Vice President: "தமிழரை நிறுத்திவிட்டால் மட்டும் போதுமா?" - சி.பி.ராதாகிருஷ்ணன் ...
சேலம்: நாய் போல் செய்கை; தண்ணீர் குடிக்கச் சிரமம்; ரேபிஸ் நோய்க்குச் சிகிச்சை எடுக்காத தொழிலாளர் பலி
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அடுத்துள்ள இலவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி (43) தறித் தொழிலாளி. இவருக்கு சித்ரா என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். இவர் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார்.
கடந்த 3 மாதங்களுக்கு முன் அப்பகுதியில் உள்ள பலரை அந்த நாய் கடித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக குப்புசாமியிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த குப்புசாமி தன்னுடைய வளர்ப்பு நாயை அடிக்க முயன்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக குப்புசாமியின் காலில் நாய் கடித்துள்ளது. நாய்க் கடி பாதிப்பிற்கு மருத்துவச் சிகிச்சை மற்றும் தடுப்பூசி போடாமல் குப்புசாமி இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குப்புசாமியின் உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் குடிக்க முடியாமல், நாய் போலவே பல்வேறு செய்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் தாரமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு குப்புசாமியைப் பரிசோதனை செய்த போது ரேபிஸ் நோய்ப் பாதிப்பிற்கு உள்ளாகி இருந்ததைக் கண்டறிந்துள்ளனர். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற பரிந்துரைத்தனர்.
தொடர்ந்து சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்தார். தீவிர மருத்துவச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி குப்புசாமி உயிரிழந்தார்.
வளர்ப்பு நாய் கடித்ததில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுக்காததால் தறித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சேலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.