இலங்கையில் பள்ளத்தில் கவிழ்ந்த பயணிகள் பேருந்து! 15 பேர் பலி!
ஒன்றுபட்ட அதிமுக! செங்கோட்டையன் கருத்துக்கு சசிகலா வரவேற்பு!
அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்திய நிலையில், அவரின் கருத்தை வரவேற்பதாக சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அறிக்கையில் அவர் தெரிவித்ததாவது,
தனது உடலில் ஓடுவது அதிமுக ரத்தம்தான் என்பதை செங்கோட்டையன் நிரூபித்துள்ளார். பல்வேறு நெருக்கடியான காலகட்டங்களில் கட்சியில் உடனிருந்தவர் செங்கோட்டையன். செங்கோட்டையன் போன்ற உண்மையான தொண்டர்கள் இருக்கும்வரை திமுகவின் தீய எண்ணங்கள் ஒருபோதும் ஈடேறாது.
செங்கோட்டையனின் கருத்துதான் ஒவ்வொரு தொண்டரின் கருத்து; நானும் அதையே வலியுறுத்துகிறேன். திமுகவின் சதித்திட்டத்தை முறியடிக்க தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். ஒன்றுபட்ட அதிமுக, 2026 தேர்தலில் திமுகவை வீழ்த்த வழிசெய்யும். தேர்தலில் திமுக தலைமையிலான மக்கள் விரோத அரசு வீட்டுக்கு அனுப்பப்படும்.
எந்த சக்தியாலும் அழிக்க முடியாத பேரியக்கம் அதிமுக என்பதை செங்கோட்டையன் நிரூபித்துள்ளார். அதிமுக ஒன்றிணைவதற்கு எப்படி தடையிட்டாலும், அதனை தவிடுபொடியாக்கி விடுவோம். இரு தலைவர்கள் உருவாக்கிய பேரியக்கம் காட்டாற்று வெள்ளம் போன்றது; அதனை எந்த அணை போட்டும் யாராலும் தடுக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஒன்றுபடுவோம்; வென்று காட்டுவோம், நாளை நமதே; வெற்றி நிச்சயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை 10 நாள்களுக்குள் மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று கட்சித் தலைமைக்கு செங்கோட்டையன் கெடு விதித்ததுடன், அவ்வாறு இல்லையெனில் ஒரே மனப்பான்மை உடையவர்கள் ஒன்றிணைந்து செய்து காட்டுவோம் எனத் தெரிவித்துள்ளார். செங்கோட்டையனின் கருத்துக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் வரவேற்பு தெரிவித்துள்ளார்.