பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு: 5 தீவிரவாதிகள் பலி, 6 காவலர்கள் காயம்!
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் துணை ராணுவ நிலை மீது தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 6 காவலர்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வடக்கு வஜீரிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பன்னு மாவட்டத்தில் ஃபெடரல் கான்ஸ்டாபுலரி லைன்ஸ் (FC லைன்ஸ்) பிரதான வாயில் அருகே வெடிபொருள்கள் நிரப்பப்பட்ட காரை தற்கொலை படையினர் மோதியதாக மாவட்ட காவல்துறை அதிகாரி சலீம் அப்பாஸ் தெரிவித்தார்.
குண்டுவெடிப்புக்குப் பிறகு ஐந்து தீவிரவாதிகள் எஃப்சி லைன்ஸ் மீது தாக்குதல் நடத்தி அலுவலக கட்டடங்களைக் கைப்பற்றினர். பயங்கரவாதிகளில் ஒருவர் அங்குள்ள பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து நடந்த மோதல்களில், காவல்துறை, துணை ராணுவம் மற்றும் பிற பாதுகாப்புப் படையினரின் கூட்டு நடவடிக்கைகளில் மேலும் நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
துப்பாக்கிச் சண்டையின்போது, கண்டோன்மென்ட் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி (SHO) படுகாயமடைந்தார், மேலும் ஐந்து போலீஸார் காயமடைந்தனர்.
மாவட்ட தலைமையக மருத்துவமனையில் காயமடைந்தவர்களைத் துணை காவல் கண்காணிப்பாளர் (டிஐஜி) பன்னு சஜ்ஜாத் கான் பார்வையிட்டார்.
மாவட்ட காவல்துறை அதிகாரி சலீம் அப்பாஸ் கூறுகையில், பன்னுவில் எந்தவொரு பயங்கரவாதச் செயலையும் பொறுத்துக்கொள்ள முடியாது, பயங்கரவாதிகளை ஒருபோதும் முஸ்லிம்கள் என்று அழைக்கமுடியாது என்று அவர் தெரிவித்தார்.