TNPSC தேர்வில் அவமதிக்கும் வகையில் கேள்வி; கொதிக்கும் அய்யா வைகுண்டர் பக்தர்கள்;...
சு. வெங்கடேசன் ஐயா மீது பழி சுமத்த விரும்புகிறோம்! - இப்படிக்கு வேள்பாரி ரசிகை | #என்னுள்வேள்பாரி
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
எட்டாவது வள்ளல்!
இந்நூலாசிரியர் மீது குற்றம் சாட்டி, வெய்யில் அவர்களை வழிமொழிந்து துவங்குகிறேன் நான்.
‘வேள்பாரி’ புத்தகத்தின் பின்புற அட்டையில் மிகச் சரியாக, "மொழியாலும் புனைவாலும் மதம்பிடித்த ஒருவரால் மட்டுமே இப்படியொரு காவியத்தை உருவாக்க முடியும்", என்று வெய்யில் அவர்கள் குறிப்பிட்டுள்ளபடி, ஒற்றை வரியில் பழி சுமத்த விரும்புகிறோம் சு. வெங்கடேசன் ஐயா மீது!
மணியன் செல்வம் ஐயாவும் அவர் பங்கிற்கு நம்மை கிறங்கடித்துவிட்டப் பழியை ஏற்கத்தான் வேண்டும்!! அவர்தம் ஓவியமே காவியம் சொல்கிறதே!
நான் வியந்து உறைந்து போனது - பாரியை விட இக்காவியப் படைப்பாளியால்!
சொற்சுவையும், பொருட்சுவையும் அவர் உருவாக்கிய பொற்சுவையை விட அழகில், இனிமையில் விஞ்சி, கொஞ்சி நிற்கின்றனவே!
தாய்போல் அரவணைத்து வந்தாரை வாழ வைக்கும் நாடாம் பறம்பு - நம் சென்னையைப் போல்!
பறம்பு மலையில் நம்மையும் ஏற்றிவிட்டு, விஞ்சி நிற்கும் அவரின் குறிஞ்சி பற்றிய தகவல் களஞ்சியத்தின் செறிவைக் கண்டு...'மலை'த்து நிற்போம் நாம்!
அடுத்த விநாடியே..."முல்லை பற்றியும் எல்லையற்ற அறிவு இவருக்கு!", என்று வியந்து புகழ வைக்கிறார்..!
நெய்தலில் இவரின் ஞானம் பெருங்கடலினும் ஆழமானது என்று நிரூபித்து ஐந்திணைகளையும் ஆறறிவு கொண்டு அசரடிக்கிறார் நம்மை!
காடறிந்த ஆசானாய் - தேக்கன்!
ஆழ்கடல் அளந்த – சூழ்கடல் முதுவன்!
நாளையும் கோளையும் கணிக்கும் பெருங்கணியர் - திசைவேழர்!
இவ்வணைத்துப் பட்டங்களையும் ஏற்பது 'சகலகலாவல்லவன்' - நம் ஆசிரியரே!

நேஷனல் ஜியோகிராபிக் சேனல், தமிழில்... பறம்பு மலையில்... படமாக்கி இருந்தால் கூட இப்படி நம் கண் முன் காட்சிகளை நிறுத்தியிருக்க முடியுமா? இப்படி ஒரு வர்ணனை வழங்கி இருக்க இயலுமா? என்று ஐயுருகிறேன் நான். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு விலங்குகளின் இயல்பை விவரிப்பதாகட்டும், அவை மனிதனைத் தாக்கும் முறைகளாகட்டும், நாமே தாக்கப்படுவது போல் ஒரு பீதியை உருவாக்குகிறது மொழிநடையும், வேகமும்!
வீரமும், ஈரமும்,
காதலும், காமமும்,
கோபமும், தாபமும்,
மோகமும், தாகமும்,
வெறுப்பும், அறுவறுப்பும்,
வேட்கையும், சேட்டையும்,
துணிவும், கனிவும்,
நளினமும், நயமும்
- அத்துணை உணர்ச்சிகளையும் தன் எழுத்தின் மூலம் நம்முள் எழ வைத்துவிடுகிறார் இவ்வொறே ஒரு நூலின் வாயிலாக!
