தமிழகத்தில் மூளை தின்னும் அமீபா பரவல் இல்லை: மா. சுப்பிரமணியன்
நிலநடுக்கத்தால் கிழக்கு ஆப்கன் கிராமங்கள் தரைமட்டம்! உதவி கோரி மக்கள் கதறல்!!
காபூல்: ஞாயிற்றுக்கிழமை இரவு நேரிட்ட பயங்கர நிலநடுக்கத்தின் காரணமாக ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதி முழுவதும் இடிபாடுகளும், சேதமடைந்த கட்டடங்களுமாகக் காட்சியளிக்கின்றன.
கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி 800 பேர் பலியானதாகவும் 2500 பேர் காயமடைந்ததாகவும் தலிபான் அரசு தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு 11.47 மணியளவில் குணார் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் 6.0 என்ற அளவில் பதிவாகியிருந்தது. நங்கஹார் மாகாணத்தின் ஜலாலாபாத் நகரை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் மிகப் பயங்கர சேதம் ஏற்பட்டது. ஆனால், அதனைத் தொடர்ந்து நேரிட்ட நிலநடுக்கம் நிலையை மேலும் மோசமாக்கியது.
பெரும்பாலான வீடுகள் மண் மற்றும் செங்கல்லால் கட்டப்பட்டது என்பதால், இந்த நிலநடுக்கமே போதும் அவை நிலைகுலைய என்ற அளவில் பல கிராமங்கள் வெறும் மண் மேடுகளாகக் காட்சியளிக்கிறது.
இங்கே பல வீடுகளின் கட்டட இடிபாடுகளுக்குள் குழந்தைகளும் பெரியவர்களும் இளைஞர்களும் சிக்கிக் கொண்டிருப்பதாகவும், இறந்தவர்களின் உடல்களை எடுக்கக் கூட யாரும் உதவ வரவில்லை என்றும், தயவுகூர்ந்து எங்களுக்கு உதவ வாருங்கள் என்றும் உயிரை மட்டும் விட்டுவைத்த நிலநடுக்கத்தில் சிக்கித் தப்பியவர்கள் கண்ணீருடன் கோருகிறார்கள்.
கிழக்கு ஆப்கானிஸ்தான் என்பது, மலைப் பகுதியையொட்டிய கிராமப் பகுதி என்பதால் இங்கு தொலைத்தொடர்பு சேவைகளும் இல்லாததால் நிலைமை மிக மோசம் என்கிறார்கள்.
அங்கிருந்து வரும் விடியோக்கள், இடிபாடுகளுக்குள் இருந்து மக்கள் வெளியேற்றப்படுவதும் மருத்துவமனைகளுக்கு மக்கள் வந்து கொண்டிருப்பதும் பதிவாகியிருக்கிறது.
இடிபாடுகளுக்குள் சிக்கிய மக்கள் பல மணி நேரங்களுக்குப் பிறகே மீட்கப்பட்டுள்ளதாகவும், நிலநடுக்கத்தின்போது, ஒட்டுமொத்த மலையும் குலுங்கியதாக மக்கள் உணர்ந்ததாகக் கூறப்படுகிறது.