எப்போதும் உங்களைக் காக்கும் சுதர்சன ஹோமம்: ஆண்டுக்கு ஒருமுறையாவது இதில் கலந்து க...
தமிழ்நாட்டில் பாஜக வாக்குத் திருட்டில் ஈடுபடலாம்: திருமாவளவன்
தமிழ்நாட்டில் பாஜக தேர்தல் முறைகேட்டில் ஈடுபடலாம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
பெரம்பலூரில் செய்தியாளர்களுடன் பேசிய அவர் கூறியதாவது:
"ஏற்கெனவே பல்வேறு மாநிலத் தேர்தல்களில் வாக்குத் திருட்டு நடைபெறுவதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எடுத்துரைத்து வருகிறார். தற்போது பிகாரில் வாக்குத் திருட்டுக்கு எதிராக அவர் மேற்கொண்டுள்ள பயணம் வெற்றி பெற வேண்டும். இந்த பயணத்தில் விசிக பங்கேற்கவிருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணத்தினால் பங்கேற்க முடியவில்லை.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டிலும் அப்படிப்பட்ட வாக்குத் திருட்டு முயற்சி நடைபெறலாம். பாஜக மற்றும் சங் பரிவார் அமைப்புகள் தேர்தல் முறைகேட்டில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே, தமிழ்நாட்டு மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
பெயர்களை நீக்குவது, சேர்ப்பது, அண்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்களை இங்குள்ள வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது என இந்திய அரசியல் வரலாற்றில் இல்லாத ஒரு அநீதியை பாஜக மேற்கொண்டு வருகிறது. ஏனெனில், தேர்தல் ஆணையம் முழுமையாக பாஜகவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
கடைசிவரை நாடாளுமன்றத்தில் பிகாரின் சிறப்பு வாக்காளர் திருத்தம் பற்றி அவர்கள் விவாதிக்கவில்லை. அதேபோல 30 நாள்கள் சிறையில் இருந்தால் பதவியை பறிக்கும் சட்டத் திருத்தம் பாசிசத்தின் உச்சம்" என்று பேசினார்.