``தனியார் நிறுவனங்களில் 10 மணி நேர பணி'' - மகாராஷ்டிரா அரசு பரிசீலனை
வாடகை வீடல்ல .. வாழ்க்கை கொடுத்த கோவில் - அன்பான சென்னை வாழ்க்கை | #Chennaidays
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
1992 மே மாதம் 21 ..முதுகலை முடித்து விட்டு வாழ்க்கை . வேலை தேடி சென்னையில் கால் வைத்த தினம் ... ஏற்கனவே சின்ன வயதில் சென்னை லேசான அறிமுகம் என்றாலும் பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து 7B பேருந்தில் ஏறி அப்போதைய புற நகர் பகுதியான கொரட்டூர் வந்து சேர்ந்தபோது லேசாக இருட்டி இருந்தது.
2B , சுப்புலக்ஷ்மி நகர் என்ற முகவரியை துண்டு சீட்டில் வைத்துக்கொண்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த வீடுகளில் விலாசத்தை விசாரித்து குறிப்பிட்ட முகவரியை அடைந்த போது நன்றாகவே இருட்டி விட்டது
வாழ்க்கையில் ஓவ்வொருவருக்கும் சொந்த வீடும் பெற்றோரும் எப்படியோ அதே போல் தான் எனக்கு கிடைத்த வீட்டு உரிமையாளரும் ..அவர்கள் கொடுத்த வாடகை வீடும். வாடகை வீடு .. வீட்டு உரிமையாளர் என்று சொல்லி எனக்கு கிடைத்த லட்சுமிபதி சார் - தங்கம் மேடம் என்ற பொக்கிஷங்களை அந்நிய படுத்தினால் , நன்றி இல்லாத பட்டியலில் என்னை நானே சேர்த்து விடுவேன் .

லட்சுமிபதி சார் - தங்கம் மேடம் என்ற தம்பதியினர் வீட்டு உரிமையாளராக அறிமுகமான அந்த தினமே என்னுள் ஒரு தன்னம்பிக்கையும் தைரியத்தையும் கொடுத்தது. வங்கியிலும் , கல்லூரியிலும் பணிபுரிந்த அவர்களுக்கு , ஆணொன்று , பெண்ணொன்று என்று அளவான குடும்பம்.
என்னதான் முதுகலை முடித்து விட்டு வேலை தேடி வந்தாலும் , ஆங்கிலத்தில் ஒழுங்காக ஒரு விண்ணப்பம் கூட எழுத தெரியாத நிலை எனக்கு. வீட்டில் இருந்த பழைய typewriter மூலம் வேலைக்கு வேண்டிய விண்ணப்பங்களை இரவில் தட்டச்சு செய்து , நேர்காணலில் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால் எப்படி பதில் சொல்லவேண்டும் என்பது வரை சொல்லிகொடுத்து தினசரி என்னை உற்சாகப்படுத்தியதின் பலனாக சென்னைக்கு வந்த 14 வது நாள் வேலை கிடைத்துவிட்டது . சம்பளம் 800 ரூபாய் .

