ஜம்மு நெடுஞ்சாலையில் சிக்கித்தவிக்கும் 1000-க்கும் மேற்பட்ட பழ லாரிகள்!
ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலை ஒரு வாரமாக மூடப்பட்டுள்ளதால், காஷ்மீர் பழ வியாபாரிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். கோடிக்கணக்கான ஆப்பிள் மற்றும் பேரிக்காய்களை ஏற்றிச்சென்ற 1000-க்கும் மேற்பட்ட லாரிகள் சிக்கித்தவிக்கின்றன.
ஜம்மு - காஷ்மீரில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அங்குள்ள முக்கிய நீராதாரமான செனாப் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழையால் ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
இதனால், காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் நெடுஞ்சாலை முற்றிலும் சேதமடைந்து, வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
முகல் சாலை திறந்து இருந்தாலும், அந்தச் சாலை வழியாக கனரக வாகனங்கள் செல்ல அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை. தற்போது, காஷ்மீரில் ஆப்பிள் மற்றும் பேரிக்காய் பருவக்காலம் நிலவும் சூழலில், சாலை மூடப்பட்டுள்ளதால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு லாரியும் ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் மதிப்பிலான பழங்களை ஏற்றிச் செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: முதல்வரின் ஜெர்மனி பயணம்: நயினார் நாகேந்திரனுக்கு டிஆர்பி ராஜா பதில்!