டிராகன் முன்பு சரணடைந்தது யானை: மோடியை விமர்சிக்கும் காங்கிரஸ்
போருக்குப் பிறகு காஸாவைக் கைப்பற்றுகிறதா அமெரிக்கா?
இஸ்ரேல் - காஸா போர் நிறுத்தத்திற்குப் பிறகு காஸாவைக் கைப்பற்றி சுற்றுலா நகரமாக மாற்ற அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2023 அக்டோபர் முதல் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போர் நடந்துகொண்டிருக்கிறது. அதன்படி, இஸ்ரேல் - காஸா இடையேயான போர் 2 ஆண்டுகளை நெருங்கியிருக்கிறது. காஸாவில் இந்த போரில் 60,000-க்கும் அதிகமானோர் தங்கள் உயிரை இழந்திருக்கின்றனர்.
இந்த போரின் இடையே காஸா மக்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட பொருள்களை ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகள் வழங்கி வந்த நிலையில் இஸ்ரேல் அதற்கு தடை விதித்ததால் அங்கு கடும் பஞ்சம் நிலவுகிறது.
ஐ.நா.வும் உலக நாடுகளும் இஸ்ரேலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உணவு மையங்களை நோக்கிச் செல்வோரையும் இஸ்ரேல் ராணுவம் சுட்டு வீழ்த்துகிறது.
உணவு கிடைக்காமல் குழந்தைகள் உள்பட பலரும் செத்துக்கொண்டிருக்கின்றனர். மேலும் காஸாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியும் வருகிறது.
நேற்று நள்ளிரவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் 70-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் போருக்குப் பிறகு காஸாவை முழுமையாக கைப்பற்ற அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஸாவில் உள்ள 20 லட்சம் மக்களை அவர்கள் எந்த நாட்டிற்கு அல்லது எந்த பகுதிக்கு செல்ல விரும்புகிறார்களோ அங்கு இடம்பெயரச் செய்துவிட்டு காஸாவை அமெரிக்க நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர முயற்சி நடப்பதாகக் கூறப்படுகிறது.
போரினால் பாதிக்கப்பட்ட காஸா நகரத்தை குறைந்தது 10 ஆண்டுகள் அமெரிக்கா நிர்வகிக்கும், காஸா மக்களை இடம்பெயரச் செய்து அந்த நகரத்தை ஒரு சுற்றுலாத் தலமாகவும் உற்பத்தி மையமாகவும் மாற்றவிருப்பதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காஸாவில் தங்கள் இடத்தை விட்டுக்கொடுக்க முன்வருபவர்களுக்கு அனைத்து வசதிகளுடன் சலுகைகளும் வழங்கப்படும்.
மேலும், காஸா மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்க அங்குள்ள தனியார் அறக்கட்டளை(Global Humanitarian Foundation)யை பயன்படுத்த உள்ளது. ஆனால், இந்த அறக்கட்டளைக்கு உதவி கேட்டுச் சென்றவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. குற்றம்சாட்டுகிறது.
காஸாவை கைப்பற்றும் திட்டம் பற்றி வெள்ளை மாளிகை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் தெரிவிக்கவில்லை.
ஆனால் கடந்த பிப்ரவரியில் டிரம்ப் பேசுகையில், "போரினால் பாதிக்கப்பட்ட காஸாவைக் கைப்பற்றி பாலஸ்தீன மக்களை வேறு இடங்களில் குடியமர்த்திய பின்னர் அதை மத்திய கிழக்கின் கடற்கரை நகரமாக மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்" என்று கூறியது குறிப்பிடத்தக்கது.