குஜராத் மின் நிலையத்தினுள் புகுந்த ஆற்று நீர்! மாயமான 5 தொழிலாளிகளின் நிலை என்ன?
``திருவண்ணாமலை பெரிய கோபுரத்தைக் கட்டியது, என் தாத்தா நாயக்க மன்னர்’’ - அன்புமணிக்கு எ.வ.வேலு பதில்
பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸுக்கும், தி.மு.க-வின் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கும் இடையே கடும் வார்த்தைப்போர் வெடித்திருக்கிறது. இருவரும் மாறிமாறி விமர்சனங்களை முன்வைத்திருப்பது, இருசமூகங்களுக்கிடையிலான சாதிய அரசியலையும் பற்ற வைத்திருக்கிறது. என்ன நடந்தது?
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, போளூர், கீழ்பென்னாத்தூர் தொகுதிகளில் கடந்த ஆகஸ்ட் 30, 31-ம் தேதிகளில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் நடைப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ``திருவண்ணாமலை மாவட்டம் யாருடைய மண். சம்புவராயர், காடவராயர், வல்லாள மகாராஜா ஆகியோர் நம்முடைய முன்னோர்கள். இது, நம்முடைய மண். இந்த மண்ணில் `குறுநில மன்னர்’ என்று அவரே சொல்லிக்கொள்கிறார். எத்திராஜுலு வஜ்ஜிர வேலு. யார் இவர்? எங்கே பிறந்தார்? இந்த மண்ணுக்கும், அவருக்கும் சம்பந்தம் இருக்கிறதா? எ.வ.வேலு ஊரை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்.

வரும் தேர்தலில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க டெபாசிட் இழக்க வேண்டும். எங்கிருந்தோ வந்து, நம் மண்ணில் நம் மக்களை அடிமையாக்கி, சாராயம், கஞ்சா, காசைக் கொடுத்து அடிமையாக்கி, விடுதலை இல்லாமல் செய்துகொண்டிருக்கிறார் எ.வ.வேலு. இங்கு பக்கத்திலுள்ள நாயுடுமங்கலத்தில் நம்முடைய அடையாளத்தை வைக்க முடியாதாம். தமிழ்நாட்டில் அதிகமாக கஞ்சா விற்பனையாகின்ற மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டம். நீ எதுக்குயா மந்திரியாக இருக்கிற..?’’ என்று கொதிப்போடு விமர்சித்திருந்தார் அன்புமணி.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு திருவண்ணாமலை அருகிலுள்ள துர்க்கை நம்மியந்தலில் நடைபெற்ற கருணாநிதி பிறந்த நாள் விழா கூட்டத்தில் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, ``அன்புமணி எவ்வளவு பெரிய புழுகு மூட்டையை இங்கே அவிழ்கிறார். தமிழ்நாட்டிலேயே, இரண்டாவது பெரிய மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டமாம். மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டுமாம். பிரிப்பதற்கு நான் தான் தடையாக இருக்கின்றேனாம்.
தமிழ்நாட்டில் பெரிய மாவட்டம் சேலம் மாவட்டம். அங்கு 11 தொகுதிகள் இருக்கின்றன. அடுத்து, கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகள், திண்டுக்கல், திருச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் 9 தொகுதிகள் இருக்கின்றன. இந்த மாவட்டங்களைப் பிரித்தால் தானே 8 தொகுதிகள் உள்ள திருவண்ணாமலைக்கு வருவார்கள். எங்கள் மாவட்டத்தை உடைப்பதற்கு உங்களுக்கு என்னப்பா அவ்வளவு ஆசை? நாங்கள் ஒற்றுமையாக இருக்கக் கூடாதா?

`தி.மு.க-வுக்கு ஓட்டுப்போடாதீர்கள்?’ என்றும் சொல்கிறார். யோவ் இப்ப சொல்றேன்யா. தி.மு.க-வுக்கு ஓட்டுப்போட்டதால் தான் வன்னியர் குலத்தைச் சேர்ந்த சேலத்துச் சிங்கம் வீரபாண்டியார் அமைச்சராக முடிந்தது. கட்சியின் பொதுச்செயலாளர் அண்ணன் துரைமுருகன், கடலூர் ஈன்றெடுத்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோரும் அமைச்சர்களாக முடிந்தது. ஜெகத்ரட்சகனும் மந்திரி ஆனார்; எம்.பி-யாக இன்றைக்கும் இருக்கிறார். நான் ஒன்று கேட்கிறேன். அன்புமணி `இது நம்ம மண்’ என்று பேசுகிறார். `யார், யார் மண்?’ என்று ரெவென்யூ டிபார்ட்மெண்ட் தான் சொல்ல முடியும். உங்கள் மண் திண்டிவனத்தில் இருக்கிறது. அப்படியே துடிக்கிறார். உடனே, `வல்லாள மகராஜா கோபுரம்’ அவரின் தாத்தா கட்டியதாக பெருமைப் பேசுகிறார். நான் உனக்காக அந்த வார்த்தையைச் சொல்ல விரும்புறேன். என்னுடைய தாத்தா முன்னாள் இருக்கின்ற பெரிய கோபுரத்தை கட்டிய நாயக்க மன்னர்கள். செவ்வப்ப நாயக்கர். இந்த ஊரில் அய்யங்குளத்தை கட்டியதும் என் தாத்தா தான்’’ என்றார் எ.வ.வேலு. இந்த நிலையில், இருவர் பேசிய காணொளிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி, இருசமூகங்களுக்கிடையே ஒற்றுமையை சீர்குலைக்கும் கருத்துகளும் பரப்பப்பட்டு வருகின்றன.