US: ``இந்தியா இங்கே நிறைய விற்கிறது; அமெரிக்காவால் இந்தியாவில் விற்க முடியவில்லை'' -ட்ரம்ப் காட்டம்
ரஷ்யாவுடனான எண்ணெய் வர்த்தக காரணமாக, இந்தியப் பொருள்கள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்த 50 சதவீத வரி சில நாள்களுக்கு முன்பு நடைமுறைக்கு வந்தது.
இவ்வாறிருக்கும் நிலையில், சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோருடன் இந்திய பிரதமர் மோடி சந்தித்தார்.
மூவரும் அமெரிக்காவின் வரிகளால் எழும் உலகளாவிய வர்த்தக மற்றும் புவிசார் அரசியல் சவால்களைப் பற்றி விவாதித்தனர்.

இந்த நிலையில், மோடியின் இத்தகைய சந்திப்பைத் தொடர்ந்து ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைத்தலைப்பக்கத்தில் இந்தியா குறித்து ஒரு கருத்தைப் பதிவிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில், "அவர்கள் (இந்தியா) எங்களிடம் மிகப்பெரிய அளவில் வர்த்தகம் செய்கிறார்கள். எங்களிடம் அதிகளவில் பொருள்களை விற்கிறார்கள்.
ஆனால், நாங்கள் அவர்களிடம் குறைந்த அளவிலேயே விற்கிறோம். இதுவரையிலும் ஒருதலைபட்சமான உறவே இது.

ஏனெனில், அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் பொருள்கள் விற்க முடியாத அளவுக்கு வரிகள் இருக்கின்றன. இது ஒற்றை சார்பு பேரழிவு.
அதேசமயம், எண்ணெய் மற்றும் ராணுவ பொருள்களை ரஷ்யாவிடம் அதிகம் வாங்குகிறார்கள். எங்களிடம் குறைவாகவே வாங்குகிறார்கள்.
தற்போது, அவர்கள் தங்களின் வரிகளைக் குறைக்க முன்வந்துள்ளனர். ஆனால், இது தாமதமாகிவிட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பே இதைச் செய்திருக்க வேண்டும்" என்று ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார்.