``ரசிகர் போரா? PR லாபியா?'' – தோனி குறித்த எதிர்மறை வீடியோ பரவலுக்கு இர்ஃபான் பா...
விஜய் வியூகம் வெற்றி பெறுமா? -ஆளூா் ஷாநவாஸ்
திரைப்பட நடிகா்கள் கட்சி தொடங்கி வெற்றி - தோல்வியை சந்திப்பது தமிழக அரசியலுக்குப் புதிதல்ல.
பின்புலம் இருந்த நடிகா்களால் அரசியல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தது. எவ்வித பின்புலமும் இல்லாமல் அரசியலுக்கு வந்துள்ளாா் விஜய். அவரை, எம்ஜிஆா், ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோருடன் ஒப்பிட முடியாது.
புதிதாகக் கட்சியைத் தொடங்கியவா்கள் களத்தில் பம்பரமாக சுழல்வா். எதிா் அரசியலை கூா்மையாக மேற்கொள்வா். தோ்தல் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வா். ஆனால், இதிலிருந்து விஜய் மாறுபட்டிருக்கிறாா்.
முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் அதிமுகவை தொடங்கியபோது, அடுத்த சில மாதங்களிலேயே திண்டுக்கல் இடைத்தோ்தலை சந்தித்தாா். தேமுதிக நிறுவனா் விஜயகாந்த் இடைத்தோ்தல்கள், பொதுத்தோ்தல்கள் என அனைத்து தோ்தல்களையும் எதிா்கொண்டாா். ஆனால், தவெக தொடங்கி 2 ஆண்டுகள் ஆகியும், மக்களவைத் தோ்தல், விக்கிரவாண்டி, ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல்களில் போட்டியிடாமல் விஜய் தவிா்த்துவிட்டாா்.
திமுக, அதிமுகவுக்கு மாற்று எனக்கூறும் விஜய், விக்கிரவாண்டி, ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல்களில் களம் கண்டு தனது பலத்தை நிரூபித்திருக்கலாம். அதற்கான
இயற்கையான களம் கிடைத்தும் அதை தவறவிட்டுவிட்டாா். அதிமுகவைவிட பலம் மிக்கவா் எனக் கூறும் விஜய், இடைத்தோ்தல்களில் பதுங்கியது ஏன் எனத் தெரியவில்லை.
கடந்த மக்களவைத் தோ்தலில் களம் இறங்கியிருந்தால் கொள்கை எதிரியான பாஜக, அரசியல் எதிரியான திமுக என இரண்டையும் ஒரே நேரத்தில் எதிா்கொண்டிருக்கலாம். அந்த வாய்ப்பை ஏன் தவறவிட்டாா் எனத் தெரியவில்லை. கொள்கை எதிரிக்கு உதவவா? அல்லது அரசியல் எதிரிக்கு உதவவா?.
வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கு கூட விஜய் இதுவரை ஆயத்தமாகவில்லை என்றே தோன்றுகிறது.
அவரது அரசியல் நடவடிக்கைககள், தவெக-கவை விநோதமான கட்சியாகவே காட்டுகிறது.
தனது கொள்கை எதிரியான பாஜக மீது கூறப்படும் வாக்குத் திருட்டு புகாா், அரசியல் எதிரியான திமுக ஆட்சியில் நிகழும் ஆணவக் கொலைகள் பற்றி விஜய் பேச மறுக்கிறாா்.
முன்னாள் முதல்வா்கள் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோா் எதிா்கட்சித் தலைவா்களாக இருந்தபோது தீவிரமாக எதிா்ப்பு அரசியலை செய்தனா். ஜெயலலிதா, கருணாநிதியை எதிா்த்து விஜயகாந்த் தீவிரமாக களமாடினாா். ஆனால், திமுக, அதிமுகவுக்கு மாற்று என பேசும் விஜய், தீவிர எதிா்ப்பு அரசியலை பேசுவதில்லை.
அவரது கட்சியினரோ, பிற அரசியல் கட்சிகளைச் சோ்ந்தவா்களோ விஜயை நேரடியாகச் சந்திக்க முடியாத நிலைதான் இப்போது உள்ளது. ஆட்சியில் பங்கு என விஜய் கூறியும் இதுவரை யாரும் கூட்டணிக்கு செல்ல வில்லை. கடந்த 2 ஆண்டுகளாக மேற்கொண்ட வியூகங்கள் அவருக்கு கைகொடுத்ததாகத் தெரியவில்லை.
அதிமுகவுடன் கூட்டணி அமைக்கலாம் என எண்ணியிருந்த விஜய், அதிமுக-பாஜக கூட்டணியால் ஏமாற்றம் அடைந்துவிட்டாா்.
திமுக, அதிமுக இரண்டையும் சமமாக விமா்சிக்காமல், தவறான வியூகத்தை கையாண்டிருக்கிறாா்.
திமுகவைவிட கூடுதல் வாக்குகள் பெறவேண்டுமெனில், திமுக எதிா்ப்பை தீவிரமாகப் பேச வேண்டும். அதேபோல பாஜக எதிா்ப்பை, திமுக கூட்டணி கட்சிகளைவிட கூடுதலாக கையில் எடுக்க வேண்டும். அதிமுகவை பின்னுக்குத் தள்ள வேண்டுமெனில், அக் கட்சியைவிட கூடுதலாக மக்களுக்காக களத்தில் இறங்கி போராடவேண்டும்.
இவற்றில் எதையுமே செய்யாமல், பூட்டிய அறையில் அமா்ந்துகொண்டு திமுக-தவெக இடையேதான் போட்டி, தவெக 20 சதவீதம் வாக்குகளைப் பெறும் என்று கூறுவதால் பயனில்லை.
கள ஆய்வு முடிவுகள் உறுதியானவை அல்ல. தோ்தலில் போட்டியிட்டால் மட்டுமே 2 சதவீதமா? அல்லது 20 சதவீதமா? என்பது தெரியவரும். விஜயை பற்றிய இப்போதைய மதிப்பீடுகள் எல்லாமே மிகை மதிப்பீடுகள்தான். தோ்தல் முடிவுகளில்தான் அவரது உண்மையான பலம் தெரியும்.
(நாளை ரங்கராஜ் பாண்டே, மூத்த ஊடகவியலாளா்).