மதுரை: `காவல் நிலையம் கட்டப்பஞ்சாயத்து செய்யுமிடமாக செயல்பட்டுள்ளது' - நீதிபதி க...
பிரச்னையின் தீவிரம் புரிகிறதா? - தெரு நாய்களால் பாதிக்கப்பட்டவரின் பகிர்வு #Straydogissue
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
நம் இந்திய நாட்டில் எல்லா ஊர்களிலும் தெருக்களிலும் பாகுபாடின்றி வசவசவென்று தெரு நாய்கள் பல்கிப் பெருகி வாழ்கின்றன. ஒரு முப்பது வருடங்களுக்கு முன்பு அவைகளைப்பிடித்துச்செல்ல நகராட்சி நாய் வண்டி வரும். பின்னர் அந்த நாய்களை திரும்பக் கொண்டுவந்து விடமாட்டார்கள். ஆகவே நாய்கள் இனப்பெருக்கம் குறைவாக இருந்தது.
பின்னர் விலங்குகள் நல அமைப்புகளின் போராட்டம் காரணமாக கடந்த பல வருடங்களாக நாய்களைப் பிடித்துக்கொண்டு போனாலும் கருத்தடை செய்து பின்னர் எங்கே பிடித்தார்களோ அதே தெருவில் கொண்டு வந்து விட்டு விடுகிறார்கள். அதனால் தெரு நாய்கள் அங்கேயே மீண்டும் திரிந்து கொண்டிருக்கின்றன.
கருத்தடை செய்து கொண்டு வந்து விடுகிறார்கள் என்று சொன்னாலும் புதிதாக வரும் தெரு நாய்கள் குட்டிகளை ஈன்று கொண்டுதான் இருக்கின்றன. அப்படியே கருத்தடை செய்வதால் நாய்கள் இனப்பெருக்கம் செய்யாமல் தடுக்கலாமே தவிர அவை மனிதனைக்கோபமாக வெறிகொண்டு கடிப்பதையெல்லாம் தவிர்க்கவியலாது. எனவே கருத்தடை செய்து விடப்பட்ட தெரு நாய்களாலும் கண்டிப்பாக பொதுமக்கள் பாதிக்கப்படுவது என்பது மறுக்கமுடியாத உண்மை.

நான் இருசக்கர வாகனத்தில் செல்கையில் திடீரென நாய் துரத்தும் சம்பவங்கள் நான்கைந்து முறை நடந்துவிட்டன. ஒரு முறை இரவு 8 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் என் மகளை அழைத்துச்செல்கையில் ஒரு தெருநாய் குரைத்துக் கொண்டே துரத்தியது. இருவரும் கீழே விழுந்து விட்டோம். ஆனால் அக்கம் பக்கம் உள்ளவர்கள் உடனே ஓடி வந்ததால் நாய் ஓடிவிட்டது. இதனால் தினமும் தெரு நாய்களுக்கு பயந்து பயந்தே திக் திக்கென இருசக்கர வாகனத்தில் செல்கிறோம்.
இது மட்டுமல்ல சிவனே என நடந்து செல்லும்போதும் என்னை ஒரு முறை திடீரென ஒரு தெருநாய் குரைத்துக்கொண்டே துரத்த திகைத்து பின் கீழே விழுந்துவிட்டேன். அதற்குள் யாரோ ஒருவர் அதட்ட அந்த நாய் அமைதியாகி விட்டது.
தெரு நாய்களால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள் மற்றும் வயதானவர்கள். அதுவும் 70 வயதுக்கு மேற்பட்டவர்களை நாய் துரத்தி அவர்கள் விழுந்து அடிபடும் மற்றும் கடிபடும் கோர சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
தெரு நாய்கள் கடித்து ரேபீஸ் நோய் தாக்கி உயிரிழந்த மனிதர்களின் கதைகளை தினம் தினம் நாம் கேட்டுக்கொண்டே கடந்து சென்று கொண்டிருக்கிறோம். ஒன்றுக்கு மேற்பட்ட நாய்கள் ஒரே மனிதனைக் கடிக்கும் நிலையும் இங்கே உண்டு.
எப்போது தெரு நாய் கடித்து மனித உயிர் ஆபத்தில் சிக்கியதோ அப்போதே தெரு நாய்கள் தெருக்களில் இருக்கக்கூடாது என்ற முடிவை எட்டியிருக்க வேண்டும்.

இனியாவது விழித்துக்கொண்டு தெரு நாய்களை தனியாகக்கொண்டு சென்று உணவளித்து, மருத்துவ சிகிச்சை அளித்துப் பராமரிக்க வேண்டும்.
இந்தத்திட்டங்களை சரியாக நிறைவேற்ற ஏக்கர் கணக்கில் நிலமும் ஆள் பலமும் வழிகாட்டுதலும் கண்டிப்பாக அவசியம்!
இதற்கு அரசாங்கத்தின் பல துறையினர், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள், விலங்குகள் நல ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் என அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
தெரு நாய் என்பது பாவப்பட்ட பரிதாபமான ஒரு மிருகம்தான் என்பதை மறுப்பதற்கில்லை. அவை மனிதனையே சுற்றி வருவதும் சார்ந்து வாழ்வதும் உண்மைதான். ஆனால் அவைகளால் மனித உயிர் பறி போவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஆகவே தெரு நாய்களுக்கென தனியாக இடம் ஒதுக்கி மனிதனுக்கு பாதுகாப்பு கொடுப்பதே சிறந்த வழி.
இனியும் விலைமதிக்கமுடியாத ஒரு மனித உயிர் கூட தெருநாய்களால் போகக்கூடாதெனில் இது போன்ற நடைமுறைகளை முறையாகக் கட்டாயமாக நிறைவேற்றியே தீர வேண்டும்.
பிரச்சினையின் தீவிரத்தைப்புரிந்து கொண்டு உடனே இப்போது செயல்படுதல் நலம். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் விட்டுவிட்டால் இது மிகவும் பூதாகரமாக உருவெடுக்கும்.
எனவே நாடு முழுவதும் இதற்கான விவாதங்கள் தீவிரமாக நடந்து வரும் இவ்வேளையில் நல்லதொரு தீர்வை எட்டி தெருநாய்களை தெருவை விட்டு தள்ளி வைத்தலே சிறந்த முடிவாகும். அப்போதுதான் மனிதன் தெருவில் பயமின்றி நடமாட முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை!
புனைப்பெயர்:ரேவதி மகேஷ்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!