செய்திகள் :

`இலக்கு' - சவால்களில் இருந்து சாதனைக்குப் பயணிக்கும் பார்வைச் சவால் மாற்றுத்திறனாளி | அனுபவ பகிர்வு

post image

பார்வை சவால் மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கையில், தினசரி பணிகளைச் செய்வதில் உள்ள சவால்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உள்ள தடைகள், சமூகத்தில் பாகுபாடு, பொருளாதரப் போராட்டங்கள் மற்றும் மன ஆரோக்கிய சவால்கள் குறித்து, பார்வைச் சவால் மாற்றுத்திறனாளி இளைஞர் முத்துக்குமார் நம்மிடம் அவரது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

மேலும், தொழில்நுட்பங்கள், அவர்களுக்காக கல்வி மற்றும் வேலைவாய்ப்பு, சமூகப் புரிதல் அதிகரிப்பு போன்றவை அவர்களின் வாழ்க்கையை எப்படி மேம்படுதுகிறது என்பதையும் கூறினார்.

திருநெல்வேலி பேருந்து நிலையத்தில், கீழமுன்னிர்ப்பள்ளத்தைச் சேர்ந்த முத்துக்குமார் நம்மிடம் பேசியதாவது:

திருநெல்வேலி, கீழமுன்னிர்ப்பள்ளம்என் ஊர், எனக்கு 13 வயது வரைக்கும் பார்வை நல்லா இருந்தது. அரசு பள்ளியில்தான் ஏழாம் வகுப்பு வரை படித்தேன். சின்ன வயசுலயே கண்ணாடி அணிந்திருந்தேன். அப்புறம் கொஞ்ச நாளில் பார்வை சரியா தெரியல. அறுவை சிகிச்சையும் செய்தோம், எதுவும் சரியாக வரல. நரம்பு பிரச்னையும், ரெட்டினா பிராப்ளமும் இருக்கிறதுனால பழைய பார்வையை மீட்டெடுக்கிறது கஷ்டம்னு சொன்னார்கள்.

பையனை ஸ்பெஷல் ஸ்கூல்ல படிக்க வச்சா, பையனோட லைஃப் நல்லா இருக்கும் என்று டாக்டர்கள் சொன்னார்கள்.

அப்பா முருகன், அம்மா சந்தனமாரி முயற்சியில், பாளையங்கோட்டை அண்ணா ஸ்டேடியம் பக்கத்துல உள்ள ஸ்பெஷல் ஸ்கூல்ல 8 முதல் 10 ஆம் வகுப்பு வரை (2005-2007) வரை படித்தேன்.

அதன் பிறகு சென்னை அடையாறுல சென் லூயிஸ் இன்ஸ்டிடியூட்ல 11, 12-ஆம் வகுப்பு படித்தேன். பிறகு பி.ஏ இங்கிலீஷ் பாளையங்கோட்டை ஜான்ஸ் காலேஜ்லவும், பி.எட், எம்.எட் தஞ்சாவூர் பக்கத்துல புதுக்கோட்டை கவர்ன்மென்ட் காலேஜ் ஆப் எஜுகேஷன்ல படித்தேன்.

எம்.ஏ-வும் செய்தேன். கடைசியாக இப்போது ஃபைனலியாக எல்.எல்.பி படிக்கிறேன்.

பி.ஏ முடித்தபோது பார்வை இல்லாதவர்களாகிய நம்ம மாதிரி மக்கள் என்ன மாதிரி பார்ட் டைம் ஜாப் செய்யலாம் என்று தேடிக்கொண்டிருந்தபோது, என் சீனியர்ஸ்கிட்ட கன்சல்ட் பண்ணும்போது – தொலைபேசி அழைப்பாளர்கள் வேலை ரொம்ப எளிமையா இருக்கும் என்று சொன்னார்கள்.

