செய்திகள் :

கட்டிலுக்கு அடியில் மறைந்து, விகடன் படித்த நாட்கள் - வீட்டில் நடக்கும் போட்டா போட்டி #நானும்விகடனும்

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

அடுத்த ஆண்டு, சதம் அடிக்கக் காத்திருக்கிறது என் வாழ்வின் ஆத்மார்த்த அங்கமான ஆனந்ந்ந்த விகடன்!   

நூற்றாண்டு கடந்தும் சீற்றம் அடங்கவில்லை!

குடும்பமே கொண்டாடும் 

குதூகலம் குறையவில்லை!

மாதாந்திரமாய்த் துவங்கி

மாதம் இருமுறை எனவும், பின்பு மாதம் மும்மாறிப் பொழிந்து, அதன்பின் வார இதழாய் 

வடிவெடுத்து வாசல் வந்தவள்! இன்றோ,  அனுதினம் புத்துயிர் பெற்று இணைய வழி இதயம் கவருகிறாள்! 

எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து என் வீட்டில் தினசரி நாளிதழுடன்  ஆனந்த விகடனும் பல தசாப்தங்களாக வாங்கிக் கொண்டிருக்கிறோம். எங்களைப் பொருத்த மட்டில் எங்கள் பட்ஜெட்டில் அது ஒரு அத்தியாவசியப் பொருள்! 

'பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது' - புதன் கிழமையின் மகத்துவம் சொல்லும் பழமொழி இது.

எங்கள் கைகளில் பொன் கிடைத்தால் கூட இவ்வளவு மகிழ்ந்திருப்போமா தெரியாது! ஒவ்வொரு புதனும், அதற்கும் மேலான விகடன்  கிடைத்துவிடும்! 

புதன் வெளியானலும், பெரும்பாலும் வியாழன் அதிகாலை தான்‌ செய்தித்தாளுடன் எங்கள்‌ இல்லம் வந்து சேரும் விகடன். 

தினமும் அப்பா எழுந்ததும் முதல் வேலையாக வாசல் சென்று செய்தித்தாளை  எடுத்து வந்து விடுவார். வாரம் முழுக்க போர்வையை இழுத்துப் போர்த்தி உறங்குவேன் நான். ஸ்கூலுக்கோ, காலேஜிற்கோ என்னை அவ்வளவு நேரம் போராடி எழுப்புவார்கள். ஆனால், வியாழன் அன்று மட்டும் அலாரம் இல்லாமலே அப்பாவையே முந்தி விடுவேன். வாசலில் பல் தேய்க்காமல் கூட காத்திருந்த நாட்கள் உண்டு! 

கண்ணிற்கு முதலில் செய்தித்தாள் தான் தெரியும். எங்கே விகடனை டெலிவரி பாய்  மறந்து விடுவானோ எனப்  பதறி, "விகடன்...?" என்பேன்.‌ "உள்ள இருக்குக்கா...", என்று நக்கல் கலந்த சிரிப்போடு கொடுத்துவிட்டுப் போவான். 

பெரும்பாலும் தனியாக  ஸ்லிம்மாக, பளபளவென, வழுவழுவென வந்து சேருவாள். சில நேரங்களில், மேலே ஒரு பவுச்சுடன் பகட்டாக வருவாள்! ஷாம்புவோ, லோஷனோ சாம்பிள்‌ என... விகடனுடன் இணைந்த பெருமிதத்தில் அவையும் ஜொலிக்கும்!

"அப்பா, இந்தாங்க பேப்பர்", என்று 'எனக்கும் அதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை!', என்பது போல ஒப்படைத்துவிட்டு, விகடனை ஆனந்தமாய் முதலில் என் கைக்கு வந்தடைந்த பூரிப்போடு உட்காருவேன். 

இவ்விடத்தில் ஒன்று குறிப்பிட விரும்புகிறேன். பெரும்பாலும் விளம்பர உலகம் எதையுமே மிகைப்படுத்தி தான் தங்கள் தயாரிப்பை சந்தைப்படுத்தும். ஆனால், இதுவரை நான் பார்த்த விளம்பரங்களில் அவ்வளவு எதார்த்தமான, பெரும்பாலான வீடுகளில் நிகழும் ஒன்றை நேரடி ஒளிபரப்பு செய்தது போல் இருந்தது 90களில் தொலைக்காட்சிகளில் வந்த ஆனந்த விகடனின் விளம்பரம். உங்களுக்கு நினைவிருக்கிறதா அது? 

குடும்பமே விகடனுக்காக காத்திருக்கையில், அதன் இல்லத்தரசி சத்தமில்லாமல், கட்டிலுக்கு அடியில் மறைந்து, விகடனை கையில் வைத்துக்கொண்டு, ஸ்வாரசியமாக சிரித்து ரசித்த வண்ணம் படித்து மகிழ்ந்து கொண்டிருப்பாள்! 

