Madharaasi: "எனக்கு சரியான சம்பளம் இல்லாதபோதும் என் மனைவி என்னை ஏற்றுக் கொண்டார்" - சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'மதராஸி' திரைப்படம் வருகிற செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகிறது.
படத்தின் ப்ரோமோஷனுக்காக முக்கிய நகரங்களுக்கு சிவகார்த்திகேயன் சுற்றி வருகிறார்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ருக்மிணி வசந்த் கதாநாயகியாகவும், வித்யுத் ஜம்வால் வில்லனாகவும் நடித்திருக்கிறார்கள்.
நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் சிவகார்த்திகேயனும் ருக்மிணி வசந்த்தும் கலந்து கொண்டு திரைப்படம் பற்றிய தகவல்களைப் பகிர்ந்திருக்கிறார்கள்.

அப்போது, சிவகார்த்திகேயன் பேசுகையில், "இந்த முறை என்னுடைய 'மதராஸி' திரைப்படத்திற்காக இங்கு வந்திருக்கிறேன்.
'மதராஸி' ஒரு சாலிட் மூவி. மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் மகேஷ் பாபு போன்ற நட்சத்திரங்களுடன் பணியாற்றிய இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸுடன் இணைந்ததில் பெருமைப்படுகிறேன். அனிருத் என் அன்பு நண்பர் மற்றும் ஹிட் மிஷின்.
பின்னணி இசை நன்றாக வந்திருக்கிறது. இது படத்தை உயர்த்தி, சூப்பர் ஹிட்டாக்க உதவும்.
இப்படத்தின் தயாரிப்பாளர் திருப்பதி பிரசாத் சார் எளிமையான மனிதர், ஆனால் அபாரமான பலமும் தொலைநோக்கு பார்வையும் கொண்டவர். 'ரெமோ', 'டாக்டர்', 'டான்', 'மகாவீருடு (மாவீரன்)', 'அமரன்' போன்ற படங்களில் நீங்கள் எனக்கு ஆதரவாக இருந்தீர்கள்.
மதராஸிக்கும் அதே அன்பை நீங்கள் காட்டுவீர்கள் என்று நம்புகிறேன்." என்றவர், "சினிமாவில் என்னுடைய இன்ஸ்பிரேஷன் ரஜினி சார். என்னுடைய மிமிக்ரி பயணங்களெல்லாம் என்னுடைய கல்லூரி கல்சுரல்ஸ் நாட்களில் தொடங்கியது.
என் நண்பர்களும் என்னுடைய மனைவி ஆர்த்தியும் என் மீது நம்பிக்கை கொண்டவர்கள்.

என்னுடைய நண்பர்கள்தான் கல்லூரி நாட்களில் 'நீ நன்றாக மிமிக்ரி செய்கிறாய்' எனத் தொடர்ந்து என்னை மேடையேறச் செய்தார்கள்.
என்னிடம் எதையும் எதிர்பார்க்காமல், எனக்குச் சரியான சம்பளம் இல்லாதபோதும் 'அவர் என்னைப் பார்த்துக் கொள்வார்' என என்னுடைய மனைவி என்னை ஏற்றுக் கொண்டார்.
என்னுடைய அப்பாவைப் போல ஒரு காவல் அதிகாரியாக வர வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன். 'அமரன்' திரைப்படம் என்னுடைய தந்தைக்கு ஒரு டிரிப்யூட்" எனப் பேசி முடித்தார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...