அதனால் மதுரையிலுள்ள இந்தியன் அசோசியேஷன் ஃபார் பிளைன்ட், சுந்தர்ராஜன் பட்டியில இருக்கிற இடத்துக்கு ஜாயின் பண்ணி டெலிகாலிங் ஸ்கில் டெவலப் பண்ணினேன். 2018-ல் திருமணம் ஆன பிறகு, திருநெல்வேலில தொலைபேசி அழைப்பாளர் வேலை எங்க இருக்குன்னு தேடி, பெங்களூர்ல ஆறு மாத கம்ப்யூட்டர் ட்ரெயினிங் கற்று டெலிகாலிங் வேலையை ஆரம்பித்தேன்.

education

பெங்களூர்ல நான் படித்த கோர்ஸ் ரொம்ப உதவியாக இருந்தது. அதன் மூலமாதான் இன்னைக்கு நான் வேலை செய்கிறேன். டெக்னாலஜி நாலேஜ் இருந்தால் நாம ஆக்சுவல் லைஃபோட சேர்ந்து வாழ்வது எளிது. டெலிகாலிங்ல ப்ராடக்ட் மற்றும் சர்வீஸ்ன்னு ரெண்டு வகை இருக்கு. ஒன்று ப்ராடக்ட் ப்ரொமோட் பண்ணுவது, மற்றொன்று சர்வீஸ். நான் இப்போது பண்ணுவது DTH செட்டாப் பாக்ஸ் சம்பந்தப்பட்ட வேலை. இந்தியா முழுவதும் அதுக்கான ஆர்டரை நாம கிரியேட் பண்ணலாம். சர்வீஸ் டீம், சேல்ஸ் டீம் – இப்படி இரண்டு டீம்கள் உண்டு. சர்வீஸ் டீம்ல, ஏதேனும் கோச்சிங் சென்டர்ல இருந்து மாணவர்களோட டேட்டா வாங்கி, அவங்களை அழைத்து பேசுற வேலைகளையும் செய்கிறேன்.

நிறைய ப்ராடக்ட்ஸ் விற்பனை செய்றீங்களே?

எனக்குத் தேவையான எதுவோ அதைத் தேடித் தேடி நான் போவேன்.
உதாரணமாக, நான் ஒரு பெர்ஃப்யூம் பயன்படுத்தினால், அந்த வாசனை பிடித்துக் கொண்டு அதைப் பற்றி என் நண்பர்கள் கேட்பார்கள்.
இப்படியே போய்கொண்டிருக்கும்போது, ஒரு நாள் "இதைக் கொண்டு சேல்ஸ் பண்ணலாமே" என்று நண்பர்கள் சொன்னதுதான், நான் சேல்ஸ் செய்ய ஆரம்பித்த காரணம்.

இப்போது நான் வாங்கும் பெர்ஃப்யூமும் மதுரையில் ஒரு மாற்றுத்திறனாளியிடம் இருந்துதான் வாங்குகிறேன்.
அப்போ நான் வாங்குவதால் அவருக்கும் அது சேல்ஸ் ஆகிறது, எனக்கும் அதனால் பயன் கிடைக்கிறது.

பார்வைச் சவால் மாற்றுத்திறனாளி | அனுபவ பகிர்வு

என்னுடைய மாற்றுத்திறனாளி நண்பர்களுக்கு அது பயனுள்ளதா என்பதை முதலில் கவனிப்பேன்.
பிசினஸ் பொறுத்தவரை ஒரு ரூபாயாயினும் அது எனக்கு லாபம் தான்.
ப்ராடக்ட்டை உற்பத்தி செய்யவில்லை; ப்ரமோட் செய்கிறோம்.

உற்பத்தி செய்வதற்கு சிக்கல் இருக்கிறது… முழுவதும் குடும்பத்தினர் நமக்கு சப்போர்ட் செய்ய முடியாது.
அதனால்தான் ப்ராடக்ட் சேல்ஸ்மட்டுமே செய்கிறேன்.

சின்ன அளவில்தான் பிசினஸ் செய்கிறேன்.
பெர்ஃப்யூம், கைகால் வலி தைலம், ஆயுர்வேத சோப்புகள் போன்றவற்றை வாங்கி விற்பனை செய்கிறேன்.

