சிதம்பரம் நகர காவல் ஆய்வாளார் உள்பட 6 பேர் இடைநீக்கம்!
சிதம்பரம்: சிதம்பரம் நகர காவல் நிலைய ஆய்வாளர் உள்பட 6 காவலர்களை பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் சரக டிஐஜி வியாழக்கிழமை நள்ளிரவு உத்தரவிட்டுள்ளார்.
கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில் லாட்டரி சீட்டு வியாபாரி ஒருவரை தனிப்படை காவல்துறையினர் சமீபத்தில் கைது செய்தனர்.
அப்போது, லாட்டரி சீட்டு விற்பனைக்கு, உட்கோட்ட உயர் அதிகாரி மற்றும் காவல்துறையினர் தனக்கு உதவி செய்வதாக வியாபாரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் உத்தரவின் பேரில், கடந்த ஐந்து நாள்களாக சிதம்பரத்தில் சிறப்பு தனிப்படை காவலர்கள் முகாமிட்டு ரகசிய விசாரணை நடத்தினர். அதில், லாட்டரி வியாபாரிக்கு காவல்துறையினர் உதவியதும், பணம் பெற்றதும் தெரியவந்தது.
இதனையடுத்து, சிதம்பரம் துணைக் கண்காணிப்பாளர் டி. அகஸ்டின் ஜோஸ்வா லாமேக், சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர் எஸ். ரமேஷ்பாபு, உதவி ஆய்வாளர் பரணிதரன், சிறப்பு உதவி ஆய்வாளர் நடராஜன், காவலர்கள் கணேசன், கோபால கிருஷ்ணன், தனிப்பிரிவு காவலர் கார்த்திக் ஆகிய 7 பேர், வேலூர் மாவட்டத்திற்கு அதிரடியாக இடமாற்றம் செய்து வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உத்தரவிட்டார்.
இந்த நிலையில், சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர் ரமேஷ் பாபு, உதவி ஆய்வாளர் பரணிதரன் உள்ளிட்ட ஆறு பேரை பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் சரக டிஐஜி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.