கோவை: ரயில் கேட்பாரற்று கிடந்த 50 சவரன் நகைகள்; தம்பதிகளிடம் ஒப்படைத்த போலீஸ்; என்ன நடந்தது?
சென்னை ரயில் நிலையத்திலிருந்து, கோவை ரயில் நிலையத்துக்கு நேற்று முன்தினம் ஒரு ரயில் வந்துள்ளது. பயணிகள் அனைவரும் இறங்கிய பிறகு, ரயில்வே பாதுகாப்பு காவல்துறையினர் அந்த ரயில் பெட்டிகளுக்குள் வழக்கமான சோதனை நடத்தினார்கள்.

அப்போது முதலாம் குளிர்சாதனப் பெட்டியில், ஒரு கைப்பை இருந்துள்ளது. அதைத் திறந்து பார்த்தபோது செயின், நெக்லஸ், வளையல், கம்மல் உள்பட 50 சவரன் நகை இருந்துள்ளது.
மேலும் ரூ.11,000 ரொக்கம், ரூ.25,000 மதிப்பிலான செல்போன் ஆகியவையும் இருந்துள்ளது. ரயில்வே காவல்துறையினர் அதை மீட்டு வைத்திருந்தனர். அந்த செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது.

காவல்துறையினர் எடுத்துப் பேசியபோது எதிரில் பேசியவர், “என் பெயர் ரவிக்குமார். நான் மனைவியுடன் சென்னையில் இருந்து கோவை வந்தேன். அப்போது நகை, பணம், செல்போன் உள்ளிட்டவை வைத்திருந்த பையை மறந்து வைத்து வீட்டுக்கு வந்துவிட்டோம்” என்று கூறியுள்ளனர்.
பிறகு அவர்கள் காவல்துறையினர் அறிவுறுத்தல்படி கோவை ரயில் நிலையத்தில் உள்ள, ரயில்வே பாதுகாப்பு காவல்துறை அலுவலகத்திற்குச் சென்றுள்ளனர். அங்கு காவல்துறையினர் அவர்களின் பையைத் திறந்து காட்டியுள்ளனர். அதில் அனைத்து உடைமைகளும் சரியாக இருந்துள்ளன.

இதையடுத்து அவை ரவிக்குமார் மற்றும் அவர் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நகை, பணம் தொலைந்துவிட்டதோ என்று அதிர்ச்சியடைந்தவர்கள், அது மீண்டும் கிடைத்ததில் மகிழ்ச்சியடைந்தனர்.