Marketing Challenge

மார்க்கெட்டிங் சவால்


மார்க்கெட்டிங் ஃபீல்டில் உள்ள பெரிய பிரச்சனையே டார்கெட்டிங் தான். டார்கெட் இல்லாமல் இங்கு எதையும் செய்ய முடியாது.
மார்க்கெட்டிங்கில் டார்கெட்டைப் பார்த்து பயப்படவே கூடாது. நம்மால் எவ்வளவு பெஸ்ட் கொடுக்க முடிகிறதோ அதை கம்பெனி ஏற்றுக்கொள்கிறது.

ஆனா, ப்ராடக்ட் சேல் ஆனால்தான் ப்ராஃபிட். இன்று நான் கால் பண்ணி ப்ராடக்ட் சேல் ஆகாவிட்டாலும் அந்த கால் வீணாகாது. தேவைப்படும்போது அவர்களே நமக்கு கால் பண்ணுவார்கள்.
நிறைய இந்த மாதிரி அழைப்புகள் வந்திருக்கின்றன.

நாம் இன்புட் கொடுத்தால் கண்டிப்பாக அவுட்புட் கிடைக்கும்.
CSR-இல் டெலிகாலிங் ஜாப் கிடைத்ததால் நாம சேல்ஸ் காட்டவேண்டும். அது சராசரியாக (Average) தான் இருக்கும்.

இப்போது செட்டப் பாக்ஸுக்கு ஒரு கனெக்ஷனுக்கு ரூ.250 முதல் ரூ.400 வரை கிடைக்கும். ஆரம்பத்தில் குறைவாக இருக்கும்.
ஆனால், நான் இதை 7 வருடங்களாகச் செய்து வருவதால் மாதம் ரூ.15,000 அதிலிருந்தே கிடைத்துவிடும்.

அதோடு, நான் சேல்ஸ் செய்வதால் வாழ்க்கை அஃபார்டபிள் ஆக இருக்கிறது. எனக்கு மாதம் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கிறது.

Professional Ethics

அப்பாவிடம் கற்றது

என் அப்பாவிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட முக்கியமான விஷயம்: நமக்கு ஜாப் நிம்மதியைக் கொடுக்க வேண்டும்.

என் அப்பா ஒரு சமையல் மாஸ்டராக இருந்தார். அவர்கள் சொல்லுவார்கள்:
"லாபம் எதிர்பார்த்து நம்மால் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். ஆனா கொஞ்சம் புண்ணியமும் வேண்டுமே!"

அது எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது.

என்னுடைய கஸ்டமர்களுக்கு நான் சரியாக எல்லாவற்றையும் செய்து கொடுத்தால், அதேதான் சேல்ஸுக்கும் பொருந்தும்.
ஏனெனில், ப்ரொபஷனல் எத்திக்ஸ் (Professional Ethics) என்ற ஒன்று இருக்கிறது அல்லவா!

படிக்கின்ற போது ஏற்பட்ட பிரச்னைகள்?

"பார்வை இருக்கும்போது என் வயசில் பார்வை இல்லாதவர்களை பார்த்ததில்லை. ஸ்பெஷல் ஸ்கூல் போனபோது தான் நிறைய பேரைப் பார்த்தேன். பார்வை இல்லாதவர்கள் தடுமாறும்போது எனக்கும் அந்த தடுமாற்றம் வந்தது. பிறகு ஸ்பெஷல் ட்ரெயினிங்கில்தான் என் திறமையை வளர்த்தேன்.

பார்வை இல்லாதவர்களுக்கு பிரெயில் மெத்தட் மூலம்தான் வாசிக்க முடியும். அது கொஞ்சம் கஷ்டம்தான். அப்போது ஆடியோ புக்க்ஸும் இருந்தது, பிறர் வாசித்துக் கொடுத்ததும் கேட்க முடியும். டேப் ரெக்கார்டரில் ஒருவரும் வாசித்துக் கொடுத்தபோது எனக்கு எந்த கவலையும் இருக்கவில்லை.