கதாபாத்திரங்களின் பெயர்களில் தொடங்கி, ஒவ்வொரு கதாபாத்திரத்தைப் பற்றிய விளக்கம், விவரணம், வருணனை, பொழிப்புரை, விரிவுரை, தெளிவுரை, பதவுரை, அரும்பதவுரை அனைத்தையும் நுட்பமாய் வழங்கி வார்த்தைச் செறிவில் தமிழெண்ணும் அமுதை அள்ளித் தந்து பருகச் செய்கிறார் நம்மை.
"குழந்தைகளிடம் விட்டுக்கொடுக்கும் போதும், தோற்கும்போதும் தான், ஓர் ஆண் தாய்மையை அனுபவிக்கிறான்"
"மண்ணில் கால் பாவாமல் மனிதன் நடப்பது தண்ணீருக்குள்ளும், காதலுக்குள்ளும் தான்"
"புல் நுனிகள் பனித்துளிகளை உலர்த்தாமல் வைத்திருந்தன"
"எல்லோரும் காட்டை அழித்து விளைநிலமாக்கியபோது காட்டை அறிந்து கொண்டு நிலத்தை விளைய வைத்தவர்கள் அவர்கள்"
"ஈட்டியை விசைகொண்டு எறியும் எங்கள் வீரர்களின் கை தன்னிகரற்ற வலிமை கொண்டிருப்பது சதையால் அன்று, கதையால்!"
"விடையின்றி தலைதாழ்த்தி நிற்கும் மாணவனே ஆசானின் அகங்காரத்திற்குச் சுவையூட்டுகிறான்"
"இது பிறந்த காலத்தைக் குறிப்பதன்று. பேரரசின் 'சிறந்த' காலத்தைக் குறிப்பது"
இப்படி இவர் நிகழ்த்தி இருக்கும் வார்த்தை விளையாட்டு காவியமெங்கும் கரைபுரண்டோடுகிறது!
முருகன்: மானிலும் மயிலிலும் மட்டுமே ஆண் அழகு
வள்ளி: நானும் அப்படித்தான் நம்பினேன்... உன்னைக் காணும் வரை!
வள்ளி: அழகின் வடிவு நீ!
முருகன்: வடிவின் அழகு நீ!!
வள்ளி: நீ விண்ணைக் காணும் பொழுதும் என்னைத் தான் கண்டாயா?
முருகன்: நீயின்றி நான் காண விண்ணேது? மண்ணேது?!
வள்ளி: அசைத்தால் உதிராதது, அணைத்தால் உதிராதல்லவா?
இவ்வண்ணம் வசியம் செய்யும் வள்ளி - கந்தன் காதல் மொழிக்கு அம்முருகனே உருகுவான்! நம் ஆசிரியரிடம், அவன் காதலுக்கு... குறிப்பும் எடுப்பான்!!

வேள்பாரியில் என்னை மிகவும் கவர்ந்த கதாபாத்திரம்:
'கோவன்'! - வெண்சாந்து உருண்டை குலத்தைச் சேர்ந்தவன். "பச்சிலை எறிசாற்றை என் கையாலேயே மாடுகளுக்குக் கொடுத்துவிட்டேனே!!", என்று பதறி தன் தவற்றிற்காக வருந்தி, கொம்புகளை முழு விசையோடு தொண்டைக்குள் இறக்கி, தானே தன்னைக் குரூரமாய் மாய்த்துக் கொண்ட விநாடி, என்னை உறைய வைத்தது! அது, அவன் தன் நாட்டு மக்களைக் காப்பாற்றுவதற்காக வகுத்த வியூகத்தின் வழிமுறை என்றபோதும், ஒரு வாயில்லா பிராணிக்கு இழைத்த தீங்கை உணர்ந்து நொடிப்பொழுதில் தனக்கே அளித்துக் கொண்ட தண்டனை, என்னை நிலைகுலையச் செய்து உருக்கியது!
பாண்டியன் நெடுஞ்செழியன் தன் தவறை உணர்ந்த விநாடி உயிர் துறந்தான். கோவன் அதனைக் காட்டிலும் பன்மடங்கு உயர்ந்து நிற்கிறான்!
