ஜம்முவில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட மத்திய அமைச்சர் அமித் ஷா
Health: பெண்கள் ஏன் கட்டாயம் எள் துவையல் சாப்பிட வேண்டும்?
’’‘இளைத்தவனுக்கு எள்ளைக் கொடு’ என்பது பழமொழி. எலும்பு வலிமை தேவைப்படும் அனைவருக்குமே எள்ளைப் பரிந்துரைக்கலாம்.
மூட்டுத் தேய்மானத்தைத் தடுப்பதற்கும், எலும்புகள் ஒன்றோடு ஒன்று உரசிக்கொள்ளாமல் இருப்பதற்கும், நரம்புகளின் செயல்பாடுகளைச் சீராக்குவதற்கும் உடலில் எண்ணெய்ச்சத்து அவசியம்.
எண்ணெய் வித்தின் தாவர வகையைச் சேர்ந்த எள், இதற்கு உதவிபுரியும். இன்று வழக்கத்திலிருக்கும் நல்லெண்ணெய்யின் அடிப்படையே எள்தான்.

இது, ஒருகாலத்தில் அஞ்சறைப் பெட்டியில் தவறாமல் இடம்பிடித்திருந்தது. இன்றோ, பலரும் உடல் உஷ்ணத்தைக் காரணம் காட்டி, அன்றாட உணவில் அதைத் தவிர்க்கிறார்கள்.
அப்படியானவர்கள்கூட, சுவையான எள் துவையலைத் தட்டிக்கழிக்க முடியாது’’ என்கிற ஆயுர்வேத மருத்துவர் ஆர். பாலமுருகன், எள் துவையலின் பலன்கள் பற்றி விவரிக்கிறார். ரெசிபி செய்முறை சமையல் கலைஞர் அன்னம் செந்தில்குமார்.
கறுப்பு எள் அல்லது வெள்ளை எள் : கால் கப்
தேங்காய்க்கீற்று : 4
காய்ந்த மிளகாய் : 4
கட்டிப் பெருங்காயம் : சிறு துண்டு
உளுத்தம்பருப்பு : ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் : ஒரு டீஸ்பூன்
உப்பு : தேவையான அளவு
தண்ணீர் : சிறிது
புளி : சிறிய கோலிக்குண்டு அளவு

எள்ளைச் சுத்தம் செய்து, வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி, அதில் உளுத்தம்பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு சிறிது நேரம் வறுக்கவும்.
உளுத்தம்பருப்பு சிவந்ததும் தேங்காய் துண்டுகள், புளி, உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும். ஆறியதும், எள் மற்றும் தண்ணீர் (சிறிதளவு) சேர்த்துக் கெட்டியாக அரைத்தெடுத்தால், எள் துவையல் ரெடி.
பெண்களுக்கு உடலில் ஈஸ்ட்ரோஜென் குறைந்தால், ரத்தத்தில் கொழுப்புச்சத்து அதிகரிக்கும். இதன் காரணமாக மாதவிடாயில் பல சிக்கல்கள் ஏற்படும். இது, ஈரல் பாதிப்புகள், இதயக் கோளாறு, ஹார்மோன் சமச்சீரின்மை எனப் பல பிரச்னைகளை உருவாக்கும்.
எனவே, மாதவிடாய் பிரச்னையுள்ள பெண்கள், முதல் நிலையிலேயே இது போன்ற உணவுகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சமச்சீரின்மை பிரச்னை உள்ளவர்கள், மெனோபாஸ் கடந்தவர்கள் அனைவருக்கும்கூட இந்த உணவு உதவும்.

எள் சாப்பிடுவதால், மாதவிடாயின்போது ரத்த வெளியேற்றம் அதிகமாகுமோ என்ற பயம் சிலருக்கு இருக்கும். துவையலில் சேர்க்கப்பட்டிருக்கும் தேங்காயும் உளுத்தம்பருப்பும் எள்ளின் உஷ்ணத் தன்மையைக் குறைக்கும் என்பதால், அந்தப் பயம் அவசியமில்லை.
வயிற்றுப்புண், புளித்த ஏப்பப் பிரச்னை உள்ளவர்கள் ஏதேனும் ஒரு கஞ்சி வகையோடு எள் துவையலைச் சேர்த்துக்கொண்டால், அதுவும் சரியாகும்.
எலும்பு மூட்டுப் பிரச்னைகளைத் தடுப்பதற்கும், எலும்பை வலுவாக்குவதற்கும் உதவும் என்பதால், பெண்கள் மட்டுமல்ல அனைவருமே எள் துவையலை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்’’ என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...