படிப்பதில் பிரச்சனை இல்லை என்று உணரத் தொடங்கியபிறகு எனக்கு ஒரு நம்பிக்கை (Hope) கிடைத்தது – படித்து முன்னேறலாமே என்று. ஸ்பெஷல் ஸ்கூல்ல இருந்த ஸ்பெஷல் டீச்சர்கள் என்னை நல்லா கவனித்தார்கள்.

படிப்பு மட்டும் இல்லாமல் விளையாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டி ஆகியவற்றிலும் கலந்துகொண்டேன். காலேஜ் போனபோது நான் மட்டும்தான் பார்வையில்லாதவன். புதிய ஸ்டூடன்ஸ்க்கு காலேஜ் வேற மாதிரி இருக்கும்; எனக்கும் அதே மாதிரி இருந்தது.

ஆனா, நாம அவர்களோடு நல்லா பழகினோம் என்றால் நாமே அவர்களுக்கு ஹெல்ப்ஃபுல் ஆக இருக்க முடியும். காலேஜிலும் ஆடியோ மெத்தட் மூலம்தான் படித்தேன். பி.எட், எம்.எட் படித்துக்கொண்டிருந்தபோது ஆண்ட்ராய்டு போன் வந்தது. அது இன்னும் அதிகமாக ஹெல்ப்ஃபுல் இருந்தது. அதன் பிறகுதான் சட்டம் படிக்க வேண்டும் என்ற ஐடியா வந்தது.

நம்ம கையில் படிக்க வாய்ப்பும் வசதியும் இருக்கையில், நாம ஏன் அதை விட்டு விட வேண்டும்? படிக்கணும் என்ற ஆர்வம் எனக்கு இருக்கு."

Professional Ethics

உங்கள் குடும்பம் பற்றி?

"எனக்கு ஒரு மகனும் மனைவியும் இருக்கிறார்கள். அப்பா சமீபத்தில்தான் இறந்தார். அப்பாவின் இழப்பு மிகவும் கஷ்டமாக இருந்தது. படிப்பிற்கு உறுதுணையாக அவர் இருந்தார்.

மனைவிக்கும் பார்வை குறைவு. அவரும் பி.ஏ, பி.எட் படித்திருக்கிறார். என்னோடு டெலிகாலிங் வேலையைச் சேர்ந்தே பார்த்துக்கொள்கிறார்.

மகன் இரண்டாம் வகுப்பு அரசு பள்ளியில்தான் படிக்கிறான். வீடு சொந்த வீடு. எதிர்காலத்தில் நல்லா சம்பாதித்து நாம நாலு பேருக்கே ஹெல்ப் பண்ணிக் கொள்ளலாம்.

இப்பவே நான் நிறைய பேருக்கு ஹெல்ப் பண்ணும் மாதிரி கைடன்ஸ் அண்ட் கவுன்சிலிங் துறையிலும் இருக்கிறேன்."

மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்?

"முன்பு அவர்கள் படிக்க கஷ்டப்பட்டார்கள், இப்போது அப்படி இல்லை. ஆனால், கிராமத்து மக்களுக்கு விழிப்புணர்வு போய் சேர வேண்டும். எனக்கே பார்வை குறைந்தபோது இவனை வீட்டிலேயே வைத்து பாத்துக்கோங்க, இல்லையென்றால் மதம் மாத்திடுவாங்க என்று சொல்லுவார்கள்.

ஏனெனில் எங்களுக்கான ஸ்பெஷல் இன்ஸ்டிட்யூஷன்கள் எல்லாம் தெற்கில் கிறிஸ்தவ இன்ஸ்டிட்யூஷன்கள்தான் நடத்துகின்றன.

