மிண்டா தேவி டி-சர்ட் அணிந்து எம்பிக்கள் போராட்டம்! யார் அந்த 124 வயது மூதாட்டி?
நாடாளுமன்ற வளாகத்தில் பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிராக எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எழுப்பியுள்ள வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு மற்றும் பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஆனால், அவைத் தலைவர்கள் மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் நான்கு வாரங்களாக பதாகைகளுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்று நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கணக்கான எம்பிக்கள் கலந்துகொண்டனர்.
இதில், காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் மிண்டா தேவி என்ற பெயர் மற்றும் புகைப்படம் இடம்பெற்ற டி-சர்ட் அணிந்து போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
அந்த டி-சர்ட்டின் பின்புறம் ’124 நாட் அவுட்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
யார் இந்த மிண்டா தேவி?
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட வாக்குத் திருட்டு குற்றச்சாட்டில், பிகாரைச் சேர்ந்த மிண்டா தேவி என்ற பெயர் இடம்பெற்றிருந்தது.
மிண்டா தேவி என்ற 124 வயது மூதாட்டியின் பெயர் சமீபத்தில் வெளியிடப்பட்ட பிகார் வாக்காளர் வரைவு பட்டியலில் தரௌண்டா சட்டப்பேரவை தொகுதியின் கீழ் இடம்பெற்றிருந்தது.
உலகளவில் 115 வயது நபரே வயதானவர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரைவிட 9 வயது பெரியவராக இருக்கும் மிண்டா தேவி என்பவர் எப்படி உயிருடன் இருக்க முடியும் எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
இதுபோன்று, பல வாக்காளர்கள் முறைகேடாக சேர்க்கப்பட்டு, வாக்குத் திருட்டில் பாஜக ஈடுபடுவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தார்.