தமிழகத்தில் மூளை தின்னும் அமீபா பரவல் இல்லை: மா. சுப்பிரமணியன்
மூளையைத் தின்னும் அமீபா: தமிழக சுகாதாரத்துறை முக்கிய உத்தரவு!
கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா பரவல் அதிகரித்துள்ளதையடுத்து தமிழகத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு தமிழக பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
நன்னீரில் உள்ள அமீபா தொற்றால் பரவும் மூளையைத் தின்னும் அமீபா(Naegleria fowleri) எனும் அரிய வகை பாதிப்பு கேரளத்தில் அதிகரித்துள்ளது. இந்த அமீபா மூக்கின் வழியாக சென்று மூளையில் கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
கேரளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்த பாதிப்பால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் இந்த பாதிப்பு ஏற்படாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தமிழக பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
மாநகராட்சி, நகராட்சியில் உள்ள குளங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள நீச்சல் குளங்கள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொள்ள மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குனர்களுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குனர் சோமசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.
நீச்சல் குளத்தில் உள்ள தண்ணீரை 2 நாள்களுக்கு ஒருமுறை வெளியேற்றிவிட்டு குளோரின் பவுடர் சேர்த்து சானிடைசர் செய்ய வேண்டும் என நீச்சல் குளம் மற்றும் நட்சத்திர ஹோட்டல் உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், மாசடைந்த நீர்நிலைகளுக்கு குழந்தைகளை அனுப்ப வேண்டாம், மாசடைந்த நீர்நிலைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்று பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னையில் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதனால் யாருக்கேனும் காய்ச்சல் தொடர்பான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனையை நாட வேண்டும் என்று அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.