திருடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் மோடி; சில மாதங்களில் ஆட்சி கவிழும்! - கார்கே
பிரதமர் மோடி திருடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார், பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குகளைத் திருடி வெற்றி பெற பாஜக முயற்சி செய்கிறது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிகாரில் பேசியுள்ளார்.
பிகார் மாநிலம் பாட்னாவில் வாக்குரிமை பேரணியில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பின்னர் உரையாற்றினார்.
அவர் பேசியதாவது:
"சமத்துவம் பற்றி பேசிய பிகார் முதல்வர் நிதீஷ் குமார், இப்போது பாஜக - ஆர்எஸ்எஸ்ஸுடன் இணைந்திருக்கிறார். அவருக்கான அந்த சமத்துவ கொள்கை எங்கு போனது? ஏனெனில் பாஜகவின் மடியில் அவர் அமர்ந்திருக்கிறார். ஆர்எஸ்எஸ்-பாஜக இறுதியில் நிதீஷ் குமாரை தூக்கி எறியும்.
பிகாரில் வாக்குரிமை பேரணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதுமே இதைப்பற்றி பேசுகிறார்கள். அதை சீர்குலைக்க முயற்சிகள் நடந்தன. ஆனால் பிகார் மக்களும் எங்கள்(மகாகத்பந்தன்) கூட்டணியும் பின்வாங்கவில்லை.
பிரதமர் மோடி திருடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். வாக்குகளைத் திருடுகிறார், அடுத்து வங்கிகளை கொள்ளையடிப்பவர்களை பாதுகாப்பதன் மூலமாக பணத்தைத் திருடுகிறார்.
வாக்குத் திருட்டு மூலமாக பிகாரில் தேர்தலில் ஜெயித்துவிடலாம் என்று நினைக்கிறார். அதனால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் கவனமாக இல்லை எனில் மோடியும் அமித் ஷாவும் உங்களை அடக்கிவிடுவார்கள்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி இரட்டை என்ஜின் அரசு இன்னும் சில மாதங்களில் கவிழும். பதிலாக ஏழைகளின், பெண்களின், தலித்துகளின், பிற்படுத்தப்பட்டோரின் அரசு அமையும்" என்று பேசியுள்ளார்.
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.