பசு தேசிய விலங்காக அறிவிப்பா? நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில்!
பசு மாட்டை நாட்டின் தேசிய விலங்காக அறிவிக்க எந்தவொரு திட்டமும் இல்லை என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் தேசிய விலங்கு குறித்து, உத்தரகண்ட் முன்னாள் முதல்வரும், மூத்த பாஜக தலைவருமான திரிவேந்திரா சிங் ராவட் மக்களவையில் கேள்வி எழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து, அந்தக் கேள்விக்கு பதிலளித்து பேசிய மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எஸ்.பி. சிங் பாகேல், பசுவை தேசிய விலங்காக அறிவித்து சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு எந்தவொரு திட்டமும் இல்லை எனக் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது:
“அரசியலமைப்பின் 246 (3) சட்டப்பிரிவின் படி, மத்திய அரசுக்கும், மாநிலங்களுக்கும் இடையிலான சட்டமன்ற அதிகாரப் பகிர்வின் கீழ், விலங்குகளைப் பாதுகாப்பது என்பது மாநில சட்டமன்றத்திற்குச் சட்டம் இயற்றும் அதிகாரமாகும்” என அவர் பேசியுள்ளார்.
இத்துடன், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு நடைமுறைப் படுத்தியுள்ள, ராஷ்டிரிய கோகுல் திட்டத்தின் கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பசுக்களின் பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் 239.20 டன் அளவிலான மொத்த பால் உற்பத்தியில், பசும் பால் மட்டுமே 53.12 சதவிகிதம் இடம்பெற்றுள்ளது என மத்திய அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: உத்தரகண்டில் ரெட் அலர்ட்! வாரம் முழுவதும் மீண்டும் கனமழை தொடரும்.. தயார்நிலையில் ராணுவம்!