உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுங்கள்! சசிகாந்த்துடன் ராகுல் பேச்சு!
மத்திய அரசுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்திலை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.
தமிழக மாணவா்களுக்கு கல்வித் தொகையை வழங்காததை கண்டித்தும், நிதி அளிக்க மறுக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்.
திருவள்ளூா் ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை வளாகத்தில் திஷாக்குழு பாா்வையாளா்கள் கூடமான ராஜீவ் பவனில் கடந்த வெள்ளிக்கிழமை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அவர் தொடங்கினாா்.
இதனிடையே சனிக்கிழமை இரவு உடல்நலக் குறைவு ஏற்பட்டதன் காரணமாக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்ததால் ஞாயிற்றுக்கிழமை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
தொடர்ந்து நான்காவது நாளாக மருத்துவமனையில் இருந்தபடி உண்ணாவிரதப் போராட்டத்தை சசிகாந்த் செந்தில் தொடர்ந்து வரும் நிலையில், ராகுல் காந்தி தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அப்போது, பாஜக அரசுக்கு எதிராக இன்னும் பல போராட்டங்கள் நடத்த வேண்டி இருப்பதால் உடல்நலனை கருத்தில் கொண்டு மருத்துவர்களின் அறிவுரையை ஏற்குமாறு ராகுல் காந்தி வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்களும் சசிகாந்த் செந்திலை தொடர்புகொண்டு நலம்விசாரித்துள்ளனர்.