தமிழகத்தில் 2 நாள்களுக்கு பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
Human Story: ''அப்போ தேவையில்லாத வேலைன்னு சொன்னாங்க; இப்போ'' - மதுரையில் ஒரு மர நேசன்
பக்கத்துல இருக்கிற மனுஷங்களுக்கு ஒரு நல்லது செய்யுறதுக்கு நேரமில்லாம ஓடிக்கிட்டிருக்கிற நம்ம மத்தியில, உயிர் வாழறதுக்காகப் போராடிக்கிட்டிருக்க மரங்களைக் காப்பாத்திக்கிட்டிருக்கார் மதுரையைச் சேர்ந்த மணிகண்டன்.
இதுதான் உங்க முழு நேர வேலையா; இதுவரைக்கும் எத்தனை மரங்களைக் காப்பாத்தியிருக்கீங்க என்றோம்.

"பேச முடியலன்னாலும் மத்த ஜீவன்கள் சத்தம்போட்டோ, கண்ணீர்விட்டோ அதுங்க கஷ்டத்தைச் சொல்லிடுங்க. ஆனா, மரங்களால அதுவும் செய்ய முடியாதே... மரங்களைச் சுத்தி இருக்கிற கேபிள் வயரும், கம்பி வலையும், டயரும் அதுங்களை வளர விடாம நெருக்கிட்டு இருக்கிறதைப் பார்க்கிறப்போ ரொம்ப கஷ்டமா இருக்கும்.
நான் ஸ்கூல் படிக்கிறப்போ, என்னோட ஆசிரியர் ஒருத்தர் மரங்களுக்கும் வலிக்கும்னு ஒருதடவை சொன்னார். அந்த வார்த்தைதான் மரங்களோட வலியை என்னை உணர வெச்சுதுன்னு சொல்லணும்.
முதல் தடவை என் வீட்டுக்குப் பக்கத்துல இருந்த ஒரு மரத்தைத்தான் காப்பாத்தினேன். அது செடியா இருந்தப்போ பாதுகாப்புக்கு வெச்சிருந்த கம்பி வலையே அது மரமானதுக்கு அப்புறம் நெருக்க ஆரம்பிச்சிடுச்சு. அந்தக் கம்பி வலையை கட் பண்ணி எடுக்கிறதுக்கு அப்போ என் கையில எந்த உபகரணமும் இல்ல. ஆனாலும், என் கையாலேயே அந்தக் கம்பி வலையை அப்புறப்படுத்தினேன்.
அன்னிக்கு மனசுக்கு ரொம்ப நிம்மதியா இருந்துச்சு. அதுக்கப்புறம் எங்கெல்லாம் இந்த மாதிரி மரங்கள் வளர முடியாம நெருக்கிட்டு இருக்கோ அங்கெல்லாம் நேரா போய், அந்த மரங்களை விடுவிக்க ஆரம்பிச்சேன். அப்போ, நிறைய பேர் 'பொழைப்பைப் பார்க்காம தேவையில்லாத வேலை பார்த்துக்கிட்டிருக்கா'ன்னு கிண்டல் பண்ணாங்க. ஆனா, அதையெல்லாம் நான் பெருசா எடுத்துக்கல.
இப்போ அவங்களும் என்னோட சேர்ந்து நெருக்கப்படுற மரங்களைக் காப்பாத்திட்டிருக்காங்க'' என்றவரிடம், நீங்க என்ன வேலைபார்க்கிறீங்க என்றோம்.

''நான் இரும்புப்பட்டறை வெச்சிருக்கேன். அது என்னைக் காப்பாத்திக்க... மரங்களைக் காப்பாத்த நவீன உபகரணங்களெல்லாம் சொந்தக்காசைப் போட்டு வாங்கி வெச்சிருக்கேன். இது என் மனசு நிம்மதிக்கு. மரம் சின்னதா இருந்தா நான் மட்டுமே போய் சரி செஞ்சிடுவேன்.
பெரிய மரமாக இருந்தா என் ஃப்ரெண்ட்ஸையும் கூட்டிட்டுப் போவேன். இப்படி மரங்களைக் காப்பாத்துறதை வீடியோவா எடுத்து என் சோஷியல் மீடியாவுல போடுவேன். அதைப் பார்த்துட்டு, 'எங்க ஏரியாவுலேயும் நிறைய மரங்கள் கம்பி வலையில நெருக்கிட்டு இருக்கு. கொஞ்சம் வந்து சரி பண்ணிட்டுப்போங்க'ன்னு சொல்வாங்க. நானும் போவேன்.
இப்போ சிலர், அவங்க ஏரியாவுல கேபிள் ஒயர்லேயும், டயர்லேயும் மாட்டிக்கிட்டு இருக்கிற மரங்களை விடுவிச்சு, எனக்கு வீடியோ எடுத்து அனுப்புறாங்க'' என்றவர், ஒரு புங்கை மரத்தைக் காப்பாத்தி அதுக்கு அப்துல் கலாம்னு பேர் வெச்ச கதையைப் பகிர்ந்துக்கிட்டார்.
''கடந்த மூணு வருஷமா கிட்டத்தட்ட ஆயிரம் மரங்களையாவது நான் காப்பாத்தியிருப்பேன். இதுல மதுரை நெடுஞ்சாலை ஓரத்துல இருந்த ஒரு புங்க மரத்தைக் காப்பாத்த பட்டப்பாட்டை என்னால மறக்கவே முடியாது. அந்த மரத்தோட அடிப்பகுதியைச் சுத்தி கான்கிரீட் கலவையைக் கொட்டி வெச்சிருந்தாங்க.
அதனால, மரத்தோட வளர்ச்சி மொத்தமா பாதிக்கப்பட்டிருந்துச்சு. அந்த கான்கிரீட் கலவையை மொத்த உடைச்சி எடுக்கிறதுக்கு மூணு நாள் ஆச்சு. கடுமையான போராட்டங்களைச் சந்திச்சாலும் உயிரோட மீண்டு வந்ததால அந்த மரத்துக்கு அப்துல் கலாம் மரம்னு பேர் வெச்சோம்.

என் கடைசி மூச்சு வரைக்கும் நெருக்கப்பட்டுக் கிடக்கிற மரங்களை நான் காப்பாத்துவேன் தம்பி. ஏன்னா, மரங்களை நான் ஓர் உயிராத்தான் பார்க்கிறேன்'' என்கிறார் மணிகண்டன்.
மர நேசன்!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...