என் அம்மா அப்பாதான் உறுதுணையாக இருந்தார்கள். அடிப்படைக் கல்வி மாற்றுத்திறனாளிகளோடு சேர்ந்து படிப்பதே நல்லது. பார்வையற்ற பள்ளிதான் எல்லா ஸ்கில்களையும் கற்றுக் கொடுக்கும்."

பார்வைச் சவால் மாற்றுத்திறனாளி | அனுபவ பகிர்வு

மாற்றுத்திறனாளிகளின் இன்றைய பணிவாய்ப்பு பற்றி?

"நமக்கு அரசு தேர்வு எழுதினால் தான் பணிவாய்ப்பு கிடைக்கும்; இல்லையென்றால் தனியார் துறையில் வேலை கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் வேலை எப்படிக் கிடைக்க வேண்டும் என்பதுதான் தெரியவில்லை.

அவங்களுக்காக நான் என்னோடு சேர்ந்த பிற மாற்றுத்திறனாளிகளை எல்லாம் சேர்த்தேன். என்னோட சீனியர்ஸ் எல்லாம் காலேஜில் படிக்க கોર્ટ்டில் ஆடர் வாங்கியதுதான் என்று சொல்லுவார்கள். 1980, 85-இல் இந்த பிரச்சனைகள் இருந்தன.

இப்போது எங்களுக்கு தேர்வு எழுத ஸ்க்ரைப் தேவை. ஆனால் அதிகபட்சம் ஸ்க்ரைப் நாமே ஏற்பாடு பண்ணிக்கொள்ளச் சொல்வார்கள்.

என்னோட பேக்ரவுண்டைப் பார்த்தால், நான்தான் பர்ஸ்ட் கிராஜுவேட். சொந்தக்காரர்களுக்கும் கல்வி குறித்த விழிப்புணர்வு இல்லை.

பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்க்ரைப் வசதி செய்து கொடுத்தால் நல்லது. உதாரணமாக, நான் காமன்வெல்த் லிட்டரேச்சர் என்ற பாடம் படிக்கிறேன். எனக்கு ஸ்க்ரைப்பாக வருபவர்களுக்கு அதைப் பற்றித் தெரியாது. ஆனால், மாற்றுத்திறனாளி அல்லாத மாணவர்கள் நாலேஜோடு அந்த தேர்வை எழுதுகிறார்கள்.

அதே மாதிரி டைமிங்கும் மாற்றுத்திறனாளிகளுக்குப் பிளஸ் கொடுக்கலாம்."

"நான் சட்டம் படித்தது எனக்கு சரியான Guidance and Counselling கிடைக்காததால்தான். அதேபோல சில இடங்களில் எங்களுக்கான சலுகையைக் கேட்டுப் பெற நினைக்கும்போது, அப்படி ஒன்று இல்லை என்று சொல்லிவிடுவார்கள். அதனால்தான் சட்டம் படித்தேன். சின்ன வயதிலிருந்தே சட்டம் படிப்பதற்கான ஆர்வம் இருந்தது.

அதேபோல முதலில் Telecalling Work ஆபீஸில்தான் பார்த்தேன். கொரோனாவுக்குப் பிறகு வீட்டிலிருந்தே வேலை பார்த்தபோது, சட்டம் படிக்க நினைத்தேன். சட்ட விழிப்புணர்வு இங்கே எல்லோருக்கும் தேவை. சின்ன விஷயங்களுக்கும் நிறைய சட்டங்கள் இருக்கின்றன. என்னுடைய சமூகத்துக்கு நான் உதவியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே சட்டம் படித்தேன்."

உங்களுடைய தினசரி வாழ்க்கை எப்படி?

"முதலில் நான் வெளியே போகும்போது என்ன பஸ் ஏறுவதற்காக அம்மாவோ, அப்பாவோ, மனைவியோ வந்து விடுவார்கள். ஆனா, பிறகு நானே போக ஆரம்பித்தேன். அப்படி ஒருமுறை ஒரு மழைக்காலத்தில் ரோட்டில் நடந்து போகும்போது ஓரத்தில் மழைத் தண்ணீர் இருந்தது. பின்னால் வண்டி வந்தது. உடனே அதைக் கவனித்து ஓரமாக நின்றேன்.

