சென்னை: ஸ்ரீதேவி வாங்கிய சொத்தில் தகராறு - உயர் நீதிமன்றத்தை நாடிய போனி கபூர்!
மறைந்த நடிகை ஸ்ரீதேவி, ஈசிஆரில் 1988ம் ஆண்டு வாங்கிய அசையா சொத்துக்கு சட்டவிரோதமாக 3 பேர் உரிமை கோருவதாக, அவர்களின் 'மோசடி' வாரிசு சான்றிதழை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார் அவரது கணவர் தயாரிப்பாளர் போனி கபூர்.
இந்த விவகாரத்தில் 4 வாரங்களுக்குள் முடிவெடுக்க வேண்டுமென தாம்பரம் தாலுகா தாசில்தாரிடம் அறிவுறுத்தியிருக்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.

கடந்த ஏப்ரல் 22ம் தேதி, சட்டவிரோத சான்றிதழ்களை ரத்து செய்யக்கோரி போனி கபூர் மனு அளித்துள்ளார். அதன்மீது நடவடிக்கை எடுக்க செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அல்லது தாம்பரம் தாலுகா தாசில்தாருக்கு உத்தரவு வழங்குமாறு ரிட் மனு தாக்கல் செய்தார். ரிட் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, மேற்கண்ட உத்தரவை வழங்கியுள்ளார்.
வழக்கின் பின்னணி
போனி கபூரின் மனைவி ஸ்ரீதேவி ஏப்ரல் 19, 1988-ல் குறிப்பிட்ட சொத்தை வாங்கியுள்ளார். அன்று முதல் அவரும் அவரது குடும்பத்தினரும் அதை ஃபார்ம் ஹவுஸாக பயன்படுத்தி வந்துள்ளனர்.
அந்த சொத்து அதற்கு முன்னர் எம்.சி.சம்பந்தா முதலியார் என்பவருக்கு சொந்தமானதாக இருந்திருக்கிறது. அவருக்கு 3 மகன்கள் மற்றும் 2 மகள்கள். குடும்பத்தினர் அனைவரும் பிப்ரவரி 14, 1960 அன்று சொத்துப் பிரிப்பு தொடர்பாக ஒரு பரஸ்பர ஒப்பந்தத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஒப்பந்தம் அடிப்படையில் ஸ்ரீதேவி இந்த சொத்தை வாங்கி முறையாக விற்பனை பத்திரம் பதிவு செய்துள்ளார். திடீரென முதலியாரின் 2வது மனைவி மற்றும் 2 மகன் வழிப் பேரங்கள் என மூன்றுபேர் சொத்தில் தங்களுக்கு பங்கு இருப்பதாகக் கூறியுள்ளனர்.
உரிமை கோரும் மூவரின் சட்டப்பூர்வ உரிமையைக் கேள்வி எழுப்பியுள்ளார் போனி கபூர். குறிப்பாக 2வது மனைவி எனக் கூறப்படுபவர் பிப்ரவரி 5, 1975ல் திருமணம் நடந்ததாகக் கூறியுள்ளார். ஆனால் முதல் மனைவி 1999ம் ஆண்டுதான் இறந்ததால் அந்த திருமணம் சட்டப்பூர்வமானது அல்ல எனக் கூறியுள்ளார்.
மூவரும் "மோசடி" வாரிசுச் சான்றிதழின் அடிப்படையில் சொத்துக்கு உரிமை கோருவதற்காக, பல சிவில் வழக்குகளைத் தொடுத்து, வருவாய் அதிகாரிகளை அணுகி, பெரும் பிரச்னையை ஏற்படுத்தி வருவதாக புகார் அளித்த போனி கபூர், அவர்களின் சான்றிதழை விரைவில் ரத்து செய்யுமாறு அதிகாரிகளை கேட்டுகொண்டுள்ளார்.