தமிழகத்தில் மூளை தின்னும் அமீபா பரவல் இல்லை: மா. சுப்பிரமணியன்
தமிழகத்தில் மூளை தின்னும் அமீபா பரவல் இல்லை என சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் இந்தவகை அமீபா பரவலால் பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசிய மா. சுப்பிரமணியன்,
''மாசுபட்ட நீர்நிலைகள் லட்சக்கணக்கில் கேரளத்தில் இருப்பதே அங்கு மூளையைத் தின்னும் அமீபா பரவலுக்குக் காரணமாக உள்ளது.
மாசுபட்ட நீர்நிலைகள், குளோரின் போடாத நீச்சல் குளங்களில் குளிப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும்.
அனைத்து மாவட்ட மருத்துவ அதிகாரிகளுக்கும் நீர்நிலைகளில் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
மூளையைத் தின்னும் அமீபா ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் தொற்று இல்லை. வதந்திகளை நம்ப வேண்டாம்.
தமிழகத்தில் மூளை தின்னும் அமீபா பரவல் இல்லை. இதனால், மக்கள் பதற்றம் கொள்ளத் தேவையில்லை'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா எனும் அமீபிக் மூளைக் காய்ச்சல் (primary amoebic meningoencephalitis) பாதிப்பு கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது. கேரளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்த தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.
எப்படி பரவுகிறது?
சுத்தம் இல்லாத ஆறு, ஏரி, குளம், குட்டைகளில் குளிக்கும்போது மூக்கின் வழியாக மட்டுமே உடலுக்குள் நுழைகிறது. நீச்சல் குளங்களிலும் இருக்கலாம்.
சுத்தமில்லாத தண்ணீர் கொண்டு முகத்தைக் கழுவும்போதுகூட மூக்கின் வழியாக நுழையலாம்.
நரம்புகள் வழியாக மூளைக்குள் நுழைந்து மூளையின் திசுக்களை அழித்து வீக்கத்தை ஏற்படுத்துகிறது.
காய்ச்சல், தலைவலி, வாந்தி, மூக்கிலிருந்து சளி வெளியேறுதல், கழுத்து இறுக்கம், குழப்பமான நிலை, வலிப்பு, மயக்கம் உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கும்.
சிகிச்சை மேற்கொள்ளாவிடில் உயிரிழப்புக்கு அதிக வாய்ப்புள்ளது. இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவாது.
இந்த அமீபா நன்னீரில் மட்டுமே உயிர் வாழ்கிறது, உப்புநீரில் இருப்பதில்லை. அசுத்தமான நீரை குடிக்கும்போது பரவாது. குளிக்கும்போது அதாவது மூக்கின் வழியாக மட்டுமே பரவுகிறது.
இதையும் படிக்க |மூளையைத் தின்னும் அமீபா: தமிழக சுகாதாரத்துறை முக்கிய உத்தரவு!