ஆக்ஸ்போர்டில் பெரியார் படத்தை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!
Weekend Sleep: வார இறுதி தூக்கம் இதயநோய்களை குறைக்குமா? - ஆய்வும் மருத்துவர் விளக்கமும்
வேலைப்பளு காரணமாக, இன்றைக்கு பலரும் வார நாள்களில் குறைவாக தூங்க வேண்டிய சூழலில் இருக்கின்றனர். இவர்கள் ரீல்ஸ் பார்த்து தூக்கத்தைக் கெடுத்துக்கொள்பவர்கள் அல்ல. இவர்கள் வேலை காரணமாக இரவு தாமதமாக வீட்டுக்கு வருபவர்கள்...
இவர்கள் ஆஃபீஸ் வேலையை முடித்துவிட்டு, வீட்டுக்கு வந்து அங்கும் சமைத்தல், துவைத்தல், பிள்ளைகளை பராமரித்தல், பாடம் சொல்லிக்கொடுத்தல் என அடுத்த ஷிஃப்ட் வேலை செய்பவர்கள்.
இப்படிப்பட்ட வேலைப்பளுவுடன் இருக்கிற ஆண்களாலும், பெண்களாலும் காலையிலும் சற்று நேரம் கூடுதலாக தூங்க முடியாது.
அடுத்த நாள் வேலையை ஆரம்பிக்க வேண்டும். இதனால், இவர்களுக்கு வரக்கூடிய ஆரோக்கிய பிரச்னைகள் என்னென்ன; வாரநாள்களில் குறைகிற தூக்கத்தை வாரயிறுதிகளில் ஈடுகட்டினால் கிடைக்கிற நன்மைகள் என்னென்ன.? தூக்கவியல் மருத்துவர் என். ராமகிருஷ்ணன் விளக்குகிறார்.

''பெரியவர்கள் மட்டுமல்ல, பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள்கூட வார நாள்களில் தூக்கக்குறைவால் அவதிப்படுகிறார்கள்.
நம்முடைய உடலுக்கு தூக்கம் என்பது உணவு, தண்ணீர், காற்று போலவே அத்தியாவசியம். ஆனால், இன்றைய காலத்தில் வேலைப்பளு, படிப்பு தரும் அழுத்தம், தொழில் சுமைகள் காரணமாக வார நாள்களில் பலருக்கும் போதுமான தூக்கம் கிடைப்பதில்லை.
அதனால்தான், பலரும் வாரயிறுதியில் தூங்கி, உடல் சோர்வை சரிசெய்ய முயற்சி செய்வார்கள். இதையே வாரயிறுதி தூக்கம் ‘Weekend Sleep’ என்று நாம் குறிப்பிடுகிறோம்.
பொதுவாக தொடர்ந்து தூக்கம் குறையும்போது ரத்த அழுத்தம், நீரிழிவு, இதயநோய், பக்கவாதம் போன்ற வாழ்வியல் நோய்கள் வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.
சராசரியாக ஒரு மனிதனுக்கு ஒருநாளைக்கு 7 - 8 மணி நேர தூக்கம் அவசியம். ஒருநாளைக்கு தூங்க வேண்டிய நேரத்தைவிட குறைவாக தூங்கினால், உதாரணமாக தினமும் 5 மணி நேரம் தூங்குபவர்கள் 2 மணி நேரம் தூக்கக் கடனாளியாக மாறுகிறார்கள்.
இந்த 5 மணி நேர தூக்கம் ஐந்து நாட்கள் தொடர்ந்தால், தினமும் இரண்டு மணி நேரம் வீதம் 10 மணி நேரம் தூக்கக் கடன் இருக்கும். இந்த 10 மணி நேரத்தை பூர்த்தி செய்வதற்கு வாரயிறுதி தூக்கம் உதவியாக இருக்கும்.

ஆய்வு ஒன்றில் (யூகே பயோபேங்க் - UK Biobank) 90,903 பேரை, சுமார் 14 ஆண்டுகள் கண்காணித்ததில், வாரயிறுதிகளில் அதிகமாக தூங்கியவர்களுக்கு, குறைவாக தூங்கியவர்களைவிட இதய நோய் ஏற்படும் ஆபத்து 20% குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், இது அனைவருக்கும் பொதுவானது அல்ல.
வார நாள்களில் குறைவான நேரம் தூங்குபவர்கள், வாரயிறுதியில் நன்கு தூங்கி, இதய நோய்களில் இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ளலாம். வார நாள்களில் நன்றாக உறங்குபவர்கள், வாரயிறுதியிலும் 10 மணி நேரம் தூங்க வேண்டிய அவசியமில்லை'' என்று முடித்தார் டாக்டர் என். ராமகிருஷ்ணன்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR