூர் பகுதியில் சமூகம் மற்றும் பொருளாதாரீதியில் பின்தங்கியுள்ள பள்ளிக்கூட மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, மாலை நேரத்தில் அவர்களுக்கு இலவசமாக டியூஷன் நடத்துகிறார்கள் அருவி - பீட்டர் தம்பதியினர். இவர்களுடைய டியூஷன் சென்டரின் பெயர் 'வெளிவாடா படிப்பகம்.' 'வெளிவாடா' என்கிற வார்த்தை, சாதிக்கு எதிராகப் போராடி உயிர்துறந்த ரோஹித் வேமுலாவுடன் தொடர்புடையது.

இந்தப் படிப்பகத்தில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளிப்பாடங்களை மட்டும் கற்றுத் தராமல், அதோடு சேர்த்து சமத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது; கலைகளில் தேர்ச்சிப்பெற்ற வல்லுநர்களை அழைத்து ஒர்க்ஷாப் நடத்துவது; பாலியல் கல்வி; வாரயிறுதியில் மாணவர்களின் படிப்பு அழுத்தத்தைக் குறைக்க அனிமேஷன் படங்களைத் திரையிடுதல் என, தங்களுடைய மாணவர்களை பட்டைத்தீட்டுகிறார்கள் அருவி - பீட்டர் தம்பதியர். அவர்களிடம் பேசினோம்.
''இந்தப் படிப்பகத்தை தொடங்குறதுக்குக் காரணம் எங்களோட காதல்தாங்க''ன்னு வெட்கம் கலந்த சிரிப்புடன் சொல்ல ஆரம்பித்தார் பீட்டர். ''எனக்கு அருவியை சமூக வலைத்தளம் மூலமாதான் தெரியும். சமூக பிரச்னைகளை எதிர்த்து நிறைய பதிவு போடுவாங்க. ஒருமுறை அவங்களோட பயோவுல பார்க்கிறப்போ அவங்க பர்த்டே அக்டோபர் 15-னு போட்டு இருந்துச்சு. 'என் பர்த்டேவும் அக்டோபர் 15 தான்'னு பேச ஆரம்பிச்சு அப்டியே வைப் செட் ஆகி லவ் ஆயிருச்சு.
அப்புறம் சுயமரியாதைத் திருமணம் பண்ணிக்கிட்டோம். எங்களோட உண்மையான பெயர் சதீஸ்வர், கனிமொழிதான். ஆனா, அவுங்களுக்கு 'அருவி' படம் ரொம்ப பிடிக்கும்கிறதால கனிமொழிங்கிற அவங்க பேரை அருவின்னு மாத்திக்கிட்டாங்க. 'நீ அருவின்னா அந்தப் படத்துல வர பீட்டரா நான் இருந்துக்குறேன்'னு நானும் பேரை மாத்திக்க, இப்போ எங்க நண்பர்கள்ல ஆரம்பிச்சு வேலைபார்க்கிற ஸ்கூல் வரைக்கும் எங்களை எல்லாரும் அருவி, பீட்டர்னுதான் கூப்பிடுறாங்க.''

''நாங்க ரெண்டு பேரும் அரசுப்பள்ளியில் கலை ஆசிரியரா வேலைபார்க்கிறோம். ஆனா, இது அரசாங்க வேலை கிடையாது. ஒரு என்.ஜி.ஓ-வுல இருந்து வேலைபார்க்கிறோம். அதனால, ஆளுக்கு பத்தாயிரம்தான் சம்பளம். நாங்க தினமும் வேலைக்குப் போறப்போ, ஸ்கூலுக்கு போகாம அஞ்சாறுப்பசங்க மரத்தடியில உட்கார்ந்திட்டிருப்பாங்க. அருவிதான் ஒருநாள் அந்தப்பசங்க கிட்டப்போய் பேசினா. 'நீங்க தினமும் ஸ்கூலுக்குப்போனா நாங்க உங்களுக்கு ஸ்நாக்ஸ், பிரியாணி, டிரெஸ் எல்லாம் வாங்கித் தரோம். ஸ்கூல் முடிச்சிட்டு வாங்க. சாயங்காலத்துல டியூஷனும் எடுக்கிறோம்னு சொன்னா.
எனக்கும் அதெல்லாம் சம்மதம்தான். ஆனா, நாங்களே 20 ஆயிரம்தான் வாங்குறோம். அது எங்க வாழ்க்கைக்கே சரியா இருக்கும். அப்புறம் இந்தப்பிள்ளைங்களுக்கு என்ன செய்யுறதுன்னு யோசிச்சேன். ஆனா, அருவி இத செய்யுறதுல உறுதியா இருந்தா. சமூக வலைத்தளங்கள் மூலமா உதவிக் கேட்டோம். உதவியும் கிடைச்சிது. அத வெச்சுதான் இந்தப் படிப்பகம் நடத்துற ரூமுக்கு வாடகை கொடுக்கிறோம்; பசங்களுக்கு கிஃப்ட் வாங்குறோம்'' என்றவரைத் தொடர்ந்தார் அருவி.

''இப்ப இருக்குற சூழல்ல சிறார் குற்றங்கள் அதிகமா நடக்குது. மனிதர்களுக்குள்ள இருக்க பண்புகள் அவங்களோட சமூக குழுக்களால தீர்மானிக்கப்பட்டு திணிக்கப்படுது. அப்படி இருக்கிறப்போ வீட்ல சொல்லித் தரப்படாத அடிப்படை மனிதநேய பண்புகள் பள்ளிக்கூடங்கள்ல சொல்லித் தரப்படணும். ஆனா, அத இப்ப இருக்குற பல ஆசிரியர்கள் பண்றதில்ல. அப்படி வழி தவறுகிற மாணவர்களை ஒழுங்குப்படுத்துறது; போதை பொருள்கள் பற்றிய விழிப்புணர்வு; சாதி மத வேறுபாடுகளை கலைக்க விழிப்புணர்வு; கலைகள் சொல்லித்தர்றது; அரசு சார்பா பாலியல் கல்வி சொல்லித் தர நிபுணர்கள கூட்டிட்டு வந்து கிளாஸ் எடுக்குறது; சரியா எழுத, வாசிக்க வராத குழந்தைகள் சுலபமா கத்துக்கிற மாதிரி ஆக்ட்டிவிட்டீஸ் கொடுக்கிறதுன்னு செஞ்சுக்கிட்டிருக்கோம். இத மூணு வருஷமாத்தான் நடத்திக்கிட்டிருக்கோம். இப்போ எங்ககிட்ட 25-க்கும் மேல மாணவர்கள் படிக்கிறாங்க. எங்க படிப்பகத்துக்கு மதுரையில இன்னும் நிறைய கிளைகள் ஆரம்பிக்கணும்கிற பிளான் இருக்கு. கண்டிப்பா பண்ணுவோம்.
இங்க படிக்கிற மாணவர்கள் கண்டிப்பா நாளைக்கு நல்ல நிலைமைக்கு வருவாங்க; அதிகாரிகளா ஆவாங்க அப்படிங்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கு'' என்று உறுதியாய் பேசுகிற அருவி-பீட்டர் தம்பதிகளுக்கு வாழ்த்துகளைக் கூறினோம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...