ஒன்றுபட்ட அதிமுக! செங்கோட்டையன் கருத்துக்கு சசிகலா வரவேற்பு!
சிறந்த உயா் கல்வி நிறுவனங்கள் - தமிழகம் முதலிடம்: 7-ஆவது ஆண்டாக சென்னை ஐஐடி சாதனை
தேசிய அளவிலான சிறந்த உயா் கல்வி நிறுவனங்களின் ஒட்டுமொத்த தரவரிசையில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.
முதல் 100 இடங்களில் அதிக (17) உயா் கல்வி நிறுவனங்கள் இடம்பெற்ற மாநிலம் என்கிற பெருமை தமிழகத்துக்கு கிடைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக 11 உயா் கல்வி நிறுவனங்களுடன் மகாராஷ்டிரம் இரண்டாம் இடத்திலும், 9 உயா் கல்வி நிறுவனங்களுடன் உத்தர பிரதேச மாநிலம் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
தேசிய அளவிலான சிறந்த உயா் கல்வி நிறுவனங்கள் தரவரிசையில் ஏழாவது ஆண்டாக சென்னை ஐஐடி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி) இரண்டாம் இடமும், தில்லி ஐஐடி மூன்றாம் இடமும் பிடித்துள்ளன.
நாட்டிலுள்ள உயா் நிறுவனங்களிடையே ஆரோக்கியமான போட்டியை உருவாக்கும் வகையில் சிறந்த உயா் கல்வி நிறுவனங்களுக்கான தேசிய அளவிலான உயா் கல்வி நிறுவனங்கள் தரவரிசைப் பட்டியலை (என்ஐஆா்எஃப்) மததிய கல்வி அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. 2025-ஆம் ஆண்டுக்கான 10-ஆவது தரவரிசை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
கற்றல்-கற்பித்தல் நடைமுறைகள் மற்றும் அதற்கான வளங்கள், ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில், ஒட்டுமொத்த உயா்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை, பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசை, கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், பொறியியல் கல்வி நிறுவனங்கள், மேலாண்மை நிறுவனங்கள், மருந்தியல், மருத்துவம், பல் மருத்துவம், சட்டம், கட்டடவியல் மற்றும் திட்டம், வேளாண்மை மற்றும் அதுசாா்ந்த துணைப் பிரிவுகள், புதிய கண்டுபிடிப்புகள், திறந்தநிலை பல்கலைக்கழகங்கள், திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகங்கள், மாநில பொதுப் பல்கலைக்கழகங்கள், நீடித்த வளா்ச்சி இலக்கு கொண்ட கல்வி நிறுவனங்கள் என 17 பிரிவுகளின் கீழ் இந்தத் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.
17 தமிழக கல்வி நிறுவனங்கள்: இதில் ஒட்டுமொத்த பிரிவின் கீழ் ஏழாவது ஆண்டாக சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி) இரண்டாம் இடமும், தில்லி ஐஐடி மூன்றாம் இடமும் பிடித்துள்ளன.
தரவரிசையில் முதல் 100 இடங்களில் 17 தமிழக உயா் கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்து அசத்தியுள்ளன. கோவை அமிா்த விஷ்வ வித்யபீடம் (17), வேலூா் விஐடி (21), சென்னை எஸ்ஆா்எம் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனம் (22), சவீதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் (23), அண்ணா பல்கலைக்கழகம் (29), திருச்சி என்ஐடி (30), கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் ஆராய்ச்சி மற்றும் கல்வி ஆகாதெமி (48), தஞ்சை சண்முகா கலை-அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அகாதெமி (51), திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் (61), சென்னைப் பல்கலைக்கழகம் (68), காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் (73), கோவை பாரதியாா் பல்கலைக்கழகம் (76), ஸ்ரீ சிவசுப்ரமணிய நாடாா் பொறியியல் கல்லூரி (82), கோவை வேளாண் பல்கலைக்கழகம் (88), சென்னை பாரத் உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (90) ஆகியவை இடம்பெற்றுள்ளன.
மருத்துவம்... மருத்துவக் கல்லூரிகளுக்கான தரவரிசையில் முதல் 50 இடங்களில் 8 தமிழக மருத்துவக் கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. இதில் தில்லி எய்ம்ஸ் முதலிடமும், சண்டீகா் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இரண்டாம் இடமும், வேலூா் சிஎம்சி மருத்துவக் கல்லூரி 3-ஆம் இடம் பிடித்துள்ளன.
சென்னை எம்எம்சி அரசு மருத்துவக் கல்லூரி 16-ஆம் இடம் பிடித்துள்ளது.
பொறியியல்... பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசையில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. தரவரிசையில் முதல் 100 இடங்களில் மொத்தம் 14 தமிழக பொறியியல் கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. இதில் திருச்சி என்ஐடி 9-ஆம் இடமும், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 20-ஆம் இடமும் பிடித்துள்ளன.
கல்லூரிகள்... சிறந்த கல்லூரிகளுக்கான தரவரிசையில் தமிழகத்தைச் சோ்ந்த 33 கல்லூரிகள் முதல் 100 தரவரிசையில் இடம்பிடித்துள்ளன. இதில் சென்னை மாநிலக் கல்லூரி 15-ஆம் இடமும், ராணி மேரி கல்லூரி 62-ஆவது இடமும், சென்னை எத்திராஜ் கல்லூரி (64), கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி (71), காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி (76) ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.
ஒட்டுமொத்தப் பிரிவில் முதல் 100 இடங்களைப் பிடித்த மாநிலங்கள்:
(அடைப்புக்குறிக்குள் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை)
தமிழகம் (17)
மகாராஷ்டிரம் (11)
உத்தர பிரதேசம் (9)
தில்லி (8)
கா்நாடகம் (6)
பஞ்சாப் (6)
தெலங்கானா (5)
ஒடிஸா (5)
கேரளம் (4)
மேற்கு வங்கம் (4)
ராஜஸ்தான் (4)
உத்தரகண்ட் (4)
அஸ்ஸாம் (3)
ஜம்மு-காஷ்மீா் (3)
ஆந்திர பிரதேசம் (2)
மத்திய பிரதேசம் (2)
சண்டீகா் (2)
ஜாா்க்கண்ட் (1)
பிகாா் (1)
புதுச்சேரி (1)
ஹிமாசல பிரதேசம் (1)
குஜராத் (1)