காரைக்கால் நகரில் 50 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு
SIMS: மண்டையோடு மற்றும் உச்சந்தலை தோல் புற்றுக் கட்டி; வெற்றிகர சிகிச்சை அளித்த சிம்ஸ் மருத்துவமனை
தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றிய ஒரு இளம் நிபுணரை பாதித்திருந்த 'டெர்மடோஃபைப்ரோசர்கோமா புரோட்யூபரன்ஸ்' (DFSP) என்ற அரிதான மற்றும் தீவிரமான தோல் புற்றுநோய்க்கு சிம்ஸ் மருத்துவமனையின் பலதுறைகளை உள்ளடக்கிய மருத்துவர்கள் வெற்றிகரமாக சிகிச்சையளித்திருக்கிறது.
இந்த வகை புற்றுநோய், தசை மற்றும் எலும்பு உட்பட சுற்றியுள்ள திசுக்களுக்கு வேகமாகப் பரவக்கூடியது. இந்நோயாளிக்கு ஏற்பட்டிருந்த, புற்றுநோய் அவரது உச்சந்தலை மற்றும் மண்டையோட்டை கடுமையாகப் பாதித்து மோசமான நிலைமையை எட்டியிருந்தது.

தற்போது வழங்கப்பட்டிருக்கும் சிகிச்சையின் மூலம், ஆரோக்கியமான மற்றும் நிலையான திசுக்களால் முழுமையாக மூடப்பட்டுள்ளது. நோய் மீண்டும் வருவதை முன்கூட்டியே கண்டறிய, தொடர் மருத்துவப் பரிசோதனைகள், சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பு மற்றும் உச்சந்தலைக்கு சிறப்பான சுகாதார பராமரிப்பு ஆகியவை இந்நோயாளிக்கு தேவைப்படும்.
புற்றுக்கட்டி அகற்றப்பட்ட பிறகு, நோயாளியின் மண்டையோடு மறுசீரமைக்கப்பட்டது. அதன்பின்னர், தோல் ஒட்டுகள், திசு மடிப்பு, திசு விரிவாக்கம் பயன்படுத்தி உச்சந்தலை பல கட்டங்களாகச் சரிசெய்யப்பட்டது. இறுதிச் சீரமைப்பு சிகிச்சையானது, நோயாளியின் தொடையிலிருந்து எடுக்கப்பட்ட திசுவின் ஒரு பகுதியைப் பயன்படுத்தி செய்யப்பட்டது. இந்த செயல்முறையின் போது, நுரையீரலுக்குப் பரவியிருந்த புற்றுநோய் முடிச்சு ஒன்றும் அகற்றப்பட்டது.

டெர்மடோஃபைப்ரோசர்கோமா புரோட்யூபரன்ஸ் (DFSP) என்று அழைக்கப்படும் பாதிப்பு மிகவும் அரிதானது; பத்து லட்சம் பேரில் 1 முதல் 5 நபர்களை மட்டுமே இது பாதிக்கிறது. ஆரம்பத்தில் வலியற்ற தோல் கட்டி அல்லது தடிப்பாக இது தோன்றும், சிகிச்சையளிக்கப்படாமல் இது விடப்படுமானால், தோல், தசை மற்றும் எலும்புகளைப் பாதிக்கும் அபாயம் கணிசமாக அதிகரிக்கும். இந்த நோயாளி, இதற்கு முன்பு மூன்று அறுவை சிகிச்சைகள் செய்திருந்த போதிலும், 8 ஆண்டுகளுக்கும் மேலாக திரும்பத்திரும்ப ஏற்பட்ட இந்நோய் பாதிப்பு பிரச்சனையோடு கடும் போராட்டத்தை எதிர்கொண்டு வந்திருக்கிறார்.
இந்த நேர்வு குறித்து, மண்டைமுகத் தசை, அழகியல் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிறுவனத்தின் (ICAPS) முன்னாள் இயக்குநரும், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், “இது ஒரே கட்டத்தில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை அல்ல. உச்சந்தலை மற்றும் மண்டையோடு இரண்டையும் புற்றுக்கட்டி அரித்திருந்ததால், மூளைப் பாதுகாப்பு, மண்டையோடை சரிசெய்தல் முதல் தலைமுடி தாங்கும் உச்சந்தலை மறுசீரமைப்பு வரையிலான ஒவ்வொரு கட்டமும் மிகவும் சிக்கலானதாக இருந்தது. பாதுகாப்பான மற்றும் நீடித்த பலனை அடைவதற்கு, கவனமான திட்டமிடல், பலகட்ட செயல்முறைகள் மற்றும் துல்லியமான ஒருங்கிணைப்பு ஆகியவை முக்கியமாக இருந்தன,” என்றார்.
மண்டைமுகத் தசை, அழகியல் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மையத்தின் (ICAPS) சிறப்பு நிபுணர் டாக்டர் ஷ்யாம்நாத் கிருஷ்ண பாண்டியன் K. கூறியதாவது, “இந்த நோயாளிக்கான சிகிச்சை நேர்வில், கட்டியை முழுமையாக அகற்றுவதற்கும் பாதுகாப்பான மறுசீரமைப்பிற்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்துவதுதான் மிகப்பெரிய சவலாக இருந்தது. புற்றுநோய், மண்டையோடு போன்ற முக்கிய கட்டமைப்புகளில் ஊடுருவி, மூளைக்கு மிக அருகில் அபாயகரமான நிலையில் இருந்தது. இதன் காரணமாக, பலகட்ட மருத்துவ செயல்முறைகள், சிக்கலான மறுசீரமைப்பு சிகிச்சைகள் மற்றும் புற்றுநோய் மீண்டும் வராமல் தடுப்பது உட்பட ஒவ்வொரு படிநிலையும் அதிக ஆபத்து நிறைந்ததாக இருந்தது.”
வரலாற்று சிறப்புமிக்க இச்சாதனை குறித்து சிம்ஸ் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து கருத்து தெரிவிக்கையில், “இந்த மகத்தான சாதனை, எங்கள் மருத்துவமனையின் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியிருப்பதைக் குறிக்கிறது. மேலும், தரம் மற்றும் சிறந்த மருத்துவ சேவையில் புதுமையான உத்திகளை கையாள்வதில் எங்களுக்கு இருக்கும் தளராத அர்ப்பணிப்பையும், சிறப்பான திறனையும் இது வெளிப்படுத்துகிறது.
மண்டையோடு மற்றும் உச்சந்தலை மறுசீரமைப்பு செய்யப்பட்ட இந்த சிகிச்சை செயல்பாட்டை மேற்கொள்வதில் எமது மருத்துவக் குழுவினர் மிக நேர்த்தியான அறுவை சிகிச்சைத் திறனையும், மனஉறுதியையும் வெளிப்படுத்தியிருக்கின்றனர். நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சையை வழங்கும் எமது பணியாளர்கள் மற்றும் மருத்துவர்களைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன்,” என்றார்.