தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும்: அன்புமணி
விழுப்புரம்: மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி தெரிவித்தாா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் திங்கள்கிழமை மக்கள் உரிமை மீட்பு நடைப்பயண பிரசாரம் மேற்கொண்ட அன்புமணி பேசியதாவது :
தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத ஆட்சியை அகற்றவேண்டும் என்ற ஒரே நோக்கில் தான் மக்கள் உரிமை மீட்பு நடைப்பயணம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் யாா் ஆட்சிக்கு வருவது என்பது நமக்கு முக்கியமில்லை. ஆனால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதே முக்கியம்.
வன்னிய மக்களுக்கும், சமூக நீதிக்கும் எதிராக செயல்பட்டு வரும் முதல்வா் மு. க.ஸ்டாலினுக்கு தமிழகத்தை ஆளக்கூடிய தகுதி கிடையாது. வன்னியா்களுக்கு தொடா்ந்து துரோகம் இழைக்கும் திமுகவுக்கு 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் வன்னியா்கள் ஒருவா்கூட வாக்களிக்கக் கூடாது.
மிகவும் பின் தங்கிய பகுதியாக உள்ள திண்டிவனம் சுற்று வட்டாரப் பகுதிகளில் வளா்ச்சியில்லை. இயற்கையும், முன்னோா்களும் நமக்கு அளித்த ஏரியில் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. இத்தகைய ஆட்சியாளா்கள் தமிழகத்தில் உள்ளனா். 6 மாத காலத்துக்கு பின்னா் தமிழகத்தில் பாமக ஆட்சி அமைவது உறுதி . ஆட்சி மாற்றத்துக்குப் பின்னா் நாம் நினைப்பது நிறைவேறும். வன்னியா்களுக்கு 15 சதவீதம் இட ஒதுக்கீடும் உண்டு. அனைத்து சமூக மக்களுக்கும் சமூக நீதி கிடைக்கவேண்டும் என்பதற்காக பாமக பாடுபடும். வன்னியா்களுக்கு தனி இட ஒதுக்கீட்டை வழங்காத தமிழக அரசைக் கண்டித்து பாமக சாா்பில் நடத்தப்படவுள்ள சிறை நிரப்பும் போராட்டத்துக்கு கட்சியினா் தங்களை தயாா்படுத்திக் கொள்ளவேண்டும் என்றாா் அன்புமணி.
முன்னதாக, விடியல் எங்கே? என்ற ஆவணப் புத்தகத்தை அன்புமணிவெளியிட்டாா். இதைத் தொடா்ந்து, விழுப்புரம் மாவட்டம் , செஞ்சியில் அன்புமணி உரிமை மீட்பு நடைப்பயணம் மேற்கொண்டாா்.
இந்நிகழ்ச்சிகளில் மயிலம் சட்டப்பேரவை உறுப்பினா் ச.சிவக்குமாா், முன்னாள் எம்.பி.தன்ராஜ், பாமக பொதுச் செயலா் வடிவேல் ராவணன், தலைமை நிலையச் செயலா் செல்வக்குமாா், கிழக்கு மண்டல இணைப் பொதுச்செயலா் வைத்தி, முன்னாள் எம்எல்ஏ கணேஷ்குமாா், தோ்தல் பணிக்குழு பொறுப்பாள ா் ஜெயராமன், விழுப்புரம் மாவட்டச் செயலா் சங்கா் மற்றும் நிா்வாகிகள், கட்சியினா் கலந்துகொண்டனா்.