அதிமுகவை ஒன்றிணைப்பவர்களுக்கு முழு ஒத்துழைப்பு! - ஓ.பன்னீர்செல்வம்
ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் தடை!
பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றின் அருவிகளில் குளிப்பதற்கும், பரிசல் இயக்கவும் வெள்ளிக்கிழமை தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களின் காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் அவ்வப்போது பருவ மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு வரும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 35,000 கனஅடி வீதம் அதிகரித்துள்ளதால், உபரி நீர் வரத்தின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தின் அளவானது வியாழன்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 16,000 கன அடியாக இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி வினாடிக்கு 32,000 கன அடியாக தொடர்ந்து நீர்வரத்து தமிழக,கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஒகேனக்கலில் உள்ள பிரதான அருவி, சினி அருவி, ஐவர் பாணி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்த கொட்டி வருகிறது.

அருவிகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி மற்றும் சினி அருவிகளில் சுற்றுலாப் பணிகள் குளிப்பதற்கு 6 ஆவது நாளாக நீட்டித்துள்ளது.
மேலும், காவிரி ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் வெள்ளிக்கிழமை முதல் தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
தடை உத்தரவின் காரணமாக பிரதான அருவி நுழைவு வாயில் மற்றும் சின்னாறு பரிசல் துறை மூடப்பட்டு காவல்துறை மற்றும் வருவாய்த்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவுகள் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தின் அளவுகளை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.