மரியம் டக்கா.. காஸாவில் கொல்லப்பட்ட அசோசியேட் பிரஸ் நிறுவன புகைப்பட செய்தியாளர்!
காங்கிரஸ்காரனாகதான் இறப்பேன்! ஆர்எஸ்எஸ் பாடலை பாடியதற்கு மன்னிப்புக் கோரினார் சிவக்குமார்!
கர்நாடக சட்டப்பேரவையில் ஆர்எஸ்எஸ் பாடலை பாடியதற்காக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரும் துணை முதல்வருமான டி.கே. சிவக்குமார் மன்னிப்புக் கோரியுள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த வாரம் பேசிக் கொண்டிருந்த டி.கே.சிவக்குமார், ’நமஸ்தே சதா வத்சலே’ எனத் தொடங்கும் ஆர்எஸ்எஸ் பாடலைப் பாடியது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆளும் பாஜகவின் சித்தாந்தத்தின் அடித்தளமாக இருக்கும் அமைப்பான ஆர்எஸ்எஸ்-ஐ காங்கிரஸ் கட்சி தொடர்ந்து எதிர்த்துவரும் நிலையில், கர்நாடக துணை முதல்வரின் இந்த செயல், காங்கிரஸ் கட்சியினரை மட்டுமல்லாமல் கூட்டணிக் கட்சியினர் உள்பட பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளர்களைச் சந்தித்து டி.கே. சிவக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
அப்போது அவர் பேசியதாவது:
“நான் பாஜகவினரை விமர்சிப்பதற்காகவே பாடினேன். ஆனால், என் நண்பர்கள் சிலர், அதனை அரசியல் ரீதியாக எடுத்துக் கொண்டு மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.
நான் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்த விரும்பவில்லை. யாராவது புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரிடமும் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.
காந்தி குடும்பத்தை யாரும் கேள்வி கேட்கும் நிலைக்கு தள்ளமாட்டேன். நான் காங்கிரஸ்காரனாக பிறந்தேன். ஒரு காங்கிரஸ்காரனாகவே இறப்பேன். கட்சிக்கு அப்பாற்பட்டு பல்வேறு அரசியல் கட்சிகளில் என்னை பின்தொடர்பவர்களும் நண்பர்களும் உள்ளனர். நான் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை.” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் பி.கே. ஹரிபிரசாத், “துணை முதல்வராக ஆர்.எஸ்.எஸ். பாடலை பாடுவதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றாலும், மாநில காங்கிரஸ் தலைவராக அவ்வாறு செய்தது பொருத்தமற்றது. இதற்காக கண்டிப்பாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.