இபிஎஸ், ஓபிஎஸ் பெயரைக் குறிப்பிடாமல் பேசிய செங்கோட்டையன்!
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் செய்தியாளர்கள் சந்திப்பில் இபிஎஸ், ஓபிஎஸ் பெயரையே குறிப்பிடாமல் பேசினார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், இன்று முக்கிய முடிவுகளை அறிவிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார்.
இதற்காக கோபி செட்டிபாளையத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து பிரசார வாகனத்தில் ஊர்வலமாக கட்சி அலுவலகத்துக்கு இன்று காலை செங்கோட்டையன் வருகை தந்தார்.
பிரசார வாகனத்தில் முன்னாள் முதல்வர் அண்ணா, அதிமுக தலைவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் படங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன.
சாலைகளின் இருபுறமும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் வரவேற்பு அளித்த நிலையில், கட்சி அலுவலகத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். கட்சி அலுவலகத்துக்கு வெளியே இரண்டு எல்இடி திரைகள் வைக்கப்பட்டு செய்தியாளர்கள் சந்திப்பு ஒளிபரப்பப்பட்டது.
செய்தியாளர்களுடன் பேசிய செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை 10 நாள்களுக்குள் மீண்டும் இணைப்பது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர்களை இணைத்தால் மட்டுமே மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர முடியும் என்றும் தெரிவித்தார்.
மேலும், பிரிந்தவர்களை இணைக்காவிட்டால் இபிஎஸ்ஸின் பிரசாரத்தில் பங்கேற்கப் போவதில்லை என்றும் ஒரே மனப்பான்மையில் இருப்பவர்கள் ஒன்றிணைவோம் என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.
இந்த பேட்டியின் போது, முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வத்தின் பெயரை செங்கோட்டையன் குறிப்பிடவில்லை.
அதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்தவர் என்று ஓ. பன்னீர்செல்வத்தையும் அதிமுக பொதுச் செயலாளர் என்று எடப்பாடி பழனிசாமியையும் குறிப்பிட்டு பேசினார்.