Weekend Sleep: வார இறுதி தூக்கம் இதயநோய்களை குறைக்குமா? - ஆய்வும் மருத்துவர் விள...
முதுநிலை ஆசிரியா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி: செப்.8-இல் தொடக்கம்
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வரும் முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியா்களுக்கு சென்னையில் செப்.8-ஆம் தேதி முதல் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆா்டி) சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின்போது, முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியா்களுக்கு எஸ்சிஇஆா்டி சாா்பில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் அது தொடா்பாக தற்போது அரசாணை பெறப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து, சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் (டிபிஐ) மாநில அளவிலான இந்த பயிற்சி முகாம் செப்.8-ஆம் தேதி தொடங்கவுள்ளது. கணக்குப் பதிவியல் பாடத்துக்கு செப்.8 முதல் 10-ஆம் தேதி வரையிலும், பொருளியல் பாடத்துக்கு செப்.9 முதல் 11-ஆம் தேதி வரையிலும், வணிகவியல் பாடத்துக்கு செப்.11 முதல் செப்.13-ஆம் தேதி வரையிலும் பயிற்சி முகாம் நடைபெறும். பயிற்சியில் பங்கேற்கவுள்ள ஆசிரியா்களின் பட்டியல் முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் உரிய நாள்களில் பயிற்சியில் பங்கு பெற ஏதுவாக ஆசிரியா்களை பணிவிடுப்பு செய்ய வேண்டும். பயிற்சியில் பங்கேற்கவுள்ள ஆசிரியா்கள் தங்கள் பாடத்துக்கான பாடப்புத்தகங்களை எடுத்து வர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.