வேள்பாரியில் என்னை மிகவும் கவர்ந்த காட்சிகள்:
காமன் விளக்கை உருவாக்கிய விதம். தமிழரின் மூளையும் வேலையும் இணைந்து புரியும் மற்றொரு மாயம்! சிற்பிகளின் விளக்கு வடிவமைப்பும் அதன் நிழலைக்கூட அனுமானித்த உருவாக்கிய அழகும், அதற்கான ம. செ. வின் ஓவியமும்.
கோட்டை அறையில் ஒவ்வொருவரின் தனிப்பயனாக்கப்பட்ட விதானம். விண்வெளி வடிவில் அவ்வளவு நேர்த்தியாக, அர்த்தம் பொதிந்ததாக உருவாக்கப்பட்ட விதம்!
வேள்பாரியில் மிகையாக நான் காணும் உணர்வு: மனித மனதின் ஈரம்! பாசம்!

கலவி கொள்ளும் மான்கள், கலக்கம் கொள்ளக் கூடாதென, தன் தேரை நிறுத்தி, மெல்ல இறங்கி நடக்கும் வேந்தன் போதாதா? - என் தேர்வுக்கான ஒற்றை சான்றாய்?!
பறம்பின் பல்வேறு குலம் சார்ந்த குடிமக்களின் குருதியில் தொடரும் வீரியமும் மரபணுவும், ‘ஏழாம் அறிவில்’, மரபியல் ஆராய்ச்சி மூலம், தலைமுறைகள் கடந்தும் போதி தர்மரின் வம்சாவளி ஆற்றல்கள் வெளிப்படுவதை நினைவூட்டின.
மாபெரும் யுத்தங்களின் வெற்றியின் இரகசியமாய்,
கத்தியின் கூர்மையை விட புத்தியின் கூர்மை இருந்திருக்கிறது!
மலை மகளின் ஒவ்வொரு மூலிகையும் மூலதனமாய் ஆனது!
செயற்கை அணுஆயுதத்தைக் காட்டிலும் வீரியம் கொண்ட இயற்கை அங்கங்களே எவ்வாறு போருக்கு, தக்க நேரங்களில் சாதுர்யமாய் பயன்படுத்தபட்டிருக்கின்றன?!
"என்ன வளம் இல்லை எங்கள் திருநாட்டில்?" என்றார்கள். அது பொருளை மட்டுமே குறிப்பதாக இதுவரை அறிந்திருந்தேன். ஆனால், பேராற்றல், பேரறிவு, பேரன்பு போன்ற எண்ணற்ற குணாதிசயங்களும் கூட, நம் நாட்டின், தமிழனின் தனித்தன்மை என இந்நூலை வாசித்த பின்பே உணர்ந்தேன்!
மயிலா, ஆதினி, அங்கவை, சங்கவை, பொற்சுவை, சுகமதி முக்கியமாக குலநாகினிகள், செம்பா போன்ற பெண் கதாபாத்திரங்களை மிகுந்த வலிமையும், திறமையும், வீரமும், துணிச்சலும் மிக்க பெண்டிராகப் படைத்து, வாசிக்கும் என்னைப் போன்ற பெண்களுக்குள் தைரியத்தையும், வீரத்தையும் விதைத்திருக்கிறார்!
தமிழரின் சிறப்பை
தமிழில் சிறப்பாய்
தமிழருக்குப் பரிசளித்த
தமிழ் எழுத்தாளனை
தமிழச்சியாக நான் பாராட்டுவதில்
பெருமையும், இருமாப்பும் கொள்கிறேன்!
என் தாய்மொழி எவ்வளவு சிறப்பு வாய்ந்த வண்டமிழ்(வளமையான தமிழ்) என உணர்ந்தேன்!
என் தாய்நாடு எவ்வளவு மாண்புமிக்க மானுடம் வாழ்ந்த இடம் என மெய்சிலிர்த்தேன்!
என் தாய்நாட்டில் சு. வெங்கடேசன் ஐயா போன்ற ஞானக்களஞ்சியம் வாழ்ந்த சம காலத்தில் நானும் வாழ்கிறேன் எனப் பெருமை கொள்கிறேன்!
தமிழரின் வரலாற்றை, பாரியின் சிறப்பை, தமிழின் வளங்கொழிப்பை வாரி வழங்கிய இவரன்றோ நம் எட்டாவது 'வள்ளல்'!
- அலமேலு இராமநாதன்,
கெருகம்பாக்கம்,
சென்னை.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!