அமெரிக்காவில் முதலீடு செய்ய டிரம்ப் வலியுறுத்தலா? அச்சுறுத்தலா?
பிரிந்தவர்களை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும்: செங்கோட்டையன் காலக்கெடு!
அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் இணைக்க எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள்கள் காலக்கெடு விதிப்பதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், இன்று முக்கிய முடிவுகளை அறிவிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார்.
கோபி செட்டிபாளையத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து பிரசார வாகனத்தில் ஊர்வலமாக கட்சி அலுவலகத்துக்கு இன்று காலை செங்கோட்டையன் வருகை தந்தார். பிரசார வாகனத்தில் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன.
சாலைகளின் இருபுறமும் கூடியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். கட்சி அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் செங்கோட்டையன் உரையாற்றினார்.
அவர் பேசியதாவது:
1972 ஆம் ஆண்டு கட்சி தொடங்கியபோதே கிளையை தொடங்கி பணியாற்றினேன். என்னை பொருளாளராக நியமித்து கோவை பொதுக்குழுவை நடத்தச் சொன்னவர் எம்ஜிஆர். சிறப்பாக நடத்தியதற்காக என்னை பாராட்டினார். சத்தியமங்கலம் தொகுதியில் என்னை போட்டியிட வைத்தார்.
நாட்டின் சிறந்த முதல்வரான எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவை தலைமையேற்க வேண்டுகோள் வைத்தோம். அவர், உலகமே திரும்பிப் பார்க்க வைத்த ஆளுமைமிக்க சிறந்த ஆட்சியை நடத்தினார். ஆன்மிகவாதிகளும் திராவிடர்களாலும் ஏற்றுக் கொள்ளும் ஆட்சியை நடத்தினார்.
அவர் மறைந்த பிறகு, பல்வேறு சோதனைகள் வரும்போது அனைவரும் சேர்ந்து இயக்கம் உடைந்துவிடக் கூடாது என்று சசிகலாவை பொதுச் செயலாளராக ஒருமனதாக நியமித்தோம். முதல்வராக தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரை சசிகலா நியமித்தார்.
தமிழகத்துக்காகவும் அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சிக்காகவும் அனைத்து தியாகங்களையும் செய்துள்ளேன். இரண்டு வாய்ப்புகள் வந்தபோதும் இயக்கம் உடைந்துவிடக் கூடாது என்பதற்காக மறுத்தேன்.
2016 தேர்தலுக்குப் பிறகு சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் பல்வேறு சவால்களை சந்தித்தோம். 2024 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் 30 தொகுதிகளில் வெற்றி பெற முடியும் எனக் கூறினோம். வெளியில் சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைத்து செயல்பட்டால் மட்டுமே நம்மால் வெற்றி பெற முடியும் என வலியுறுத்தினோம். ஆனால், கருத்துகளை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் அவர் இல்லை.
வெற்றி வாகை சூடி நல்லாட்சியைத் தமிழகத்தில் தருவதற்கு அனைவரையும் அரவணைத்து கட்சியில் சேர்க்க வேண்டும். இதனை விரைந்து செய்தால்தான் தேர்தல் களத்தை சந்திக்க முடியும்.
அனைவரையும் மீண்டும் இணைத்தால் மட்டுமே பொதுச் செயலாளரின் பிரசாரத்தில் பங்கேற்பேன். இணைக்காவிட்டால் ஒரே மனப்பான்மையில் இருப்பவர்கள் ஒன்றிணைவோம்.” எனத் தெரிவித்தார்.