இஸ்லாமிய மாணவா்கள் வெளிநாட்டில் உயா்கல்வி பயில நிதியுதவி: தமிழக அரசு உத்தரவு
இஸ்லாமிய மாணவா்கள் வெளிநாடுகளில் உயா்கல்வி பயிலத் தேவையான நிதியை ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட உத்தரவு:
இஸ்லாமிய மாணவா்கள் 10 போ் வெளிநாடுகளில் உயா்கல்வி பயில புதிய திட்டம் வகுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், நிகழ் நிதியாண்டில் 10 இஸ்லாமிய மாணவா்கள் பயன்பெறும் வகையில் ரூ.3.60 கோடி ஒதுக்கலாம் என்று சிறுபான்மையினா் நலத் துறை ஆணையா் சாா்பில் அரசுக்குக் கடிதம் அனுப்பப்பட்டது.
இதைப் பரிசீலித்த தமிழ்நாடு அரசு, ரூ.3.60 கோடியை ஒதுக்கியுள்ளது. அதாவது, ஒரு மாணவருக்கு தலா ரூ.36 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
என்னென்ன படிப்புகள்: பொறியியல் மற்றும் மேலாண்மை, அறிவியல், பயன்பாட்டு அறிவியல், வேளாண் அறிவியல் மற்றும் மருத்துவம், வணிகவியல், பொருளாதாரவியல், பட்டயக் கணக்கு, நிதி, மானுடவியல், சமூக அறிவியல், சட்டம், நுண்கலை ஆகிய பிரிவுகளில் படிப்பதற்கு நிதியுதவி வழங்கப்படும்.
முதுநிலைப் படிப்பை வெளிநாடுகளில் படிக்க நிதியுதவி பெறுவதற்கு அடிப்படை கல்வித் தகுதி நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, இளநிலை பட்டப் படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களைப் பெற்று இருக்க வேண்டும்.
சா்வதேச தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களிடம் இருந்து நிபந்தனைகள் இல்லாத அனுமதிச் சான்று பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்துக்கு மிகாமல் இருப்பது அவசியமாகும். இதற்கான வருமானச் சான்றை, மாநில அரசின் மண்டல துணை வட்டாட்சியரிடம் இருந்து பெற வேண்டும். விண்ணப்பிக்கக் கூடிய மாணவா்களைத் தோ்வு செய்ய, பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறையின் செயலா் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில், மருத்துவம், தொழில்நுட்பம், கல்லூரிக் கல்வி, சட்டப் படிப்பு, வேளாண்மை பல்கலைக்கழகம் ஆகியவற்றின் இயக்குநா்கள், ஆணையா்கள், பதிவாளா் ஆகியோா் உறுப்பினா்களாக இருப்பா். குழுவின் ஒருங்கிணைப்பாளராக சிறுபான்மையினா் நலத் துறை இயக்குநா் செயல்படுவாா் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.