ஆனா எங்கள் ஊரில ஒரு பெண் அதை பார்த்துட்டு என் வீட்டுக்குப் போய் ‘உங்க பையன் ரோட்டில தனியா தவிச்சிட்டு இருக்கான்’ன்னு சொல்லிட்டாங்க. இப்படி நிறைய பேரு வந்து அம்மா அப்பாவிடம் தவறாகச் சொல்லுவார்கள். ஆனா, என் அம்மாவும் அப்பாவும் ‘நாங்க இல்லாத காலத்தில் அவனை அவன்தான் பார்த்துக்கணும்’ன்னு சொல்லி அவர்களின் வாய் மூடிவிடுவார்கள்."

"நாங்கள் ஒரு கடைக்குப் போனால்கூட யாசகம் கேட்க வருகிறோம் என்று நினைத்து, ‘ஒன்னும் இல்லை’ன்னு சொல்லி அனுப்பிவிடுவார்கள். ஆனா நாங்கள் கடைக்கு போவது பொருள் வாங்குவதற்காகத்தான் இருக்கும். நான் நீளமான சட்டை போட்டதைப் பார்த்து ஒருமுறை ஒருத்தர், ‘இவ்வளவு நீளமான டிரஸ் போட்றீங்க, நீங்க மாற்றுத்திறனாளியா?’ன்னு கேட்டாங்க.

பஸ்ஸில் போனால் மாற்றுத்திறனாளி இருக்கையில கூட உட்கார இடம் கேட்கும்போது கொடுக்க மாட்டாங்க... கண்டக்டரும் அதற்கு சப்போர்ட் பண்ணுவாங்க. எங்களைப் பற்றிய சமூகத்தின் புரிதல் ரொம்ப தவறாகத்தான் இருக்கிறது."

Challenge

அரசு உங்களுக்கு வழங்கும் உதவிகள் பற்றி?

"அரசு பண்ணிய உதவிகளால்தான் எங்களால் முன்னேற முடிந்தது. என்னைப் பொறுத்தவரைக்கும் எல்லாத்தையும் ‘Positive’வாகத்தான் எடுப்பேன். எல்லா இடங்களிலும் Positive and Negative இரண்டுமே இருக்கும். இப்போ பார்த்தால் அரசு மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான உபகரணங்களைக் கொடுக்கிறது. கண்ணாடி, மொபைல் போன், படிப்பதற்கான சாதனங்கள் எல்லாம் கிடைக்கின்றன.

அரசு செய்யத் தவறியது என்னவென்றால், எங்களுக்கு அரசுத் தேர்வுக்கான Coaching Centre வேணும். அது மட்டுமில்லாமல் தனி Exams வைக்கணும். Special Exams வேணும். Special SchoolSpecial Training எடுத்தவர்களுக்கு எப்படி கோச்சிங் கொடுக்கிறார்களோ, அதுபோல Training CentreSpecial Education கொடுத்தால் நல்லா இருக்கும்.

நடைமுறை பிரச்சனையே ரூபாய் நோட்டை அடையாளம் காண்பதுதான். இப்போ உள்ள காசுகள் சின்னதுமா, பெரியதுமா இருக்குது, அதனால அதை அடையாளம் காண்பது கஷ்டமாக இருக்கும். என்னைப் பொறுத்தவரைக்கும், மாற்றுத்திறனாளியா இருக்கையில் அதில் MBC, BC, SC, ST அடிப்படையில் வேலை கொடுக்கத் தேவையில்லை. MBC, BC, SC, ST ஒதுக்கீட்டுக்கு அடுத்து, தனியாக மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரே அளவிலான Scale வைக்கணும்."