குடும்பமே வலைவீசி அவளைக் கையும் களவுமாக...இல்லை, இல்லை...கையும் விகடனுமாக பிடித்து விடும்! எனக்கு மிகவும் பிடித்த விளம்பரம் அது. "ஐ குட் ரிலேட் டு தட்", ஃபீலிங் தான் எங்கள் இல்லத்தார்க்கும்!

கையில் கிடைத்ததும் ஏற்படும் அந்த விநோத உணர்வை நான் வார்த்தைகளில் விவரிக்க இயலுமா? முயல்கிறேன். 

மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, ஆவல், விறுவிறுப்பு, சிரிப்பு, பூரிப்பு, களிப்பு,  எதிர்பார்ப்பு... ம்ம்ம்... சற்று பொறுங்கள்.‌ தமிழ் அகராதியை அலசிவிட்டு வருகிறேன்! 

எந்த ஒரு தமிழ் வார இதழின் அட்டைப் படத்திற்கும் இவ்வளவு மவுசு இருந்திருக்குமா என்று தெரியவில்லை!

விகடனில் என்னை மிகவும் கவரும் அம்சங்கள், அட்டைப் படத்திலிருந்து துவங்குகிறது! ஒருமுறை என் புகைப்படத்திற்கு முகநூலில் என் மாமா போட்டிருந்த கமெண்ட், "ஆனந்த விகடன் அட்டைப் படத்திற்கு அனுப்பலாம்!". 'இதை விட ஒரு பாராட்டு இருக்க முடியுமா?', என்று அகம் குளிர்ந்தேன்!

ஆரம்ப காலங்களில் ஆனந்த விகடன் அட்டைப்படம் வரையப்பட்ட கார்ட்டூனோ, சித்திரமோ  இருக்கும் என பாட்டி சொல்லக் கேட்டிருக்கிறேன்.‌ அவைகளை மிகுந்த ஆர்வத்துடன் கூகுள் செய்து பார்த்திருக்கிறேன். அவ்வளவு உள்ளர்த்தம் பொதிந்த கற்பனை சித்திரங்கள். மிக அழகு! 

சொல்வனம்..!

அட்டைப் படத்தைவிட்டு கண் அகலாத நிலையில், "'சொல்வனம்' பகுதியில் என்ன வந்திருக்கும்?!", என மனம் பதைபதைத்து அப்பக்கம் செல்லும்.‌

சொல்வனத்தின் அழகிய ஓவியத்தில் மனம் லயித்துவிடும்.‌ "சரி, கவிதைகளையும் படித்துவிடலாம்", எனக் கண்கள் துவங்கினாலும், மனம் இப்போது வலைபாயுதேவை நோக்கி அலைபாய்ந்து கொண்டிருக்கும்! அதிலுள்ள இரண்டு மூன்று துணுக்குகளைப் படித்து...உரக்கச் சிரித்து...ரிப்பீட் மோடில் மீண்டும் மீண்டும் படித்து மகிழ்கையில்... அண்ணன் ஓடிவந்து என் கையிலிருந்து தட்டிப் பறித்து விடுவான்!  அவனைக் கத்திக்கொண்டே பின் துரத்தி, "அம்மா பாரும்மா, நான் தானே ஃபஸ்ட் எந்திருச்சு விகடனை வாங்கினேன். குடுக்க சொல்லும்மா", என அழுவேன்.‌ 

மீண்டும் என் கையில் விகடன் வந்ததும் வலைபாயுதேவில் இருந்த நான்...சிறுகதையின் பக்கம் தாவி விடுவேன். எதை முதலில் முழுதாய்ப் படிப்பது என மனம் தடுமாறும்...'கல்யாண சமையல் சாதம்' பாட்டில் வரும் ரங்கா ராவ் போல எல்லாமே சுவைத்தால்,   எதை முதலில் ருசிப்பது என்ற தடுமாற்றம்!!

ஜே. ஈ‌. ஈ., நீட், ஐ. ஏ. எஸ். தேர்வுகளில் தேசிய அளவில் கூட முதல் மதிப்பெண் வாங்கிவிடலாம். ஆனால், தமிழ் திரைப்படங்கள் விகடனில் மார்க்கை க்ரேக் செய்யும் வித்தையை என்று கற்பார்களோ, தெரியவில்லை! ஸ்டிரிக்ட் ஆஃபீசர்ஸ்! 

