ஜோத்பூரில் ஆர்எஸ்எஸ் அகில இந்திய ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் தொடங்கியது!
ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் அரசுக்கு ரூ 3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்: எஸ்பிஐ
கொல்கத்தா: ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மூலம் மத்திய அரசுக்கு ரூ. 3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று பாரத ஸ்டேட் வங்கியின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த சீர்திருத்தத்தால் நிகர நிதி தாக்கமானது ஆண்டுக்கு ரூ. 48,000 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
வளர்ச்சி மற்றும் நுகர்வு ஊக்கத்தைக் கருத்தில் கொள்ளும்போது, குறைந்த வருவாய் இழப்பானது ரூ. 3,700 கோடியாக இருந்தாலும், நிதி பற்றாக்குறையில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
56 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், தற்போதுள்ள நான்கு அடுக்கு ஜிஎஸ்டி விகிதத்தை இரண்டு அடுக்காக மத்திய அரசு மாற்றியமைத்தது. ஜிஎஸ்டி வரியானது 5 சதவிகிதம் மற்றும் 18 சதவிகிதமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சில பொருள்களுக்கு மட்டும் 40 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி சீர்திருத்தத்தின் மூலம் முக்கியமான செலவுகள் குறைக்கப்பட்டிருப்பது, வங்கித் துறையில் நேர்மறையாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட போது, அதன் சராசரி 14.4 சதவிகிதமாக இருந்தது, தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் சீர்திருத்தங்கள் மூலம் 9.5 ஆகக் குறைந்துள்ளது.
முன்னதாக 5%, 12%, 18%, 28% என நான்கு விகிதங்களில் ஜிஎஸ்டி வரி விதிக்கபட்டது.
தற்போது ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அன்றாடப் பயன்படுத்தும் 295 அத்தியாவசியப் பொருள்களின் வரி விகிதமானது 12 -இல் இருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்த நிதியாண்டில் பணவீக்கமானது 25 முதல் 30 சதவிகிதம் வரை குறையக் கூடும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விலைக் குறியீடு 2026 - 27 வரையிலான காலகட்டத்தில் 65 புள்ளிகள் முதல் 75 புள்ளிகள் வரை இருக்கக் கூடும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.