திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, அங்கு பெரும் பரபரப்பு காணப்பட்டது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று காலை அணில் சுப்பிரமணியன் என்கிற பெயரிலிருந்து மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் பிற்பகல் 2 மணிக்குள் அது வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து காவல்துறை அதிகாரிகளுக்கும் வெடிகுண்டு நிபுணர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை அடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் கருவிகளுடன் சோதனை செய்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அனைத்து துறை அலுவலகத்திலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். வெடிகுண்டு சோதனையால் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகமே பரபரப்புடன் காணப்பட்டது.