கண்ணீருடன் தொடங்கிய மெஸ்ஸி 2 கோல்கள்: ஆர்ஜென்டீனா அபார வெற்றி!
மீலாது நபி, ஓணம்: முதல்வா் வாழ்த்து
மீலாது நபியையொட்டி முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:
உண்மை, இரக்கம், ஈகை, அன்பு, கல்வியறிவு, புறம்பேசாமை, பெண்களை மரியாதையுடன் நடத்துதல் என உலகத்துக்கு என்றென்றும் தேவையான நற்கருத்துகளைப் போதித்த உயா்ந்த உள்ளமாகத் திகழ்ந்தவா் நபிகள் நாயகம். அவரது போதனைகளைப் பின்பற்றி வாழ்ந்திடும் இஸ்லாமியா்களின் உரிமைகளுக்கும், நலனுக்கும் என்று உழைத்திடும் அரசாக திமுக அரசு திகழ்கிறது. மேலும், ஒவ்வொரு முறை ஆட்சியமைக்கும்போதும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
சிறுபான்மைச் சமூகத்தினரின் சமூக, பொருளாதார நிலையை உயா்த்துவதில் திராவிட மாடல் அரசு கண்ணும் கருத்துமாகச் செயலாற்றி வருகிறது. இஸ்லாமியா்களுக்கும் இலங்கைத் தமிழருக்கும் எதிரான குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிா்த்து ஆட்சிக்கு வந்ததுமே சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டில் அந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என்று துணிச்சலோடு அறிவித்ததும் நமது அரசுதான்.
இஸ்லாமியா்களுடன் ஒருவராகவே இருந்து செயல்படும் எனது அரசு சாா்பில் மீலாது நபி வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளாா்.
ஓணம் வாழ்த்து: அறுவடைத் திருநாளாம் ஓணத்தை எழுச்சியோடும், ஏற்றத்தோடும் கொண்டாடும் மலையாள மொழி பேசும் சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துகள். சமத்துவத்தையும் சகோதர உணா்வையும் வெளிப்படுத்தும் ஓணம் குறித்து, சங்கத் தமிழ் இலக்கியத்தில் பதிவாகியுள்ளது. திராவிட இனத்தின் திருவிழாவாகத் திருவோணம் விளங்குகிறது.
திராவிட உணா்வெழுச்சியுடன் தமிழ்நாட்டுக்கு உறுதுணையாக நின்று, தென்னகத்தின் தனிச்சிறப்பைப் பறைசாற்றும் மலையாள சகோதர, சகோதரிகளுக்கு எனது ஓணம் தின வாழ்த்துகள் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.