மற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

"நேர்மையா படிச்சு முன்னேறணும். Scribe ஒருத்தர் வருவாங்கன்னு அவர்கள்கிட்ட படிச்சிட்டு வாங்குறத விட நம்மளே முதல்ல படிச்சிட்டு வர்றது நல்லது. இது குறைவுதான். இருந்தாலும் படிச்சு வேலை வாங்கணும் என்ற உற்சாகம் எல்லாருக்கும் இருக்கணும். நம்ம skills வளர்த்துக்கிட்டு, technology புரிஞ்சுக்கிட்டா பிரச்சனை இல்லை.

என்னோட பேராசிரியர் சொல்வது — 'நீ கேளு' என்பதுதான். இப்போ நாம ஒரு இடத்துக்கு போகணும்னா வழி தெரியாத போது முகவரி கேட்டால்தான் கிடைக்கும். அதேபோல திருமண வாழ்க்கையையும் எடுத்தோம்னா, ஒரு மாற்றுத்திறனாளி இன்னொரு மாற்றுத்திறனாளியைத்தான் திருமணம் பண்ணுறது நல்லது.

அப்போதான் நம்ம கஷ்டம் அவர்களுக்குப் புரியும். இப்போ ஒரு மாற்றுத்திறனாளிக்கு வேலை கிடைச்சிட்டா உடனே அவர்கள் மாற்றுத்திறனாளி இல்லாதவர்களையே திருமணம் பண்ணிக்க ஆசைப்படுறாங்க. இது முற்றிலும் தவறு. என் பார்வையில், என்னோட plus and minus-ஐ மற்றொரு மாற்றுத்திறனாளிதான் புரிஞ்சிக்க முடியும்."

Challenge
Challenge

மேலும் நீங்கள் சொல்ல நினைப்பது...?

"அரசு தேர்வுகளுக்கு ரூபாய் செலுத்துகிறோம். எங்களுக்குக் கம்மிதான் இருந்தாலும் அதையும் கட்ட முடியாம நிறைய பேர் இருக்காங்க. Exam-க்கு கட்டணமில்லாமல் அனுமதித்தால் நல்லா இருக்கும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு special school பாளையங்கோட்டையில்தான் இருக்கு. Missionary ஸ்டார்ட் பண்ண ஸ்கூல்லதான் படிச்சோம். NGO-ஸ் நிறையவே ஹெல்ப் பண்றாங்க.

மாற்றுத்திறனாளிகள் இப்ப பயிற்சி எடுக்க விரும்பினாலும் நகரத்துக்கு வெளியே இருந்து வர்றது ரொம்ப கஷ்டம். மாற்றுத்திறனாளிகளுக்குத் தனியா விடுதிகள் தொடங்கினா நல்லா இருக்கும்."

அடுத்த உங்களுடைய இலக்கு?

"சேல்ஸ், மார்க்கெட்டிங் ஒரு பக்கம் இருந்தாலும் PG-DRPக்கும் படிச்சுக்கிட்டு இருக்கேன். இப்போ தனியார்லதான் பயிற்சி எடுத்துக்கிட்டு இருக்கேன். அரசு பயிற்சி கொடுத்தா இன்னும் நல்லா இருக்கும். இன்னும் அரசுப் பணிக்குப் போக முடியாத காரணம் சரியான coaching இல்ல, guidance இல்ல."

இலக்கு

இந்த சமுதாயத்துக்கு நீங்கள் சொல்ல நினைப்பது?

"சமூகத்திலிருந்து எனக்கு நிறையவே உதவி கிடைச்சிருக்கு. நாம கேட்டா நிறைய பேர் கண்டிப்பா பண்ணுவாங்க. ஒருத்தர் திட்டினாலும், அவர்கள் என்ன டென்ஷன்ல இருந்தாங்களோன்னு நான் புரிஞ்சுக்கிறேன்.

மாற்றுத்திறனாளிகள் பற்றிய விழிப்புணர்வு தேவை. மக்கள் நடைமேடை தாண்டி கடைகளை வைக்கும்போது எங்களால அதை சரியாக அணுக முடியவில்லை. Foreignல படம் பார்க்கையில் சினிமா தியேட்டர்ல audio description இருக்கும். இது போன்ற வசதிகள் வந்தால் future aspectsல நல்லா இருக்கும்."

