17 ஆண்டுகளுக்குப் பிறகு ஜாமீனில் விடுதலையான மும்பை தாதா அருண்காவ்லி.
மும்பையில் கொலை, மிரட்டி பணம் பறித்தல், ஆள் கடத்தல் போன்ற காரியங்களில் ஈடுபட்டு வந்தவர் அருண் காவ்லி. மும்பையில் தற்போது மாபியா கும்பல்கள் ஒழிக்கப்பட்டுவிட்ட நிலையில் அருண் காவ்லி உட்பட ஒரு சில கிரிமினல்கள் மட்டுமே இப்போது உயிரோடு இருக்கின்றனர். உயிரோடு இருப்பவர்களும் வெளிநாடுகளில் பதுங்கி இருக்கின்றனர். முன்னாள் எம்.எல்.ஏ.வான அருண் காவ்லி சொந்தமாக அரசியல் கட்சி தொடங்கி நடத்தி வந்தபோது கடந்த 2007ஆம் ஆண்டு நடந்த சிவசேனா கவுன்சிலர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் அருண் காவ்லிக்கு 2012ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அருண் காவ்லியை மாநில அரசு நாக்பூர் சிறையில் அடைத்தது.

கடந்த 9 ஆண்டுகளாக நாக்பூர் சிறையில் இருந்த அருண் காவ்லி இதற்கு முன்பு பல முறை பரோலில் வந்திருக்கிறார். தனது ஆயுள் தண்டனையை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இம்மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் இருந்தது. இதையடுத்து தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி அருண் காவ்லி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆரம்பத்தில் இம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் அதன் பிறகு உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் அருண் காவ்லிக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. இதையடுத்து நேற்று அருண் காவ்லி சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
அவரை காண சிறை வாசலில் பத்திரிகையாளர்கள் காத்திருந்தனர். ஆனால் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு அருண் காவ்லியை பத்திரமாக நாக்பூர் விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அருண் காவ்லி சிறையில் இருந்து புறப்படும் முன்பு அங்குள்ள மூத்த அதிகாரியிடம் பேசியபோது, எனது குழந்தைகளின் வளர்ச்சியின்போது அவர்களுடன் என்னால் இருக்க முடியாமல் போய்விட்டது. இனி எனது பேரக்குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிட விரும்புகிறேன். அதிகமான நேரத்தை குடும்பத்துடன் செலவிட விரும்புகிறேன்''என்று குறிப்பிட்டு இருந்தார்.
தாவூத் இப்ராஹிமிற்கு சிம்மசொப்பனமாக விளங்கிய காவ்லி
'தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகளால் அருண் காவ்லிக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறை கொடுத்த தகவலைத் தொடர்ந்து அவரை 3 மணி நேரத்திற்கு முன்பாக விமான நிலையத்திற்கு அழைத்து வந்தனர். தாவூத் இப்ராஹிம் மும்பையில் இருந்தபோது அவனுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவர் அருண் காவ்லி. அடிக்கடி அருண் காவ்லி ஆட்களும், தாவூத் இப்ராகிம் ஆட்களும் மோதிக்கொண்டதுண்டு.

எனவே அருண் காவ்லிக்கு தாவூத் இப்ராகிம் கூட்டாளிகள் எப்போதும் குறிவைத்துக் கொண்டு இருந்தனர். இதேபோன்று தாவூத் இப்ராகிமிற்கு மற்றொரு முக்கிய எதிரியாக கருதப்படும் சோட்டா ராஜனும் கைது செய்யப்பட்டு இப்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். அவனை கொலை செய்ய தாவூத் இப்ராஹிம் ஆட்கள் பல முறை முயற்சி மேற்கொண்டார்கள்.
காவ்லிக்கு உற்சாக வரவேற்பு
அருண் காவ்லி மும்பை பைகுலாவில் உள்ள தகடி சாலில் எப்போதும் ராஜாவாக வாழ்ந்து வந்தார். அவர் நேற்று இரவு பல ஆண்டுகளுக்குப் பிறகு தனது கோட்டையான தகடி சாலுக்கு வந்தபோது அவரை அவரது ஆதரவாளர்கள் மலர் தூவி வரவேற்றனர். பட்டாசு வெடிக்க போலீஸார் தடை விதித்திருந்ததால் மலர் தூவி வரவேற்றனர். அங்கு கூடியிருந்த பத்திரிகையாளர்கள் யாரிடமும் அருண் காவ்லி எதுவும் பேசவில்லை.
இது குறித்து அருண் காவ்லி மகள் கீதா காவ்லி கூறுகையில், ''விழாக்காலத்தில் டாடி வீட்டிற்கு வந்திருப்பது எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது குறிப்பிட்டார். தக்டி சால் மக்கள் அருண் காவ்லியை டாடி என்று அழைப்பது வழக்கம். விநாயகர் சதுர்த்தி விழா முடிவுக்கு வர இருப்பதால் நவராத்திரி விழாவை அருண் காவ்லியுடன் இணைந்து கொண்டாட ஆவலாக இருப்பதாக தக்டிசால் மக்கள் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தனர்.
அருண் காவ்லி சிறையில் இருந்தபோது மிகவும் அமைதியாக ஆன்மிகத்தில் கவனம் செலுத்தி வாழ்ந்து வந்தார். மாதிரி கைதி போன்று நடந்துகொண்டதாகவும், மிகவும் ஒழுக்கத்துடன் நடந்து கொண்டதாகவும், 16 முறை பரோலில் சென்றபோது ஒரு முறை கூட விதிகளை மீறி செயல்படவில்லை என்று நாக்பூர் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறையில் இருந்தபோது மகாத்மா காந்தி தேர்வு எழுதி அதில் 80க்கு 74 மதிப்பெண் எடுத்ததாகவும் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்த இரண்டு மாதத்தில் மும்பை மாநகராட்சிக்கு தேர்தல் வர இருக்கிறது. இத்தேர்தலில் அருண் காவ்லி தனது கட்சி வேட்பாளர்களை நிறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.