முதல் நாள் வேலைக்கு சரியான நேரத்திற்கு செல்லவேண்டும் என்பதற்காக அவரோட LML VESPA ஸ்கூட்டரில் கொண்டு வந்து அலுவலக வாசலில் விட்ட நாள் முதல் ..இதோ 33 வருடங்கள் கழிந்து விட்டது .. அவர்கள் இன்றி ஓரணுவும் என் வாழ்க்கையில் அசைந்தது இல்லை. ஊரிலிருந்து என்னை தேடி வருபவர்களுக்கு உபசரிப்பதாகட்டும் , படித்துவிட்டு வேலை தேடிவருபவர்களுக்கு வழி காட்டுவதாகட்டும் சொந்த பிள்ளையை போன்றுவழிகாட்டி என்னை சென்னையில் வாழ வைத்துக்கொண்டிருக்கும் எங்கள் சாரும் மேடமும் .. எங்கள் குடும்பத்தில் கலங்கரை விளக்கமாக இன்றுவரை உயர்ந்து நிற்கிறார்கள் .
ஊரில் நல்லது கெட்டதுக்கு தகவல் வந்தால் பயணச்செலவுக்கு காசு கொடுத்து அனுப்புவதாகட்டும் , 2001 இல் சொந்தமாக தொழில் தொடங்கியபோது கொடுத்த முன்பணமாகட்டும் , 2004 இல் சொந்த காசை போட்டு எனது திருமணத்தை நடத்தி வைத்தது , வீடுகட்டி கிரஹப்பிரவேசம் முதல் எனது மகளின் படிப்பு வரை அனைத்தையும் முன்னின்று முதல் தொகையாக செலுத்தி பொருளாதார ரீதியாக மட்டுமில்லை , அன்பை காட்டி அனைத்திலும் அரவணைப்பு காட்டி , இதோ இன்றுவரை எங்களை வழிநடத்தும் லட்சுமிபதி சார் - தங்கம் மேடம் ஹவுஸ் ஓனர் கிடையாது ..எங்களை இரண்டாம் முறை பிரசவித்த பெற்றோர் .. நல்வழி காட்டிய ஆசான்கள் ..
இடர் வந்தபோதெல்லாம் தவறி விழாமல் தாங்கி பிடித்த தூண்கள் ..இந்த பெருந்தகை உறவுகளுக்கு நன்றி சொல்ல முடியாது .. விசுவாசத்தால் வாழ்ந்து காட்டவேண்டும் என்ற ஒற்றை வரி மட்டுமே என்னை இயக்கிக்கொண்டுள்ளது.

வருடத்திற்கு மூணு வீடு மாற வைக்கும் சில வீடு உரிமையாளர்கள் போல் இல்லாமல் , சொந்த உறவை காட்டிலும் மேலாக காத்து வரும் எங்கள் சாரும் மேடமும் எங்கள் வாழ்வில் ஓளியேற்றிய இந்த உள்ளங்கள் சொந்த பிள்ளைகளை பார்க்க அமெரிக்கா , ஆஸ்திரேலியா என்று எங்கு சென்றாலும் வாரம் தவறாமல் தொலை பேசியில் அழைத்து நலம் விசாரித்து ஆலோசனை வழங்கி எங்களை வழிநடத்தும் இவர்கள் தான் சென்னையில் மனிதம் வளர்வதற்கும் , மலை பெய்வதற்கும் காரணம்.
மெட்ராஸ் அனுபவம் என்று நினைத்தாலே இவர்களை விட்டுவிட்டு வேறு எதை எழுதினாலும் , உள்குறை உறுத்திக்கொண்டே இருக்கும் .. அதேபோன்று 33 ஆண்டுகளில் எத்தனையோ அனுபவங்களை இந்த சென்னை மாநகரம் எழுத தூண்டினாலும் , வேறு எதையும் எழுதி இந்த உறவை நீர்த்து போக செய்ய விரும்பவில்லை.
இன்றைக்கும் சொந்த ஊருக்கு போனால் என்னுடைய உறவுகள் , என்னை எப்படியிருக்கிறாய் என்று கேட்பதற்கு முன்பே , கொரட்டூர் சாரும் மேடமும் எப்படி இருக்கிறார்கள் என்று கேட்பதில் புரிந்து கொள்ளலாம் அனைத்தையும்.
சத்யானந்தம், பரந்தாமன் , சிவகுமார் , சுந்தரவேல் . ஜெகதீசன் , ஆனந் , இளவரசன் , பூவை என்று அடுத்தடுத்து இந்த வீட்டில் ஐக்கியமாகி அவரவர் வாழ்க்கையில் நிலை கொண்டாலும் சுமார் 27 ஆண்டுகள் நாங்கள் புழங்கிய 2B , சுப்புலக்ஷ்மி நகர், கொரட்டூர் ஒரு கோயில் ..
சென்னை மட்டும் பெருக வில்லை .. மக்கள் மனசும் பெருகிக்கொண்டுதான் இருக்கிறது !
-பூநசி.மேதாவி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!