ஆந்திரப் பிரதேசத்துக்கு ரெட் அலர்ட்! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!
மசோதாக்கள் மீது ஆளுநர் அக்கறை காட்டவில்லை என்று பலமுறை கூறியிருக்கிறோம்: உச்சநீதிமன்றம்
மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தருவதில் அக்கறை காட்டவில்லை என்று பலமுறை கூறியிருப்பதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளார்.
மேலும் ஆளுநர் விவகாரத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து மறு ஆய்வு செய்யவில்லை, குடியரசுத் தலைவர்கள் எழுப்பிய கேள்விகள் குறித்த கருத்துகளை மட்டுமே கேட்கிறோம் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.
தமிழக அரசு அனுப்பிய பல்வேறு மசோதாக்கள் மீது ஆளுநர் ஆர்.என். ரவி குறிப்பிட்ட கால வரம்புக்குள் உரிய முடிவு எடுக்கவில்லை எனக் கூறி தமிழக அரசு உச்சநீ திமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரலில் தீர்ப்பு வழங்கியது. அதில், 10 மசோதாக்கள் மீது உரிய முடிவெடுக் காமல் ஆளுநர் காலம் தாழ்த்தியது சட்டவிரோதமானது எனத் தெரிவித்த உச்சநீதிமன்றம், மாநில அரசால் நிறை வேற்றி அனுப்பப்படும் மசோதாக்கள் மீது ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் ஒட்டுமொத்தமாக மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிட்டது.
இந்தக் காலவரம்பு குறித்து 14 கேள்விகளை எழுப்பி உச்சநீதிமன்றத்திடம் தெளிவுரை கேட்டு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு ஒரு குறிப்பை அனுப்பியிருந்தார்.
குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்ட வழக்கை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய சிறப்பு அமர்வு விசாரணை மேற்கொண்டு இந்தவழக்கில் மத்திய அரசும், அனைத்து மாநில அரசுகளும் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது.
அதன்படி இந்த வழக்கில் மத்திய அரசும் தமிழக அரசும் எழுத்துப்பூர்வ பதில் அளித்திருந்த நிலையில் இன்று பி.ஆர்.கவாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பாக வழக்கின் விசாரணை நடைபெற்றது.
"மசோதாக்களுக்கு கால நிர்ணயம் செய்தது அரசின் பணியில் தலையிடுவதாக உள்ளது. குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகளை தீர்ப்பின் மேல்முறையீடாக பார்க்க வேண்டாம். உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையை குடியரசுத் தலைவர் எதிர்பார்க்கிறார் என்றே பார்க்க வேண்டும்" என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி கூறினார்.
அதற்கு நீதிபதிகள், "மசோதா விவகாரங்களில் ஆளுநர் அக்கறை காட்டவில்லை என பலமுறை கூறியிருக்கிறோம். மோசமான சூழ்நிலை வந்த பின்னர்தான் அதனை சரிசெய்ய நீதிமன்றம் தலையிட்டுள்ளது" என்றனர்.
மேலும் ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நாங்கள் மறு ஆய்வு செய்யவில்லை. குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகள் குறித்தே வாதங்களை மட்டுமே கேட்கிறோம் என நீதிபதிகள் விளக்கம் தெரிவித்தனர்.
உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிலேயே குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் உள்ளது என தமிழ்நாடு அரசு சார்பில் அபிஷேக் சிங்வி வாதம் செய்தார்.
காவிரி, குஜராத் சட்டப்பேரவை வழக்குகளில் குடியரசுத் தலைவர் மூலம் எழுப்பிய கேள்விகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. இந்த விளக்கம் கோரிய மனுவையும் திரும்ப அனுப்ப வேண்டும் என கேரள அரசு சார்பில் வாதம் செய்யப்பட்டது.
அரசியலமைப்புச் சட்டத்தில் விரைவாக ஒப்புதல் வழங்கக் கூறப்பட்டிருக்கிறது என்று மத்திய அரசு தரப்பு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதற்கு, 'விரைவாக என்றால் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒப்புதல் வழங்க வேண்டும் என்பதுதானே அர்த்தம்' என நீதிபதிகள் கூறினர்.
மசோதாக்களை குடியரசுத் தலைவர் நிறுத்திவைப்பது என்பது ஓர் அரிதான நிகழ்வு என்றும் ஜனாதிபதியும் ஆளுநர்களும் ஜனநாயகத்திற்கான பிரதிநிதிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த பிரதிநிதிகள் ஜனநாயகத்தின் சட்டப்பூர்வ மையங்களாக இருக்கின்றனர் என்றும் துஷார் மேத்தா தெரிவித்தார்.
தொடர்ந்து வழக்கின் விசாரணை நாளை(புதன்கிழமை) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.