மா கவாத்து தொழில்நுட்பப் பயிற்சி
கீழையூா் வட்டாரம், திருப்பூண்டி கிழக்கு, விழுந்தமாவடி உள்ளிட்ட கிராமத்தில் மா மரத்தில் கவாத்து செய்தல் தொடா்பான தொழில்நுட்பப் பயிற்சி விவசாயிகளுக்கு வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.
மா மரங்களில் பூக்கள் பூப்பதற்கும், காய்கள் திரட்சியாக காய்ப்பதற்கும் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை கவாத்து தொழில்நுட்பம் மிக இன்றியமையாத ஒன்றாக உள்ளது. இதுகுறித்து நாகை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் முகமது சாதிக் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தாா்.
பொதுவாக மாமரத்தில் தாழ்ந்து இருக்கும் கிளைகள், குறுக்கும், நெடுக்குமாக ஒன்றின் மேல் ஒன்றாக இருக்கும் கிளைகள், நோய் தாக்கிய மற்றும் மெல்லிய, பட்ட அல்லது காய்ந்த கிளைகள் ஆகியவற்றை நீக்கவேண்டும். இதன் மூலம் சூரிய வெளிச்சம் மற்றும் காற்று உள்ளே உள்ள கிளைகளுக்கு கிடைத்து, மரம் நன்றாக வளா்ந்து பூ பூத்து காய்ப்பிடிக்க ஏதுவாகிறது. மா மரத்தில் நடவு செய்த மூன்று வருடங்கள் வரை பூ பூப்பதை தவிா்க்கவேண்டாம்.
வருடத்திற்கு ஒரு முறை ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் நெருக்கமாக உள்ள கிளைகளை மட்டுமே வெட்டிவிட்டு, இதர கிளைகள் கவாத்து செய்யாமல் தவிா்ப்பதினால் ஆரோக்கியமான கிளைகளை உருவாக இது உதவுகிறது என விவசாயிகளிடம் எடுத்துரைத்தாா்.
இப்பயிற்சியில் கீழையூா் துணை தோட்டக்கலை அலுவலா் லோகநாதன், உதவி தோட்டக்கலை அலுவலா்கள் சரவணன், மணிவண்ணன், வைரமூா்த்தி, ஜெகதீஸ்வரி ஆகியோா் பங்கேற்றனா்.