"சமூகத்துல plus and minus இரண்டும் உண்டு. நாம தேர்ந்தெடுக்கிறதுதான் முக்கியம். உதாரணத்துக்கு, ஒரு கருத்தரித்தல் மையத்திலிருந்து அவர்களுக்காக கால் பண்ணி பேச வாய்ப்பு கிடைச்சது. நான் அதை வேண்டாம்னு சொல்லிட்டேன். மனசாட்சி அதுக்கு இடம்கொடுக்கல," என்று சொன்னபடியே மாலை நேரம் கடந்துச் செல்ல, இருள் சூழ, பஸ்சில் ஏறி தன் வீட்டிற்கு விரைந்தார் - பல கனவுகளோடு.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

சேலம்: "இது என் ஆசிரியர்கள் கொடுத்த வெற்றி" - செவி சவால் மாணவி டு அரசு அதிகாரி; ஒரு தன்னம்பிக்கை கதை

வறுமையான பின்னணியில் இருந்தாலும், கல்வி மூலம் அரசு வேலையை எட்டிப் பிடிக்கிற பலரைப்பற்றி அடிக்கடி வாசிக்கிறோம். அதில் சில மாற்றுத்திறனாளிகள் பற்றியும் வாசித்திருப்போம். இதோ அந்த மாலையில் இன்னொரு பூவாக ... மேலும் பார்க்க

`350 மி.லி-ல ஒரு உசுர காப்பாத்த முடியும்னா, என்னங்க யோசனை?'- 25 ஆண்டுகளாக ரத்ததானம் செய்யும் இளைஞர்!

ஒருவர் தானமாக கொடுக்கிற ரத்தம் சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், தட்டணுக்கள் என்று பிரிக்கப்பட்டு மூன்று நோயாளிகளைக் காப்பாற்றுகிறது. மனித உடலில் சராசரியாக 5 லிட்டர் ரத்தம் இருக்கும். ரத்ததானத்தின் போது ... மேலும் பார்க்க

``ஒரு வேளை சாப்பாடு, ஒரு நாள் உணவாக வயிறு நிறைகிறது'' - ஈரோடு சிறகுகளின் பசி போக்கும் உன்னத பணி

பசி போக்கும் `ஈரோடு சிறகுகள்'எத்தனை பொருளை வைத்திருந்தாலும் பசி என்று வந்துவிட்டால் மனிதன் உணவைத் தான் தேடுகிறான். அரையடி வயிறு இதை நிரப்பிட எத்தனை போராட்டங்கள்.தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ... மேலும் பார்க்க

''வருத்தமா இருந்தா ஹாரிஸ் ஜெயராஜ் பாட்டு கேப்பேன்'' - மாற்றுத்திறனாளியின் தன்னம்பிக்கை கதை!

பார்வை சவால் கொண்ட மதுரையைச் சேர்ந்த கண்ணன், மடிக்கணினியை அத்தனை லாவகமாகப் பயன்படுத்துகிறார். 2015-ல் நடந்த பத்தாம் வகுப்புத் தேர்வில் மாற்றுத்திறனாளிகளில் 422 மதிப்பெண்கள் வாங்கி தமிழக அளவில் முதலிடம... மேலும் பார்க்க

`பள்ளி படிக்கும்போதே 2 கின்னஸ் சாதனைகள்; அடுத்து ஒலிம்பிக்தான்' - 9ம் வகுப்பு மாணவியின் லட்சிய பயணம்

நம்ம சென்னையில் 9-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஸ்ரீ ஓவியசேனா, ஒருமுறை அல்ல இருமுறை கின்னஸ் சாதனை படைத்து ஒலிம்பிக் கனவை நோக்கி தயாராகிக் கொண்டிருக்கிறார்.இந்தச் சிறுவயதிலே இத்தனைச் சாதனைகளோடு கனவு... மேலும் பார்க்க