1991 ஆம் ஆண்டு தீபாவளி, என்னைப் போன்ற 90ஸ் கிட்ஸின் நினைவைவிட்டு நீங்காத தீபாவளி. தளபதி, குணா ரிலீஸ் ஆன அந்த நாள்! எங்கள் தெருவில் ரஜினி ரசிகர் குட்டிகள் கூட்டத்தில் நானும் ஓர் அங்கம்.‌ கமலுக்கென்று மற்றொரு கூட்டம்‌‌. படம் ரிலீஸ் ஆனதும் பெரும் போரே மூண்டுவிட்டது இரு குழுவினற்கிடையிலும்! அடிதடி அளவுக்கு சென்ற போது, இரு குழுவின் தலைவர்கள், முத்து அண்ணாவும், சாந்தி அக்காவும் எங்களை,  "ஆனந்த விகடன் மார்க் நாளைக்கு வந்துடும். அப்போ தெரிஞ்சிடும்...உண்மையிலேயே எந்த படம் சூப்பர்னு!", என்று நடக்கவிருந்த பெரும் போரை தவிர்த்தனர்.  இந்தியாவில் சூப்ரீம் கோர்ட் தீர்ப்பிற்கும் மேலானது விகடனின் தீர்ப்பு! 

எங்கள் வீட்டில் உள்ளவர்கள் சினிமா பார்ப்பதும், பார்க்காததும், விகடன் கையில் தான் இருந்தது! ஆம்...எந்த ஒரு பெரிய படமே வந்தாலும் சரி, விகடன் விமர்சனத்தைப் படித்துவிட்டு தான் என்  பெற்றோர், 'இந்தப் படத்திற்குப் போகலாமா, வேண்டாமா' என‌ முடிவு செய்வார்கள். எனக்கும்  என் அண்ணனுக்கும் இது தான் அப்போ மைண்ட் வாய்ஸ் ஆக இருந்தது..."ஆனந்த விகடன் ஐயா, கொஞ்சம் பாத்து செய்ங்க!".

தரமான விமர்சனப் பதிவு. ஒரு திரைப்படத்தை அவர்கள் பார்க்கும் கண்ணோட்டமே வேற லெவல்! 'விகடனால்  திரைபடங்களின் தரம் வெகுவாக உயர்ந்தது!' என்றே சொல்லலாம். ஐ. எஸ். ஐ. முத்திரை!

பள்ளிப் பாடப்புத்தகங்களில் நான்கு பக்க லெசனைப் படிக்க ஒரு வாரம் ஆகும் எங்களுக்கு. ஆனால், அது என்ன மாயமோ தெரியவில்லை...வியாழன் காலை வந்த புத்தகத்தில் 

கேலிச்சித்திரங்கள் முதல்,

கேள்வி-பதில்கள் வரை, ஜோக்குகள், தொடர்கதை, அட்டையைக் கூட அலசி விடுவோம் அன்று இரவிற்குள்! அந்த வார சிலபசை கம்ப்ளீட் செய்தால் தான் நிம்மதியான தூக்கமே வரும்!! 

தீபாவளி, புத்தாண்டு  வாரங்களில், சற்று பெருத்த வடிவில் வந்து சிலபஸை கவர் செய்ய முடியாமல் தடுமாற வைத்துவிடுவாள்!  

ஆனால் அதை முடிக்கும் நொடியே, 'அடுத்த வாரம் என்னவெல்லாம் வரும்...?',  என்று அசை‌போடத் துவங்கி விடுவோம்! இந்த ஒரு வார இடைவெளிக்குள், பள்ளிப் படிப்பை சற்று எட்டிப் பார்த்தால் தான் உண்டு! 

வெள்ளிக்கிழமைகளில் பரீட்சை வந்தால் போச்சு! அம்மா விகடனை ஒளித்து விடுவது வேறு கதை! 

இப்படி எங்களைப் போன்ற பல தமிழ்க்குடும்பங்களின் பாரம்பரியம், விகடனுடன் இணைந்திருப்பது!!

வாசிக்க...நேசிக்க...

சிந்திக்க...சிலாகிக்க...

நவீன விகட கவி

எங்கள் ஆனந்த விகடனடி! 

அலமேலு இராமநாதன்,

   கெருகம்பாக்கம்,

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

அது ஓர் அற்புத உணர்வு! - விகடனுடன் வளர்ந்த அனுபவத்தை பகிரும் வாசகர் | #நானும்விகடனும்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

சென்னையின் பரபரப்பை மிஸ் செய்கிறேன்! - திருவல்லிக்கேணி பெண்ணின் கவலை | #Chennaidays

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

எனக்கு எல்லாமே ‘இளையராஜா’ தான்! - தனிமை தீயை அணைத்த இசை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

விகடன் எனக்கு மட்டும் தெரிந்த காதலி! - நெகிழும் இளம் எழுத்தாளர் | #நானும்விகடனும்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

ஒருவர் கூறுவதை பொறுமையாக கேட்க முடியாமல் போனது ஏன்? - மறந்துபோன பண்புகள் - 3

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

சென்னையின் சூழலும் இங்குள்ள மக்களின் மனிதாபிமானமும்! - வாழ்வைக் காட்டிய ஊர் #ChennaiDays

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க